சுபாஷிதம்: அடிப்படை வசதிகள்!

ஆன்மிகக் கட்டுரைகள் சுய முன்னேற்றம் லைஃப் ஸ்டைல்
subhashitam-1
subhashitam-1

சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

47.  அடிப்படை வசதிகள்.

செய்யுள்:

தத்ர மித்ர ந வஸ்தவ்யம் யத்ர நாஸ்தி சதுஷ்டயம் |
ருணதாதா ச வைத்யஸ்ச ஸ்ரோத்ரிய: சுஜலா நதீ ||

— ஹிதோபதேசம்

பொருள்:

ஓ நண்பா! கடன் கொடுப்பவர், மருத்துவர், புரோகிதர் (கற்றறிந்த ஆசிரியர்), நதி  இந்த நான்கு வசதிகளும் இல்லாத இடத்தில் வசிக்க வேண்டாம்.

விளக்கம்:

முன்பு நம் நாட்டில் கிராமங்கள் அனைத்தும் கிணறுகளோடும் குளங்களோடும் நீர் வளத்தோடும் விளங்கின. இப்போது கிராமங்களில் கூட தண்ணீர் தட்டுப்பாடு வந்துள்ளது. கிராமங்களில் இருந்த புரோகிதர்கள் ஆன்மீகத் தேவைகளோடு கூட கல்வியும் அளித்து வந்தார்கள். திண்ணைப் பள்ளிகளில் நூறு சதவீதம் மாணவர்கள் படித்து வந்ததாக வரலாறு கூறுகிறது. தற்போது கிராமங்களின் நிலைமை மாறிவிட்டது.

கிராமங்களிலிருந்து மக்கள் இடம் பெயர்ந்து நகரங்களுக்கு சென்று விடுகின்றனர். கிராமப்புற பணிகளை மக்கள்  விரும்பாததற்கு காரணம் என்ன? கிராமங்களில் இருக்க வேண்டிய அடிப்படை வசதிகள் என்ன?  இதற்கான பதில்கள் இந்த ஸ்லோகத்தில் உள்ளன. 

நிகழ்காலத்தை நோக்குங்கால் கிராமங்களின் நிலை பரிதாபமாக உள்ளது. இளைஞர்கள் நகரங்களுக்கும் வெளிநாட்டுக்கும் இடம் பெயர்கிறார்கள். முதியோர்களே அங்கு மீதி உள்ளார்கள். கிராமங்களில் பணிபுரிபவர்கள் கூட நகரங்களிலிருந்து வந்து செல்கிறார்கள். மருத்துவம், கல்வி போன்ற வசதிகள் இல்லாத இடத்தில் யார் தான் வசிப்பார்கள்?

சாலை வசதி, கல்வி, மருத்துவம், அவசரத் தேவைக்கு கடன் கொடுத்து உதவும் அமைப்பு,  பாதுகாப்பான குடிநீர் போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதில் அனைவரும் முயற்சிக்க வேண்டும். கிராமங்களில் கட்டாயமாக தேவைப்படும் வசதிகள் இவை. அப்போதுதான் நகரங்களுக்கு புலம் பெயர்வது குறையும். கிராமங்கள் மீண்டும் செழிக்கும். கிராமங்களை தத்து எடுத்துக் கொள்பவர்களுக்கு இந்த ஸ்லோகம் வழிகாட்டுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.