சென்னை: வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருவதால், அரசு ஊழியர்களுக்கான சம்பளப் பட்டுவாடா நடைபெறுவதில் தாமதம் ஏற்படும் என்று தெரிகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு, சம்பளம், ஓய்வூதியங்கள் வழக்கமாக மாத இறுதியான 30 அல்லது 31ஆம் தேதிகளில் அவரவர் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும். ஆனால் இந்த முறை மாத இறுதிநாளான 31ஆம் தேதி, வங்கிகளுக்கு தொடர் விடுமுறை காரணமாக, அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1ஆம் தேதிக்குப் பதிலாக ஏப்ரல் 6ஆம் தேதிதான் வரவு வைக்கப்படும் என்று கருவூலக் கணக்குத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் 31ம் தேதி நடப்பு நிதியாண்டு வங்கிக் கணக்குகளை முடிக்க வேண்டும். இதனால் அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களின் வரவு, செலவுக் கணக்கு விவரங்களை இறுதி செய்யும் பணியில் ஈடுபடும். ஏப்ரல் 1ஆம் தேதி அடுத்த நிதியாண்டு கணக்குகள் தொடங்கும். அன்று அனைத்து வங்கிகளுக்கும் வழக்கம்போல் விடுமுறை. இதை அடுத்து 2ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி, 3ஆம் தேதி புனித வெள்ளி அரசு விடுமுறைகள் தினம் என்பதாலும், தொடர்ந்து 4ம் தேதி சனிக்கிழமை வங்கிகள் அரைநாள் மட்டுமே செயல்படுவதாலும், 5ம் தேதி வழக்கமான ஞாயிற்றுகிழமை விடுமுறை என்பதாலும் ஏப்ரல் 6ஆம் தேதி திங்கட்கிழமைதான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் குடும்ப ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் சம்பளப் பணம் வங்கியில் செலுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
