அயர்லாந்துடனான ஆட்டம்: இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

இந்தியா

indianflag ஹாமில்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்று ஹாமில்டன் நகரில் நடைபெற்ற 34வது லீக் சுற்றுப் போட்டியில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதின. இதில், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில், அயர்லாந்து டாஸ் வென்று, பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதை அடுத்து களம் இறங்கிய அயர்லாந்து அணியின் துவக்க வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் விக்கெட்டுக்கு 89ரன்கள் சேர்த்தனர். அணியின் துவக்க வீரர் போட்டர்ஃபீல்ட் 67 ரன் எடுத்தார். ஸ்டிர்லிங் 42 ரன் எடுத்தார்.. ஜோஸ் 2 ரன்னில் ஆட்டம் இழந்தபோதும், ஓ பிரைன் நன்றாக விளையாடினார். 75 பந்துகளில் 75 ரன் எடுத்தார். அதில் 3 சிக்ஸர்கள் அடங்கும். பால்ப்ரின் 24 ரன் எடுத்தார். ஆனால் ஆட்டத்தின் திருப்புமுனையை அஸ்வின் ஏற்படுத்தினார். அவர் 2 முக்கிய விக்கெட் எடுத்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க அந்த அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 259 ரன் எடுத்தது. பின்னர் ஆடத் தொடங்கிய இந்திய அணியில், துவக்கம் மிகச் சிறப்பாக அமைந்தது. ரோஹித் சர்மா வழக்கமான பேட்டிங் செய்து 66 பந்தில் 3 சிக்ஸருடன் 64 ரன் எடுத்தார். ஷிகர் தவான் 85 பந்துகளில் 5 சிக்ஸருடன் 100 ரன் எடுத்து, இந்த உலகக் கோப்பையில் தனது இரண்டாவது சதத்தை எடுத்தார். விராட் கோலி ஆட்டமிழக்காமல் 44 ரன்களும், ரஹானே ஆட்டம் இழக்காமல் 33 ரன்களும் எடுத்து, 36.5 ஓவர்களிலேயே வெற்றிக்குத் தேவையான 260 ரன்களை எடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடர்ச்சியான வெற்றியைப் பதிவு செய்தது. கடந்த 5 போட்டிகளில் இந்திய அணி, எதிரணியை அனைத்து விக்கெட்களையும் வீழ்த்தி  வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.