india sa test - 2026

மூன்றாவது டெஸ்ட்… பரவாயில்லை ரகம்!

விளையாட்டு Featured உலகம்
india sa test - 2026

இந்தியா-தென் ஆப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட் – முதல்நாள்
– முனைவர் கு வை பாலசுப்பிரமணியன் –

இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டெஸ்ட் இன்று “கேப்டவுன்” நகரில் தொடங்கியது. விராட் கோலி காயத்திலிருந்து குணமடைந்துவிட்டதால் அவர் இன்று விளையாடுவார் என்பது எதிர்பார்க்கப்பட்டது. அவருக்குப் பதிலாக இந்திய அணியிலிருந்து நீக்கப்படுபவர் ஹனுமான் விஹாரியா? புஜாராவா? ரஹானேயா என நேற்றுவரை குழப்பம் நீடித்தது. விஹாரி விளையாடமாட்டார்; அனுபவ வீரர்களுக்கே முதல் வாய்ப்பு என கோலி கூறிவிட்டார். எனவே இன்று இந்திய அணியில் விஹாரிக்குப் பதிலாக விராட் கோலியும், காயமடைந்த சிராஜுக்குப் பதிலாக உமேஷ் யாதவும் சேர்க்கப்பட்டனர். தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம் எதுவும் இல்லை.

விராட் பூவாதலையா வென்று மட்டையாட முடிவுசெய்தார். ராகுலும் மயங்க் அகர்வாலும் நன்றாக விளையாடினர். தென் ஆப்பிரிக்க பவுலர்களும் நன்றாகப் பந்து வீசினர். அதிலும் குறிப்பாக ரபாடா மிக நன்றாக பந்து வீசினார். 12 ஓவர்கள் முடிவதற்குள் ராகுலும் அகர்வாலும் ஆட்டமிழந்தனர். பின்னர் புஜாராவும் கோலியும் கிட்டதட்ட 25 ஓவர்கள் விளையாடினர். கோலியை விட புஜாரா நன்றாக விளையாடினார். இருப்பினும் ஜேன்சனின் ஒரு பந்தை சரியாக கவனிக்காமல் ஆடி விக்கட்கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 43 ரன்னில் அவுட்டானார்.

அடுத்து வந்த ரஹானேயும் கிட்டத்தட்ட அதே வகையான பந்தில் அவுட்டானார். அது ரபாடா வீசிய பந்து. கோலி அதற்கு ரிவியூ கேட்டார். ஆனால் பந்து தெளிவாக மட்டையில் பட்டதை ரிவியூ காட்டியது. அதனால் ரஹானே அவுட்டானார். ரிஷப் பந்த் 50 பந்துகள் ஆடி 27 ரன் எடுத்தார். அதற்கு பின்னர் வந்தவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. எனவே இந்தியா 77.3 ஓவர்களில் 223 ரன் எடுத்து ஆட்டமிழந்தது.

விராட் கோலி எடுத்த 79 ரன்கள் மிகச் சிறப்பானவை. அவர் 13ஆவது ஓவரில் விளையாட வந்து 73ஆவது ஓவரில் அவுட்டானார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட நேரம் விளையாடுவதே முக்கியம். அந்த வகையில் இன்று விராட் கோலியும் ஓரளவிற்கு புஜாராவும் நன்றாக விளையாடினார்கள். மற்றவர்கள் சரியாக விளையாடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

தென் ஆப்பிரிக்க அணி பாக்கியிருந்த நேரத்தில் எட்டு ஓவர்கள் விளையாடினார்கள். பும்ரா 4 ஓவர், அந்த நான்கும் மெய்டன், அதில் ஒரு விக்கட்; அவுட்டானது எல்கர். சென்ற டெஸ்டில் அவர்தான் வெற்றிக் கனியை இந்தியாவிடமிருந்து பறித்தது. ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா ஒரு விக்கட் இழப்பிற்கு 17 ரன் எடுத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.