சிலை பாதுகாப்புக்கு அறநிலையத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை: ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல்

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

சென்னை:
ஆலயங்களின் தொன்மையான சிலைகள் பாதுகாப்புக்கு அறநிலையத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சிலைகள் பலவும் அழியும் நிலையில் இருப்பதாக ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் குற்றம் சாட்டியுள்ளார். உயர் நீதிமன்றத்தில் அவர் தெரிவித்த கருத்தால், நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையில் சிலைக் கடத்தல் சிறப்பு பிரிவை அமைத்து, சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் பணித்தது. உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன், சிலைகள் பாதுகாப்பு தொடர்பாக 21 வழிமுறைகளை வழங்கி யிருந்தார்.

இந்த வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிபதி மகாதேவன் முன்பு மீண்டும் வந்தது. மேலும், இந்து சமய அறநிலைய துறை சார்பில் தெரிவிக்கப் பட்ட விளக்கத்தில், உயர் நீதிமன்றம் அளித்த 21 வழிமுறைகளில், 5 வழிமுறைகளை நிறைவேற்றித் தர அறநிலையத்துறை தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், சிலைகளைப் பாதுகாக்க அறநிலையத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.. இதனால் பல சிலைகள் அழியும் நிலையில் இருப்பதாக ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஐ.ஜி.யின் கருத்தின்போது குறுக்கிட்ட நீதிபதி மகாதேவன், 50 ஆண்டுகள் பழமையான சிலைகளை இருட்டு அறையில் வைப்பதற்கு இந்து சமய அறநிலையத் துறை எதற்கு என்று கேள்வி எழுப்பினார். மேலும் தான் நேரில் சென்று பார்த்த 1,700 கோவில்களிலும் இதே நிலைதான் இருப்பதாக நீதிபதி மகாதேவன் வேதனை தெரிவித்தார்.

பின்னர், உயர் நீதிமன்றம் பிறப்பித்த 21 வழிமுறைகளையும் நிறைவேற்றுவது குறித்து, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், ஐஜி பொன் மாணிக்கவேல், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆகியோர் கலந்தாலோசித்து 23 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி மகாதேவன், இந்த வழக்கை ஒத்திவைத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.