hindumunnani

அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

அரசியல் சற்றுமுன் நெல்லை
hindumunnani
hindumunnani

நெல்லை மாவட்டம் திசையன்விளை சமேரியா தூய யோவான் அரசு உதவி பெறும் பள்ளியில் அரசு உத்தரவை மீறி ஜெபக்கூட்டம் நடத்துவதை கண்டித்து போராட்டம் நடத்திய 20 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் நேற்று இரவு முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களில் இட்டமொழிப்புதூர் இந்துமுன்னணி கிளை தலைவர் முருகன் என்பவர் இன்று காலை மயங்கி விழுந்த நிலையில் திசையன்விளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போராட்டம் தொடரும் நிலையில், தமிழக அரசின் உத்தரவை மதிக்காத கிறித்துவ மிஷனரியைக் கண்டித்தும், திசையன்விளை கிறிஸ்தவ பள்ளி வளாகத்தில் அத்துமீறி ஜெபக்கூட்டம் நடத்துவதையும், சட்டப்படி போராடியவர்களைக் கைது செய்ததையும் இந்து முன்னணி வன்மையாக கண்டிப்பதாக, அதன் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்ரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உள்ள அரசு உதவி பெறும் சமாரியா தூய யோவான் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் ஜெபக் கூட்டம் நடைபெறுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

பள்ளிக்கூடங்களில் எந்தவிதமான மத சம்பந்தமான நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது என கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதையும் மீறி பள்ளி வளாகத்தில் நடைபெறும் இந்த கிறிஸ்துவ நிகழ்ச்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என காவல்துறை பள்ளி தாளாளர் மற்றும் வட்டாட்சியரிடம் பொதுமக்களோடு இணைந்து இந்து முன்னணி புகார் அளித்தது.

வெள்ளிக்கிழமை பள்ளியை சுற்றியுள்ள அனைத்து வீதிகளிலும் ஒலிபெருக்கி கட்டப்பட்டு ஜெபக்கூட்டம் துவங்கியது. முறையான புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் இந்து முன்னணியினர் காவல்துறையிடம் கேட்டபோது அந்தப் பள்ளி நிர்வாகத்தினர் அரசாணை வெளியிடப்படுவதற்கு முன்பாகவே நிகழ்ச்சி திட்டமிட்டு விட்டார்கள். எனவே வெள்ளிக்கிழமை மட்டும் இந்த நிகழ்ச்சி நடைபெறும் மற்ற இரண்டு நாட்களும் ரத்து செய்யப்படும் என பேச்சு வார்த்தை நடத்தினர்.

ஆனால் சனிக்கிழமையான நேற்றும் அந்த ஜெபக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தப் பள்ளியின் கிறிஸ்தவ நிர்வாகிகள் இந்த பள்ளி எங்களது சொந்த கட்டிடம் நாங்கள் கண்டிப்பாக நிகழ்ச்சி நடத்துவோம் எந்த அரசாணைக்கும் கட்டுப்பட மாட்டோம் என்று திமிராக பேசியுள்ளனர்.

நேற்று இந்து முன்னணி கோட்டத் தலைவர் தங்கமனோகர் தலைமையில் 25க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் சம்பவ இடத்திற்கு சென்று நிகழ்ச்சியை தடுத்து நிறுத்த கோரிக்கை வைத்த போது காவல்துறையினர் இந்து முன்னணியினரை கைது செய்துள்ளனர். அரசாணைக்கு மதிப்பளிக்காமல் சட்டத்தை மீறி ஜெபக்கூட்டம் நடத்தும் கிறிஸ்தவர்களை கைது செய்யாமல் சட்டப்படி போராடிய இந்து முன்னணியினரை கைது செய்தது ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாகும். காவல்துறை கிறிஸ்தவர்களின் முகவர்களாக செயல்படுகிறதா? என்று சந்தேகம் எழுகிறது.

தொடர்ந்து தமிழகத்தின் கிறிஸ்துவ பள்ளிகளில் அனுமதி இல்லாத ஜெபக்கூட்டங்கள், பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது. கிறிஸ்தவ பள்ளிகளில் படிக்கும் இந்து மாணவ மாணவியர்கள் பொட்டு வைக்க கூட அனுமதிக்கப்படாமல் பல பள்ளிகள் செயல்படுகின்றன.இது போன்ற சம்பவங்களை பொதுமக்கள் தட்டி கேட்கும் பொழுது அவர்கள் மிரட்டப்பட்ட சம்பவமும் பல பள்ளிக்கூடங்களில் நடைபெற்றன.

பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டி வரக்கூடாது என்று மாணவர்களுக்கு தடை விதிக்கும் தமிழக அரசு கிறிஸ்தவ பள்ளிகளில் நடைபெறும் இது போன்ற சட்டவிரோதமான ஜெபம் நடக்கும் நிகழ்ச்சிகளை அனுமதிக்க கூடாது.

தமிழக அரசாணையை மதிக்காத ஆனால் அரசின் உதவியோடு நடக்கும் திசையன்விளை தூய யோவான் சவேரியார் பள்ளி நிர்வாகத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சட்டரீதியாக போராடிய இந்து முன்னணியினரை
கைது செய்த காவல்துறையினர் மீதும் தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.