pasumpon muthuramalinga thevar - 2026

இந்த நான்கை ஒழிக்காமல் நாடு முன்னேறாது; பசும்பொன் தேவர் சொன்ன அறிவுரை!

அரசியல் கட்டுரைகள் லைஃப் ஸ்டைல்
pasumpon muthuramalinga thevar - 2026

“அன்பர்களே,  ஓயாது ஓடிக்கொண்டிருந்த எம்மை பொய்யான குற்றசாட்டில் சிறையில் அடைத்து இந்த காங்கிரஸ் சர்க்கார் முடக்கியதில் இந்த உடலுக்கென சில உபாதைகள் வந்துவிட்டன, அவற்றை எம் கர்மம் என ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.

நாம் நிரபராதி என்பதை நீதிமன்றம் சொல்லிவிட்டது, இதை முன்பே சொல்லும் விதமாகத்தான் அந்த சம்பவத்திலே நாம் மோப்பநாய் விசாரணை கோரினோம், எல்லா வழக்குகளிலும் மோப்பநாயினை பயன்படுத்தும் காவல் பீடங்கள் எம். வழக்கில் அதைச் செய்யாமல் அரசாங்க ஆட்களைக் கொண்டே விசாரித்தார்கள்.

காரணம் அந்த மிருகம் அரசியலுக்கு அப்பாற்பட்டது, அது அழைக்கப் பட்டிருந்தால் சரியான இடத்துக்குச் சென்றிருக்கும் என்பதால் இவர்கள் அனுப்பப்பட்டும் குற்றம் எம்மை நோக்கிப் பாய்ந்தது, அதனை முருகப் பெருமான் அருளால் கடந்துவிட்டோம்.

வகுப்புவாதம் வேண்டாம் என்பவர்களே சாதி பிரச்சினைகளை வளர்க்கின்றார்கள், சமத்துவம் என்பவர்களே அதிகாரத்தை எடுத்துக் கொள்கின்றார்கள், நாட்டுப்பற்று என்பவர்களே அரச பதவிகளைக் கட்சி அலுவலகம் ஆக்குகின்றார்கள், கட்சிப் பணிக்கு நிதி சேகரிப்பதே ஆட்சி என நம்புகின்றார்கள்.

இதற்காகவா சுதந்திரம் வாங்கினோம் என்றால் எம்மை முடக்குகின்றார்கள், நம் குரல் பாராளுமன்றத்தில் கேட்கக் கூடாது என்பதற்காகவே ஹரிஜனங்கள் வாக்கினை எம்மிடம் இருந்து பிரிக்க எம்மை கொலையாளி என்றார்கள்.

எல்லோரும் சொல்வது போல் காமராஜருக்கும் எனக்கும் தனிபட்ட விரோதம் ஏதுமில்லை, அவர் சொந்த மக்களால் சொந்த சாதியாலே புறக்கணிக்கப்பட்ட 1937ல் நாமே தேசாபிமானி ஒருவன் அடையாளம் பெற வேண்டும் என எண்ணி அவர் தேர்தலில் நிற்க வழிசெய்தோம்.

அப்போது சொத்துவரி இதர சான்றுவரி இல்லாதவன் போட்டியிட முடியாது, இவர் பெயரில் அந்த வீட்டைக் கொடுக்கவும் அவர் அம்மையார் சம்ம்மதிக்கவில்லை. இதனால் ஆட்டுக்கிடா ஒன்றை வாங்கி அதை இவர் பெயரில் ரசீது போட்டு அவரை நிறுத்தி முதல் வெற்றியினை நாமே பெற்றுக் கொடுத்தோம்.

அவரின் அரசியலுக்கு நாமும் நம்மைப் போலவே ராமநாதபுரம் அரசர் போன்றவர்களும் பாடுபட்டோம்,  அப்படித்தான் அவரை நாட்டுக்காய் வளர்த்தெடுத்தோம், பின்னாளில் காங்கிரசுக்கே உரிய சில குணங்கள் அவருக்கு வந்துவிட்டதை எண்ணி வருந்துகின்றோம்.

இப்போதும் நாம் தேசத்தைப் பற்றியே கவலைப்படுகின்றோம், நாம் கேட்பதெல்லாம் என்ன?

நேபாளத்துடன் பல விவகாரங்களில் இந்த காங்கிரஸ் சர்க்கார் முரண்படுகின்றது, இது கிருஷ்ணமேனன் என்பவரின் அகம்பாவ நடவடிக்கையாகும் , ஆங்கில மோகத்தில் சிக்கியவரும் பிரிட்டிஷாரின் நெருங்கிய அடிவருடியுமான அவரை பாதுகாப்பு அமைச்சராக்கியது தவறு.

இவரின் முட்டாள்தனத்தால் நேபாளமும் சீனாவும் கைகோக்கின்றன, இந்த அரசு நம்மிடம் சொல்வது ஒன்று; செய்வது ஒன்றாக உள்ளது, நாளை தேசத்துக்கு நேபாள – சீன எல்லையில் பெரும் ஆபத்து ஏற்படலாம் என நாம் எச்சரித்தால் எம்மை முடக்குவதிலே இவர்கள் ஏன் கடுமை காட்டுகின்றார்கள் என்பது தெரியவில்லை.

காங்கிரஸின் ஊழலும் மேட்டிமைத்தனமும் மக்களிடம் பெரும் கோபத்தைத் தூண்டுகின்றன, இது நாத்திகவாத கும்பல்களுக்கே சாதகம், நாம் இந்த மண்ணும் மதமும் மக்களும் எல்லாம் பெற்றுவாழப் போராடியவர்கள், போராடுபவர்கள்!

அதனை லஞ்சம், வஞ்சகம், அதிகார அத்துமீறல், சாதிய துரோகமெல்லாம் செய்து சரிக்கப் பார்க்கின்றார்கள்.

புதிதாக நிலமில்லா எல்லோருக்கும் நிலம் என்றார்கள், இது கேட்பதற்கு இனிமையானது. ஆனால் நடைமுறையில் சரிவராதது, இருப்பவனிடம் இருந்து இல்லாதவனுக்குப் பிடுங்கிக் கொடுப்பது அல்ல வளர்ச்சி, அது இருப்பவனைப் பிச்சைக்காரனாக்கும் சதித்திட்டம்!

இந்த திட்டம் நடைமுறைக்கு ஒத்துவராது எனச் சொல்லி இப்போது கூட்டுறவு அமைப்பு என ஒன்றைத் தொடங்குகின்றார்கள், இது விவசாயிகளை சொந்த நிலத்திலே அடிமையாக்கும், அவன் கரங்கள் கட்டப்படும், அவன் ஒருநாள் என் பொருளுக்கு விலை இல்லையே, என் உழைப்பு வீணானதே எனக் கதறவைக்கும்!

இந்த அரசின் விவசாயக் கொள்கைகளெல்லாம் இங்குள்ள விவசாயிகளை உயிரோடு கொல்லும் வகையில் உருவாக்கப் பட்டிருக்கின்றது, இந்த ஆபத்து பின்னர் தெரிய வரும்போது இன்று வாழ்வாங்கு வாழும் விவசாயி அன்று வாழ வழியின்றி முடக்கப்பட்டிருப்பான். ஒருநாள் இதுநடந்தே தீரும்!

எம்மை சாதிவெறியன் என காங்கிரசார் குற்றம் சாட்டுகின்றார்கள், அவர்களின் களங்கத்தை சுட்டிக் காட்டினால் என் மேலும் களங்கம் சுமத்திவிட்டால் சரிக்குச் சரியாகிவிடும் என நினைக்கின்றார்களே தவிர அவர்கள் களங்கத்தைக் களையும் எண்ணமே இல்லை!

எல்லா சாதியும் எமக்கு முக்கியம், எம் மக்களில் நாஸ்திகர் கூட உண்டு, ஹரிஜனங்களை முன்னேற்றுவதில் எம்மைப் போல் பற்றுக் கொண்டோர் யாருமில்லை. ஆனால் நாயுடு பெண்களைச் சீண்டுவதும், நாடார் பெண்கள், மறவர் பெண்களிடம் தகாத முறையில் நடபப்துமே புரட்சி என்றால், அதை யார் ஏற்றுக் கொள்ள முடியும்?

காங்கிரசாரின் ஆட்சி, பிரிட்டிஷ் நயவஞ்சகத்தில் இருந்து உருவானது, அது நாம் பள்ளிப் பாடத்திலே படித்த குதிரை வண்டிக்காரன் கதைக்குச் சமமானது.

நான்கு குதிரைகள் பூட்டப் பட்ட வண்டியில் இருவர் காட்டுவழி சென்றார்கள், அங்கே செந்நாய்க் கூட்டம் அவர்களைச் சூழ்ந்தது, அவைகளுக்கே அக்காடு சொந்தம், அவை வளைத்துவிட்டால் சிம்மமும் தப்ப முடியாது என்பதால் வண்டிக்காரன் அஞ்சினான்.

வேகமாக ஓடினாலும் அவை ஓடிவரும், நின்றாலும் சுற்றிக்கொள்ளும் எனும் வகையில், இனி சாவு நிச்சயம் எனும்போது, அந்த வண்டிக்காரன் மவுண்பேட்டன் போல் தந்திரம் செய்தான்.

முதலில் ஒரு குதிரையினை அவிழ்த்து விடுவேன், செந்நாய்கள் அதனை உண்ணும் முன் மூன்று  குதிரைகளோடு ஓடுவேன், பின்னர் அவை நெருங்கும் போது மூன்றாம் குதிரையினை விடுவேன், பின் ஓடுவேன். அவை மீண்டும் நெருங்கும்போது, இரண்டாம் குதிரையினை விடுவேன். கடைசியில் ஒரு குதிரையோடு நாம் தப்பலாம் எனச் சொல்லி முதல் குதிரையினைக் கழற்றிவிட்டான்.

ஆம், அந்த வண்டிதான் இந்தியாவிலே சிக்கிக் கொண்ட பிரிட்டிஷ் ஆட்சி, கம்பெனியார் இனி ஆளமுடியாது என தோற்ற நிலையில், இங்கு சிக்கிய பிரிட்டன் அரசுதான் அந்த வண்டிக்காரன்.

அவன் இந்திய எதிர்ப்பைக் கண்டு அவிழ்த்த முதல் குதிரை, இந்திய அரசர்களுக்கு அங்கீகாரம், இந்திய மக்களுக்கு சில உரிமை எனச் சொல்லி காலங்களைக் கடத்தினான். ஆனாலும் தேசம் எதிர்த்தது.

அவன் தன் இரண்டாம் குதிரையாக காங்கிரஸை உருவாக்கிவிட்டான். அது இந்தியரின் போர்க் குணத்தை முடக்கி, அவனுக்குக் காவல் இருந்தது, ஆனாலும் தேசம் எழுந்தது.

அவன் தன் மூன்றாம் குதிரையாக கல்வி, இட ஒதுக்கீடு, மாகாண சிக்கல் என பலவற்றை உருவாக்கினான், இன்னும் மாகாணத் தேர்தல் பஞ்சாயத்து ஆட்சி என நகர்த்தினான். ஆனாலும் அவன் தந்திரம் எடுபடவில்லை.

1857ல் எந்த சீக்கியரை அன்றைய சிப்பாய்க் கலகத்தில் இஸ்லாமிய சுல்தான்களைக் காட்டி விலக்கி வைத்தானோ, அவர்களையே தன் முதல் உலக யுத்தத்துக்குப் பயன்படுத்தி, பின் அவர்கள் உரிமை கேட்டபோது ஜாலியன் வாலாபாக்கில் சுட்டுப்போட்டான்.

தாங்கம் மிக ஏமாற்றமடைந்ததை சீக்கியர் உணர்ந்து கொந்தளித்து அது நாடெல்லாம் பெரிய குழப்பங்களைச் செய்தபோது, தன் இரண்டாம் குதிரையினை உற்றுப் பார்த்தான்.

அந்தக் குதிரைதான் காந்தி. அவர் அப்போது சத்தியாகிரகம் செய்வதை காங்கிரசே கண்டித்தது. அதனால் காந்தி சொன்னார், “இனி காங்கிரசுக்காக நான் சத்தியாகிரகம் செய்யமாட்டேன், ஆனால் தனிப்பட்ட என் போராட்டத்தை உங்களால் தடுக்க முடியாது.”

இப்படி அவர் குழப்பி அடித்தது பிரிட்ஷ்காரனுக்கு உற்சாகமானது. அதே நேரம் அவன் வசமாக உலக அரங்கில் சிக்கினான். 

குட்டி நாடான அயர்லாந்து அவனை மிரட்டியது, ராமநாதபுர சமஸ்தான அளவினை விட சற்று பெரிய ஜெர்மனி, அவனை மிரட்டியது. இந்திய மாகாணங்களில் ஒரு அளவு கூட வராத ஜப்பான், அவனைப் பந்தாடத் துவங்கிற்று.

மிகச் சிறிய நாடுகளெல்லாம் பிரிட்டிஷ்காரனை எதிர்த்த போதுதான், ஏன் நம்மால் முடியாது என சிங்கம் நேதாஜி கிளம்பினார், அப்போதுதான் நான்காம் குதிரையினை அவன் இறக்கினான். அதன் பெயர் ஜின்னா.

இப்படி இங்கே சிக்கிக் கொண்ட பிரிட்டிஷ்காரன், அழகாகத் தப்பிச் சென்று விட்டான். அவன் குதிரைகளை மட்டும் விட்டுச் சென்றுவிட்டான். அந்த நான்கு குதிரையோட்டிகள் கும்பலாலே, இந்நாடு எல்லாச் சிக்கலையும் சந்திக்கின்றது.

அன்பர்களே காங்கிரஸ், சீர்த்திருத்தக் கும்பல்கள், பகுத்தறிவு சீர்த்திருத்தம் என கத்தும் அந்நிய அடிவருடிகளான சாதி ஒழிப்பு பேசும் வகுப்புவாத கும்பல்கள், பாகிஸ்தான் என இவை நான்கும்  எக்காலமும் இந்நாட்டை வாழவிடாது. இவர்களை முழுக்க ஒழிக்காமல் இத்தேசம் முன்னேற முடியாது.

இவற்றையெல்லாம் அடியோடு பிடுங்கி எறிந்து இந்நாட்டை அதன் மகோன்னத மரபில் மீட்டெடுக்கத்தான் நாம் போராடுகின்றோம், அது நம்காலத்தில் முடியுமானால் மகிழ்ச்சி! இல்லை, இந்தக் கேடுகெட்ட காலம் எவ்வளவு காலம் நீட்டிக்க வேண்டும் என பகவான் விரும்புகின்றாரோ அதுவரை அது நீளட்டும். ஆனால் ஒருநாள் எல்லாம் முழுக்க மாறும். நம் தேசம் உலகில் சூரியனைப் போல் மின்னும். அன்று இந்த நான்கு குதிரை கும்பல்களும் இராது”

(கொலைக்குற்றம் சாட்டப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட தேவர் பெருமான், 1960களில் சீனப் போருக்கு முன்பு பேசிய வார்த்தைகள் இவை…)

Posts by செந்தமிழன் சீராமன்: