
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அறுவடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சூரசம்கார விழா வெகு விமர்சையாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கந்தா சரணம் கோஷம் எழுப்பி சூரசம்ஹார நிகழ்வு கண்டுகளித்தனர்.
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பகலில் மூலவருக்கு உச்சிக் கால தீபாராதனையும், யாக சாலையில் சுவாமிக்கு மகா தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர் யாக சாலையில் இருந்து எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடன், மேளவாத்தியங்களுடன் சண்முக விலாசம் சேர்ந்தார். அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பிற்பகல் 2 மணியளவில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அங்காரம் நடைபெற்றது.
தொடர்ந்து மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்வதற்காக போர்க்கோலம் பூண்டு சஷ்டி மண்டபத்தில் இருந்து கடற்கரைக்கு புறப்படும் நிகழ்வு நடந்தது.
முன்னதாக சிவன் கோயிலிருந்து சூரபத்மன் எழுந்தருளி உள்மாட வீதி, ரதவீதிகள் சுற்றி கோயில் கடற்கரைக்கு படை பரிவாரங்களுடன் வந்து சேர்ந்தார். தொடர்ந்து சூரசம்ஹாரம் தொடங்கியது. முதலில், கஜ முகத்துடன் வந்த சூரபத்மன், சுவாமி ஜெயந்திநாதர் தனது வெள்ளி வேலால் வதம் செய்தார் .இரண்டாவதாக சிங்க முகத்துடன் வந்த சூரனையும், மூன்றாவதாக சுயரூபத்துடனும் போரிட்ட சூரபத்மனை சுவாமி வதம் செய்தார். பின்னர் மாமரமாக மாறிய சூரனை சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுள் ஆட்கொள்ளும் நிகழ்வு நடந்தது.

சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் கூடியிருந்தனர். கடலா கடல் அலையா என வியக்கும் வண்ணம் கடற்கரை முழுவதும் மனித தலைகளாக காட்சியளித்தன. சூரசம்ஹாரம் முடிந்ததும் பக்தர்கள் கடலில் புனித நீராடி விரதத்தை நிறைவு செய்தனர். சூரசம்ஹாரம் முடிந்தும் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி ஜெயந்திநாதர் சந்தோச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்கார தீபாரதனை நடைபெற்றறது. சுவாமி பூஞ்சப்பரத்தில் கிரிபிரகாரம் உலா வந்து திருக்கோயில் சேர்ந்தார். இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயா அபிஷேகம் நடைபெற்று பக்தர்களுக்கு சஷ்டி பூஜை தகடுகள் கட்டப்படுகின்றன.
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருநெல்வேலி சரக டிஜஜி திருநாவுக்கரசு, தென்காசி எஸ்பி மருத்துவர் ஸ்டாலின் தூத்துக்குடி எஸ்பி சிவபிரசாத் ஆகியோர் தலைமையில் 4,100 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடற்கரையில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீஸார், பைனாகுலர் மூலம் கடற்கரையை கண்காணித்தனர். மேலும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களும் பொருத்தப்பட்டிருந்தன. மேலும் போலீசார் தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் பக்தர்களுக்கு அறிவிப்புகளையும்.
எச்சரிக்கைகளையும் விழிப்புணர்வு தகவல்களையும் வெளியிட்டுக் கொண்டே இருந்தனர்.
பக்தர்கள் வசதிக்காக கோயிலை சுற்றி பல்வேறு இடங்களில் பிரமாண்ட எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடற்கரை பகுதி முழுவதும் ட்ரோன் கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. கடற்கரையில் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மீட்பு படகு மற்றும் மிதவைகளுடன் தற்காப்பு பணியில் ஈடுபட்டனர். மெரைன் போலீஸார் கடற்கரை பகுதியில் படகு மூலம் ரோந்து சுற்றி வந்தனர்.
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருச்செந்தூர் நகரமே நேற்று மாலையில் மனித தலைகளாக காட்சியளித்தது. அனைத்து பணிகளையும் ஒருங்கிணைக்க தமிழகம் முழுவதும் இருந்து இந்து சமய அறநிலையத்துறையை சேர்ந்த இணை ஆணையர்கள். துணை ஆணையர்கள். உதவி ஆணையர்கள் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டனர்.
கந்தசஷ்டி விழாவில் 7-ம் நாளான நாளை (நவ.16) திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நாளை அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்மன் தபசு காட்சிக்கு எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக தெப்பகுளம் அருகே உள்ள முருகமடத்தை சென்று சேருகிறார். அங்கு மாலை 6.30 மணிக்கு சுவாமி குமரவிடங்கபெருமான் காட்சி கொடுத்ததும் தெற்கு ரத வீதி சந்திப்பில் தோள் மாலை மாற்றும் வைபவம் நடைபெறுகிறது.
இரவு 11 மணிக்கு மேல் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்கபெருமான்- தெய்வானை அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் இணை மற்றும் திருக்கோயில் அலுவலர்கள் செய்துள்ளனர்.



