
உலகப் பிரசித்தி பெற்ற கேரள மாநிலம் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஏகாதசி உற்சவம் கடந்த இரு நாட்களாக வெகு விமரிசையாக நடைபெற்றது.
கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற, குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், கார்த்திகை மாதத்தில் கைசிக ஏகாதசி உற்சவம் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு ஏகாதசி உற்சவம் வெள்ளி கிழமை துவங்கி நடந்தது.
கிழக்கூட்டு அனியன் மாரார் தலைமையில் செண்டை மேளம் முழங்க, இந்திரசென் என்ற யானை மீது உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார் தொடர்ந்து பார்த்தசாரதி கோவிலுக்கு, பல்லச்சேனா முரளி மாரார் மற்றும் கலாமண்டலம் ஹரி நாராயணன் தலைமையில், பஞ்சவாத்தியம் முழங்க, தாமோதர்தாஸ் என்ற யானை மீது உற்சவர் எழுந்தருளினார்.
ஏகாதசி நோன்பு இருக்கும் பக்தர்களுக்கு, சிறப்பு கோதுமை சாப்பாடு மற்றும் கிழங்கு வகை, பயிர் வகை பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏகாதசி உற்சவத்தையொட்டி, அதிகாலை முதல், பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்ட நடை இன்று காலை, 7:00 மணிக்கு அடைக்கப்பட்டது. பின் வழக்கமான பூஜைகளுடன், பிற்பகல் 3:30 மணிக்கு நடை திறக்கப்படும்.
ஏகாதசி உற்சவம் சனிக்கிழமை நிறைவு பெற்றது. விழாவையொட்டி, கோவில் முன்பாக உள்ள மேல்புத்துார் கலையரங்கில் நடந்த செம்பை சங்கீத உற்சவம், இரவு, 10:00 மணிக்கு செம்பை வைத்தியநாத பாகவதருக்கு பிடித்தமான கீர்த்தனை பாடலுடன் நிறைவடைந்தது. இந்த, 15 நாள் உற்சவத்தில், பல் ஆயிரக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஏகாதசி உற்சவம் நடக்கிறது. கடந்த, 1976ம் ஆண்டு டிச., 2ம் தேதி ஏகாதசி உற்சவத்தின் போது, கேசவன் என்கிற யானை நோய் வாய்ப்பட்டு இறந்தது.
இதனை தொடர்ந்து, உற்சவத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மறைந்த கேசவன் யானையின் உருவச் சிலை முன்பாக, கோவில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான யானைகள், பார்த்தசாரதி கோவிலில் இருந்து கேசவன் யானையின் படத்துடன் வீதி உலா சென்று மரியாதை செலுத்துவது வழக்கம்.
காலை, 7:00 மணிக்கு இந்திரசென் என்ற யானை, கேசவன் யானையின் புகைப்படத்தை ஏந்தி செல்ல, 12 யானைகள் ஊர்வலமாக சென்று, கேசவன் யானையின் உருவச்சிலை முன் அணிவகுத்து, துதிக்கை உயர்த்தி வணங்கின. தொடர்ந்து, யானைகளுக்கு மூலிகை சாப்பாடு, பழ வகைகள், கரும்பு, சர்க்கரை, அவுல் ஆகியவை வழங்கப்பட்டன.


