புது வீடு புகுதல் என்பதற்கு சிறந்த நாட்கள் என சிலவற்றை சாஸ்திரமும் ஜோதிடமும் வரையறுத்துள்ளன. வாழப்போகும் வீடு, ஒருவரின் வாழ்க்கையை உயர்த்தவும் செய்யும், விருத்தி அடையவும் வைக்கும். சிலரை கடனாளியாக்கி, கவிழ்க்கவும் செய்யும். எனவே நல்ல நாள் பார்த்து புதுமனைக்கு குடிபுகுவது சிறந்தது.
புதுமனை குடிபுக,
* சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாதங்களில் உகந்தது.
* அசுவதி, ரோகிணி, மிருகசீர்ஷம், புனர்பூசம், உத்திரம், அஸ்தம், ஸ்வாதி, மூலம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி முதலிய நட்சத்திரங்கள் சிறந்தது.
* திங்கள், புதன், வியாழன், வெள்ளி, ஆகிய தினங்களில் சித்த அல்லது அமிர்த யோகம் உள்ள நேரம் மிகச் சிறந்தது.
* ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம் ஆகிய லக்னங்கள் சிறந்தவை.
கிரகப் பிரவேசம் செய்வது பற்றி மனையடி சாஸ்திரம் சிறப்பாக கூறியுள்ளது. அதன்படி, சித்திரை, வைகாசி, கார்த்திகை, தை ஆகிய மாதங்கள் கிரகப் பிரவேசம் செய்ய ஏற்ற மாதங்கள் என்றாலும், வீட்டின் உரிமையாளர் இந்த மாதங்களில் ஏதேனும் ஒன்றில் பிறந்திருந்தால் அந்த மாதத்தில் கிரகப் பிரவேசம் நடத்தக் கூடாது.
வீட்டின் உரிமையாளர், அது கணவனாகவோ அல்லது மனைவியாகவோ யாராயிருந்தாலும், அவர்களின் சந்திராஷ்டம நாட்களிலும், கரி நாளிலும் சுப காரியங்கள் செய்யக் கூடாது. அவரவரின் சந்திராஷ்டம நாட்களைக் கணக்கிட, அவரவர் பிறந்த நட்சத்திரத்தில் இருந்து 17வது நட்சத்திரத்தை எண்ணிக் கணக்கிட அது சந்திராஷ்டம நாளாக இருக்கும்.
மேலும், குடும்பத் தலைவிக்கு வீட்டு விலக்கான நாளில் கிரகப் பிரவேசம் செய்து நல்லதல்ல.
அரை குறையாக கட்டி முடிக்கப்பட்ட வீட்டிற்கு கிரக பிரவேசம் நடத்துவதை தவிர்ப்பது நல்லது. அதாவது, மேற்கூரை கட்டாமலும் கதவு போடாமலும் சுவர் தரை பூசாமலும் புதுமனை கிரகப் பிரவேசம் நடத்தக் கூடாது.
அமிர்த யோக காலத்தில் கிரகப் பிரவேசம் செய்வது மிகவும் சிறப்பானதாகும். சித்த யோக நாளும் பரவாயில்லை!