
தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்வைப் பற்றி சூடான விவாதங்கள் நடக்கும் போது மின்துறை அமைச்சர் திரு செந்தில் பாலாஜி அவர்கள் திரும்பத் திரும்ப, குஜராத்தை விட தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் மிகக் குறைவு என்று சொல்லி கொண்டு இருக்கிறார். அவர் தமிழ்நாட்டில் முதல் 100 யூனிட் மின்சாரம் ஒரு மாதத்தில் இலவசமாக தருவதையும் குஜராத்தில் அதே அளவுக்கு மின்சாரம் ஒரு யூனிட்டுக்கு ரூபாய் 3.95 வசூலிப்பதும் குறிப்பிட்டு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மின்சாரம் குறைவான விலையில் தரப்படுகிறது என்கிறார். உண்மையில் குஜராத்தில் முதல் 50 யூனிட்டுக்கு அங்கும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆனால் இது சரியான பார்வை அல்ல. ஏனென்றால் சிறு குறு பெரும் தொழில்களில் குஜராத்தில் 1000 யூனிட் களுக்கும் அதற்கும் மேலாக ஒரு யூனிட்டுக்கு ரூ 5.79 ர முதல் ரூ 6.3 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சராசரியாக யூனிட் ஒன்றுக்கு ரூ 6 என்று எடுத்துக்கொள்வோம். அதே மின்சாரம் தமிழ்நாட்டில் ரூ 9.5 வில் இருந்து ரூ 11. வரை வசூலிக்கப்படுகிறது. சராசரியாக ஒரு யூனிட்டுக்கு ரூ 10.5என்று வைத்துக்கொள்வோம். இதன்படி பார்த்தால் *தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளுக்கான மின்சார கட்டணம் குஜராத்தை விட இரண்டு மடங்கு அதிகம்* என்பது தெரியவரும். தமிழ் நாட்டில் ஏன் தொழில்கள் வளரவில்லை என்பதற்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும். இந்த அதிகமான கட்டணத்தில் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் பணத்தினால் எப்படி தொழில்கள் நசிந்து வருகின்றன என்று பார்ப்போம்.
தமிழ்நாட்டிலும் குஜராத்திலும் மக்கள் தொகை கிட்டத்தட்ட ஒரே அளவான ஏழு கோடி ஆகும். தமிழ்நாட்டில் இருக்கும் வீடுகள் 2.3 கோடிகள் ஆகும். குஜராத்திலும் அதே அளவு வீடுகள் உள்ளன என்று எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் மின்சாரமும் அது தவிர்த்த விவசாயம் சிறு குறு தொழிற்சாலைகளுக்கு தேவையான மின்சாரத்தையும் கணக்கில் கொள்வோம். தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு மின்சாரம் இலவசம்.
இதற்கு முன், மின்சார சம்பந்தப்பட்ட அலகுகளை தெரிந்து கொள்வோம். . மின்சாரம் அடிப்படையில் “வாட்” (WATT-W) என்னும் அலகில் அளக்கப்படுகிறது. ஒரு குண்டு பல்பில் ” 60W” என்று போட்டிருந்தால் , *ஒரு மணி நேரத்தில்* அந்த பல்பு எரித்த சக்தி 60 வாட் (W) . அதே பல்பு *ஒரு நாள் முழுவதும் * எரிந்தால் அது 60 x 24 = 1440 வாட் (W) என்பதாகும். 1000 வாட் ( W) என்பது ஒரு கிலோ வாட்(KW) என்றும் 1000 கிலோ வாட் , ஒரு மெகாவாட் ( MW) இன்றும் அளக்கப்படும். ஒரு *கிலோவாட் என்பது ஒரு யூனிட்* என்றும் சொல்லப்படும்.
அதே குண்டு பல்பு ஒரு ஆண்டு முழுவதும் பயன்படுத்தப்பட்டால் அதற்காக உபயோகப்படுத்தப்பட்ட மின்சார சக்தி 60 x 24 x365= *525600 வாட் ( W)* அல்லது 525.6 கிலோவாட் (KW) அல்லது *525.6 * *யூனிட்(அல்லது 0.5256 மெகாவாட் (MW)* என்பதாகும்
தமிழ்நாட்டில் *ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 15000 மெகாவாட்* மின்சாரம் தேவைப்படுகிறது. அனல் புனல், சூரியன், காற்று, இயற்கை எரிவாயு போன்ற பல்வேறு வழிகள் மூலமாகவும் பிற மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்வதாலும் அந்த மின்சாரம் பெறப்படுகிறது . மின்சார சக்தியை சேமித்து வைக்க முடியாத காரணத்தால் 15000 மெகாவாட் மின்சாரமும் முழுவதும் பகிர்ந்து கொள்ளப்படும். *ஒரு நாளைக்கு தேவையான* மின்சாரம் 15,000 x 1,000 x 24 = 360,000,000 கிலோவாட் அல்லது 360 மில்லியன் கிலோவாட் . அதுவே *360 மில்லியன் யூனிட்.*
நம் வீடுகளில் குளிர்சாதன பெட்டிகளை தவிர்த்து மின்சார உபயோகம் *மாதத்திற்கு 200 யூனிட்* தேவையாக இருக்கும். அல்லது ஒரு நாளைக்கு 200/30 = 6.7 யூனிட் தேவையாக இருக்கும். இணையத்தில், ஒருவரது வீட்டில் இருக்கும் மின்சார சாதனங்கள் ஒரு நாளில் எவ்வளவு மின்சாரத்தை செலவு செய்கின்றன என்பதை கணக்கிட பல மென்பொருட்கள் உள்ளன. 2.3 கோடி வீடுகளுக்கு இது கிட்டத்தட்ட 155 மில்லியன் யூனிட் ஆகும். எனவே தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் மின்சாரம் ஒரு நாளில் 360-155 = 205 மில்லியன் யூனிட்டுகள் ஆகும்.
தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் விலை சராசரியாக ஒரு யூனிட்டுக்கு ரூ 10.5 ரூபாய் என்று இருப்பதால் அரசு ஒரு ஆண்டில் பெரும் வருமானம் 205 x 10.5 x 365 = *ரூ 78566 கோடி* ஆகும். அதே அளவு குஜராத்தில் 205 x 6 x 365 = *ரூ 44895 கோடி* ஆகும்.
இதன் பொருள், *குஜராத்தில் தொழிற்சாலைகளுக்கு தரப்படும் மின்சாரத்தின் விலை தமிழ்நாட்டை விட வருடத்தில் ரூ 33671 கோடி குறைவு*.அத்துடன் சாராயம் விற்ற வகையறாவில் வருடம் கிட்டத்தட்ட ரூ 35000 கோடி வருமானம் வருகிறது. குஜராத்தில் அந்த பணம் கிடைக்காது. தமிழ் நாட்டில் குஜராத்தை விட வருடம் 70000 கோடி அதிகம் வருவாய் கிடைக்கிறது. பிறகு இலவச பேருந்து விட்டோம் என்று சொல்லிக்கொள்வதில் என்ன பெரிய பெருமை இருக்கின்றது ?
அமைச்சர் செந்தில் பாலாஜி அவருக்கு *சாதகமான தரவுகளை மட்டும்* தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் குறைவு இன்று பேசுகிறார். அவர் முழு உண்மையை சொல்லவே இல்லை.துறை வல்லுநர்களை வைத்து தமிழ்நாட்டில் மொத்தமாக வீடுகளுக்கு ஒரு நாளில் அளிக்கப்படும் மின்சாரத்தையும் விவசாயம் , தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கு அளிக்கப்படும் மின்சாரத்தையும் மூலப்பொருட்களின் விலைகள் , இயந்திரங்கள் பேணுதல் , இயக்குதல், சம்பளங்கள் போனஸ் போன்றவற்றை கணக்கிட்டு அதே எண்களை குஜராத்திலும் கணக்கிட்டுப் பார்க்கலாம். பிறகு மக்களுக்கு உண்மை புரியும். இன்னும் சொல்லப்போனால் குஜராத்தில் ஒரு நாளைக்கு தேவையான மின்சாரம் சராசரியாக 17000 மெகாவாட் ஆகும். மின்சாரத்தின் விலையும் குறைவு.
அதனால் தான் குஜராத் , ஒரு லட்சம் கோடி முதலீட்டில் சிலிக்கான் தொழிற்சாலைகளை ஈர்க்கின்றது. நாம் தமிழ்நாட்டில் துபாய்க்குச் சென்று வெறும் 5000 கோடியில் லூலூ மால் போன்றவற்றை பெரிய சாதனைகளாக திரும்ப திரும்ப பேசிக் கொண்டிருக்கிறோம்.
- ராமகிருஷ்ணன்