
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு,
ஞாயிறன்று வாசகர் பக்கத்தில், பாகிஸ்தான் நம் உடன் பிறப்பு அல்லவா என்றொரு மிகவும் வருத்தத்தை அளிக்கக்கூடிய கடிதமொன்று வெளியாகியிருந்தது. நாம் இன்னும் எந்த பாடமும் கற்கவில்லையே என்ற வருத்தத்தை அளித்தது.
அதில் பசியால் வாடும் பாகிஸ்தானுக்கு உதவி செய்து நமது அஹிம்சா, கருணா குணத்தை காட்டவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. அதாவது தன்னை தாக்கக்கூடிய, அழிக்கக்கூடியவர்கள் மீது இரக்கம் காட்டி, சோறு போட்டு போட்டுக்கொள்ள வேண்டும் என்கிறார். தன்னை தாக்க வருபவர்களை எதிர்க்கும் சுபாவம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்திகள் கொண்ட பாக்டீரியாக்களுக்கு கூட தெரியும். ஆனால், இது போன்ற உதவாத உபதேசங்களை அளித்து மக்களின் மனதில் அறியாமை விஷத்தை விதைத்து, தேவையில்லாமல் உதவாத தருணங்களில் இரக்க குணத்தை காட்டத்தூண்டுவோரை என்ன சொல்ல?
அவர்கள் நம்மை எதிரியாக பாவிக்கிறார்கள். நாம் அப்படியா பார்க்கிறோம்? பாகிஸ்தானா, பாரதமா? இதை யார் உணரவேண்டும்? அழிக்க வருபவர்களை எதிர்த்து அழிக்க வேண்டுமே ஒழிய இதுபோல அசட்டுத்தனமான இரக்கத்தை மனதில் விதைத்து இரக்கம் காட்டி அவர்களை வாழ விடுவது என்பது நமக்குள்ளேயே பிறந்து நம்முடன் வளர்ந்த புற்றுநோய்க்கு இரக்கம் காட்டி, பாவம் புற்றுநோய் நம்மை நம்பி வந்துள்ளது. அந்தப் புற்றுநோய் கிருமிகளும் எங்குதான் செல்லும்? அவைகளுக்கு உணவளித்து பாதுகாக்க வேண்டியது நம் கடமை அல்லவா? அதனால் அழியப் போகும் இந்த உடம்பில், அதுவும் ஒரு ஓரமாக இருந்து விட்டுப் போகட்டுமே என்று கூறுவது போல உள்ளது.
இது போன்ற எண்ணத்தை நாட்டை காக்க எல்லையில் நிற்கும் வீரர்கள் பின்பற்றினால் என்ன ஆகும்? ஐயோ பாவம். நம்மை தீர்த்துக்கட்ட பயங்கரவாதி வந்துள்ளான். அவர்களும் தங்கள் பிழைப்பை பார்க்க வேண்டும் ஏதோ ரெண்டு குண்டை வைத்து விட்டுப் போகட்டும். சைனாக்காரன் எல்லையை பிடிக்க வேண்டும் என்று வந்துள்ளான். அவர்கள் ஊரில் இடம் இல்லை போலும். ஏதோ நாற்பது கிராமத்தை எடுத்துக் கொள்ளட்டும். கள்ளக் கடத்தல் செய்ய வேண்டும் என்று வந்துள்ளார். எதையோ கடத்தி விட்டுப் போகட்டும், பாவம் என்று கூறிக்கொண்டு இருந்தால் நாடு என்ன ஆகும்?
பல நூற்றாண்டுகள் முன் இது போன்ற பைத்தியக்காரத்தனமான அஹிம்சா செய்யும் முறைகளை ராஜபுத்திரர்கள் பின்பற்றியதால்தான் அன்று நாடு அழிந்தது. பசுமாடுகளை தங்களுக்கு இடையே வைத்துக் கொண்டு போர் தொடுத்தார்கள் முகலாயர்கள். காரணம் ரஜபுத்திரர்கள் பசு மாடுகளை கொல்ல மாட்டார்கள் என்று தந்திரம் செய்ததால். பசுவை கொன்ற பாவம் வந்து சேரும் என்பதால் தயங்கினார்கள். மிக எளிமையாக போரில் வென்றார்கள் முகலாயர்கள். இதுபோல குழப்பம் பரப்பும் அகிம்சையை பின்பற்றவே கூடாது என்று வீர் சாவர்க்கர். ‘சத்குண விக்ருதி’ அழிவு தரும் நற்குணங்கள் என்று கூறினார்.
பாகிஸ்தான் பிரியும் பொழுது முஸ்லிம்கள் இந்துக்களை கொலை செய்கிறார்கள், ஹிந்து பெண்களை பலாத்காரம் செய்கிறார்கள் என்று புகார் சொன்னபோது காந்திஜி அவ்வாறு முஸ்லிம்கள் கொலை செய்ய வந்தால் இந்து ஆண்கள் ஒரு வார்த்தை கூட கூறாமல், எதிர்க்காமல் வீரத்துடன் இறக்க வேண்டும் என்று கூறினார். மூச்சை பிடித்துக் கொண்டு பெண்கள் இறக்க வேண்டும் என்று கூறினார். இதைத்தான் இன்றுள்ள மக்களுக்கு இவர் கூறுவாரா? இதைத்தான் இன்றைய சமுதாயம் வரவேற்கிறதா? இத்தனை ஆண்டுகள் பின்பற்றிய பயங்கரவாதத்தை விட்டுவிட்டு உணவுக்கே பஞ்சம் என்ற நிலையிலாவது பாகிஸ்தான் இதை பின்பற்றட்டுமே?
இந்த அகிம்சையை எல்லாம் வேறு எங்காவது சென்று பேசட்டும். நாட்டை நிர்வகிப்பவர்கள் இரும்பு கரம் கொண்டு நடந்து கொண்டால்தான் எல்லாம் கட்டுப்பாட்டில் நடக்கும். சுதந்திரம் கிடைத்து எண்ணி ஒரு ஆண்டு கூட முடியாத நிலையில் 1948 இல் போர் தொடுத்தது பாகிஸ்தான். 55 கோடி ரூபாயை கொடுத்தே ஆக வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து கட்டாயப்படுத்தி கொடுக்க வைத்தார் காந்தி. பட்டேல் எவ்வளவோ எச்சரித்தும் கூட கேட்கவே இல்லை. வேறு வழியில்லாமல் பட்டேல் அந்த பணத்தை கொடுத்தார். உடனடியாக போரை துவக்கியது பாகிஸ்தான். அதாவது பாகிஸ்தானுக்கு பணம் தந்து நம் மீது போர் தொடுக்க வைத்த கதை நிறைவேறியது.
அன்று முதல் இன்று வரை அவர்கள் திருந்தவுமில்லை, திருத்தவும் முடியாது. கிழக்கு பாகிஸ்தான் முஸ்லிம்கள் வங்காள மொழி பேசும் முஸ்லிம்களாக, ஹிந்து பண்பாட்டை ஒட்டி வாழும் முஸ்லிம்களாக இருக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் மீது மாபெரும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது மேற்கு பாகிஸ்தான். அதனால்தான் அங்கிருந்து லட்சக்கணக்கான பேர் இந்தியாவில் வந்த தஞ்சம் புகுந்தார்கள். அதனால்தான் இந்தியா போர் தொடுக்க நேரிட்டது. பிரிக்கப்பட்டதும், புல்லை தின்றாவது, வறுமையில் உழன்றாவது இந்தியாவின் மீது அணுகுண்டு வீசுவோம் என்றார் ஜூல்ஃபிகார் அலிபுட்டோ. அவர் சொன்னதை அந்தப் பதிவர் மறந்துவிட்டார். அதன் பின்னர் வரிசையாக நடந்த சம்பவங்களை நாடறியும். கள்ள நோட்டுகளை நாட்டுக்குள் அனுப்புவது, போதை மருந்துகளை அனுப்பிக்கொண்டிருப்பது, கார்கில் ஊடுருவல், ஊறி தாக்குதல், புல்வாமா தாக்குதல் என்று போய்க்கொண்டே இருக்கிறது பட்டியல்.
இவர்களுக்கு உதவினால்கூட மீண்டும் இவர்கள் நம்மை எதிரியாகத்தான் பார்ப்பார்கள். இவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டதும் அதுதான். அவர்கள் இதுவரை செய்து கொண்டு இருப்பதும் அதைத்தான். அதனால் குழப்பவாதிகள் இது போன்ற அஹிம்சை பாடங்களை ஏற்கனவே குழம்பிக் கிடக்கும் மக்களுக்கு எடுக்காமல் ஒதுங்கி இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றியுடன்
ஆனந்த் வெங்கட்
(தினமலருக்கு அனுப்பப்பட்ட கடிதம்.)