விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பத்திரிகையாளர் சந்திப்பின் போது கையாண்ட மொழி குறித்து கடும் சர்ச்சை எழுந்துள்ளது. “நீ” என்று ஒருமையிலும், “என் கேட்டின் முன் நிற்பதால் உனக்கு செய்தி தரமுடியாது” என்ற தொனியிலும் பேசினார். சில நாட்களுக்கு முன்னதாக அவருடைய மகனும் இது போலத்தான் பேசினார்.

சுமார் 25 ஆண்டுகளாக எல்லாக் கட்சி அலுவலகங்களுக்கும் செய்தி சேகரிப்பவன் என்ற முறையின் சென்றிருக்கிறேன். எல்லாக் கட்சி அலுவலகங்களுக்குள்ளும் நுழைந்து தலைவர்களையோ மற்றவர்களையோ சந்தித்துப் பேச முடியும்.

கலைஞர் உயிரோடு இருக்கும் வரை பத்திரிகையாளர்களைப் பார்த்தாலே நின்று ஏதாவது சொல்லி செல்வார். அவருடைய மகன் அழகிரி கைது செய்யப்பட்ட நாள் கூட எங்களிடம் பேசினார். 2-ஜி வழக்கில் திமுகவுக்கு எதிரான தீர்ப்பு வந்த போதும் பேசினார். சில நேரங்களில் கோபப்பட்டாலும் உடனே சிரித்து அதை சரி செய்து விடுவார்.

மூப்பனார் இருக்கும் வரை சத்தியமூர்த்தி பவனுக்குப் போனால் காபி கிடைக்கும். சில நாட்களில் கூடுதலாக வடையும் ஜாங்கிரியும் உண்டு. இதெல்லாம் பெரிய விசயமில்லைதான். ஆனால் பத்திரிகையாளர்களை மதித்தார்கள். காங்கிரஸ் தலைவர்களும் அப்படியே. அங்கிருந்தே “காங்கிஸ் வேஸ்ட்” என்று பேசிவிட்டு வருவோம். அவர்கள் ஒன்றும் சொல்வதில்லை.

ஜெயலலிதாவும் மிகுந்த மரியாதையுடன்தான் நடந்து கொள்வார். ஆங்கிலத்திலும் பின்னர் தமிழிலும் பதிலை அழகாக மொழிபெயர்த்து சொல்வார். ஆனால் எப்போதும் சந்திப்பார் என்று சொல்ல முடியாது. அதிமுக அலுவலகத்துக்கு எப்போது வேண்டுமானாலும் செல்லலாம்.

கம்யூனிஸ்ட், பாஜக கட்சிகளும் மிகவும் சிறப்பாக நடந்து கொள்வார்கள். அக்கட்சித் தலைவர்களுடன் எப்போதும் தொலைபேசியில் கூட பேச முடியும்.

தனிப்பட்ட முறையில் எனக்கும் விஜயகாந்துக்கும் நட்பு இருந்தது. சில முறை பேட்டி எடுத்திருக்கிறேன். அவர் பேட்டியின் காரணமாக என் மீதும் பத்திரிகை மீதும் வழக்கு வந்த போது கூட என்னிடம் பேசினார்.

அவர் உடல் நலம் குறைந்ததும் சந்திப்பு நிகழவில்லை. அவர் கட்சி அலுவலகத்தின் கதவை திறக்கவே மாட்டார்கள். அவருடயை மனைவி இப்போது திமுகவின் மீதுள்ள கோபத்தை பத்திரிகையாளர்கள் மீது காட்டியிருக்கிறார்.

அவர்கள் சரியாக நடந்து கொண்டிருந்தால் மற்றக் கட்சிகளும் அவர்களை சரியாக நடத்தியிருக்கும். பாமகவுக்கு கிடைத்த சீட் கிடைக்க வேண்டுமென்றால் உங்கள் பலத்தை நிரூபித்தாலே கிடைக்கும். பேரம் பேசுவது தவறில்லைதான். எல்லாக் கட்சிகளுமே கூட்டணியை முடிவு செய்து விட்டு பேரம் பேசுவார்கள். பிரேமலதா மட்டும் கூட்டணியில் இடம் பெறவே பேரம் பேசினார்.

திமுக அவரைத் தாங்கிய போது வரவில்லை. அதிமுகவும் பணியாத போது மீண்டும் திமுகவிடம் போனதால்தான் அவமானம் ஏற்பட்டது. இதை அவர் உணர மாட்டார். ஏனென்றால் அவருக்கு ஏற்கெனவே தான் பெரிய தலைவி என்று நினைப்பு மண்டையில் ஏறி விட்டது.

இது போன்ற தலைவியும் தலைவர்களும் உருவாகுவதற்கு அவர்களை ஆதரிக்கும் மக்கள்தான் காரணம். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று யோசிப்பது போல், யாரை சேர்த்தால் ஜெயிக்கும் என்று கட்சிகள் நினைக்கும் வரும் ஆயிரம் பிரேமலதாக்கள் உருவாகுவார்கள். கூடவே சுதீஸ் போன்ற மைத்துனர்களும்.

யு டியூபில் இந்திரா காந்தி அளித்த பேட்டிகள் உள்ளன. சங்கடமான கேள்வியைக் கேட்பவருக்கும் அவர் அளிக்கும் பதிலை கேளுங்கள். அரசியல் மண்டையில் ஏறும்.

  • ஜி.கோலப்பன் (மூத்த பத்திரிகையாளர்)
Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...