spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைஆகவே... பயம் நல்லது!

ஆகவே… பயம் நல்லது!

- Advertisement -

”அச்சம் என்பது மடமையடா”, பாட்டை முணுமுணுப்பதெல்லாம் செகண்ட் ஷோ சினிமா பார்த்துவிட்டு, இருட்டான தெருவில், தூரத்தில் குரைக்கிற தெருநாய் மீதான பயத்தை வெளிக்காட்டாமல் இருப்பதற்காக நாம் செய்கின்ற இயல்பை மீறிய பாசாங்குகள். ஆனால், ‘அஞ்சுவது அஞ்சாமை பேதைமை” என்ற திருக்குறளை ஞாபகம் வைத்திருப்பது நலன் பயக்கும். தற்போது மோடிஜியின் ஆட்சியில் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள திருக்குறள் கற்பிக்கப்படுவதால், காங்கிரஸின் முதல் குடும்பம், அருகிலிருக்கிற ஆரம்பப்பள்ளிக்கூடத்துக் குழந்தையிடமிருந்து இரவல் வாங்கியாவது வாசிப்பது நல்லது. (அப்புறம், வாங்கிய புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவதும் உத்தமம்.)

‘இண்டியா டிவி’யில் ரஜத் சர்மாவின் கேள்விகளுக்கு நிறைந்திருந்த அரங்கத்தில் பிரதமர் மோடிஜி அளித்த பேட்டி, காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு மட்டுமல்ல; அவர்களுடன் வெளிப்படையாகவும், முக்காடு போட்டுக்கொண்டும் ரயில் சினேகிதம் வைத்துக் கொண்டிருக்கிற அத்தனை கட்சிகளுக்கும் பீதி கிளப்பியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

”பயம் நல்லது.”

ரஜத் சர்மாவின் கீழ்க்கண்ட கேள்விக்கு மோடிஜி அளித்தது தான் மேற்கண்ட பதில்.

”பாகிஸ்தானை பயமுறுத்தியது சரி. உங்களைப் பார்த்து ராபர்ட் வாத்ரா, ப.சிதம்பரம், சோனியா காந்தி போன்று பலர் பயப்படுகிறார்களே? ஏன் இப்படி பயமுறுத்துகிறீர்கள்?”

“பயம் நல்லது,” என்று நறுக்கென்று பதிலளித்தார் மோடிஜி. அரங்கம் கரவொலியில் அதிர்ந்தது.

“2014-ம் ஆண்டு உங்களது ‘ஆப் கீ அதாலத்’ நிகழ்ச்சியில் பங்கேற்றபோதே நான் எச்சரித்திருந்தேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், சட்டத்தை மீறுகிறவர்கள் பயப்படுவார்கள்; அநீதி இழைப்பவர்கள் பயப்படுவார்கள்; முறைகேடுகளில் ஈடுபடுகிறவர்கள் பயப்படுவார்கள் என்று சொன்னேன். இன்று பயப்படுகிறார்கள். அவர்களின் இந்த பயம் மிகவும் நல்லது. நல்ல மனிதர்களுக்கு நல்லது.”

அவ்வளவு நீளமான உரையாடலிலிருந்து இதை மட்டும் சுட்டிக்காட்டுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

ராஜீவ் காந்தி குறித்து பிரதமர் மோடிஜி அவர்கள் தெரிவித்த கருத்து காங்கிரஸ் குட்டைக்குள் நிறைய சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ப.சிதம்பரம், ஆனந்த் ஷர்மா, ஷீலா தீட்சித் தொடங்கி ராகுல் காந்தி வரை அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ராகுல் காந்தியோ ஒரு படி மேலே போய்,’உம்மாச்சி கண்ணைக் குத்தும்,’ என்கிற ரீதியில் ‘உங்கள் கர்மாவின் பலனை நீங்கள் அனுபவிப்பீர்கள்,’ என்று ஏறத்தாழ சாபம் போட்டிருக்கிறார் பாவம். உண்மையில், ‘சௌகிதார் சோர் ஹை’ என்று அன்றாடம் ஜபம் செய்து கொண்டிருந்த ராகுல் காந்தியின் கர்மாவே பிரதமர் பிரயோகித்த ‘ஊழல்வாதி நம்பர் ஒன்’ என்ற அதிரடி வார்த்தை!

பிரதமர் மோடியை மேடைக்கு மேடை ‘திருடன்,’ என்று பேசியபோது, அவரது சாதி குறித்து விமர்சித்தபோது, அவரது தாய், தந்தை குறித்து தரக்குறைவாகப் பேசியபோதெல்லாம் நெருப்புக்கோழிகளாய் இருந்த பல ஊடகங்கள், ‘அது எப்படி ஒரு மறைந்த பிரதமரை நம்பர் ஒன் ஊழல்வாதி என்று இத்தனை வருடங்களுக்குப் பின் மோடிஜி விமர்சிக்கலாம்?’ என்று ஆசாரக்கோவை வாசிக்கத் தொடங்கி விட்டார்கள்.

ஒரு முறை “this government has lost the moral right,” என்று வாஜ்பாயை சோனியா காந்தி பாராளுமன்றத்தில் விமர்சித்தபோது, ‘உங்கள் தகுதிக்கு இது அழகில்லை. இது போன்ற விமர்சனம் வருந்தத்தக்கது,” என்று சோனியாவுக்குப் புத்தி சொன்னார் வாஜ்பாய். அதையெல்லாம் மோடிஜியிடமோ, அமித்ஷாவிடமோ எதிர்பார்த்தார்களோ என்னமோ காங்கிகள்?

முள்ளை முள்ளால் எடுக்கிற அரசியல்தான் இனிமேல் நடக்கப்போகிறதேயன்றி, ‘இதென்ன அபாண்டமான பேச்சு?” என்று கழிவிரக்கத்தோடு கேட்பதற்கு பாஜகவிலுள்ள கடைநிலை சேவக் கூட தயாரயில்லை. வாயைக் கொடுத்தால், வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும். அவ்வளவே! அறத்தின் அருகாமையில் இருக்கிறவர்களுக்கு அச்சம் அநாவசியம். பயப்பட வேண்டிய தேவை திருடர்களுக்கே; சௌகிதார்களுக்கு இல்லை.

ராஜீவ் காந்திக்கு வக்காலத்து வாங்குகிற சில்லறைக்கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. சரி, இவ்வளவு காய்ச்சுகிறார்களே, மோடிஜி கொஞ்சம் அடக்கி வாசிப்பார் என்று ஆசுவாசமாய்க் கொட்டாவி விடவும் அனுமதிக்காமல், இன்று ஜார்க்கண்டில் அடுத்த அஸ்திரத்தை எய்து விட்டார் பிரதமர்.

”தில்லி உட்பட, இன்னும் இரண்டு சுற்று தேர்தல் மீதமுள்ளன. காங்கிரஸ் கட்சிக்கும், அதன் ராஜகுடும்பத்துக்கும், அவர்களது அரசவைச் சேவகர்களுக்கும், அவர்களது துதிபாடிகளுக்கும் நான் சவால் விடுகிறேன். துணிவிருந்தால், நீங்கள் இரண்டொரு நாட்களாக, கண்ணீர் சிந்திக் கசிந்துருகிக் கொண்டாடுகிற அந்த முன்னாள் பிரதமரின்(ராஜீவ் காந்தி) பெருமைகளைப் பேசி தில்லியில் ஓட்டுக் கேளுங்கள். விஷவாயுக் கசிவால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த போபால் தொகுதிக்குச் சென்று அந்த முன்னாள் பிரதமரின் புகழ்பாடி ஓட்டுக் கேளுங்கள். இதைச் செய்கிற துணிச்சல் உங்களுக்கு உண்டா?”

எப்படிக் கேட்பார்கள்?

இன்றும் ராஜீவ் காந்தி பற்றிய தொலைக்காட்சி விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பிரதமரின் பேச்சை ஆதரித்தும், எதிர்த்தும் சூடுபறக்கிற சம்பாஷணைகள் எல்லா மொழிகளிலும் கேட்கக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு மோடிஜியின் இந்த சவால் திகிலூட்டியிருக்கிறது என்பது வெளிப்படை.

இண்டியா டிவி பேட்டியில் மோடி இன்னொரு விஷயத்தைச் சுருக்கமாகச் சொல்லியிருந்தார்.

“என்னை எதிர்ப்பவர்கள் என்னை சரிவர கூர்ந்து கவனிப்பதில்லை.”

என்னைப் பொறுத்தவரை ராஜீவ் காந்தியை ஊழல்வாதி என்று சொன்னதை விடவும், எதிர்க்கட்சிகளின் ‘ஆளுமை’ குறித்த மோடிஜியின் இந்த சர்வசாதாரணமான ஏகடியம்தான் அவர்களுக்கு அதிக அவமானகரமானதாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இதையும் அவர்கள் கூர்ந்து கவனிக்கவில்லை என்பதிலிருந்து இது எதிர்க்கட்சிகள் மீதான பிரதமர் மோடிஜியின் இன்னொரு ‘துல்லியத் தாக்குதல்’ என்று கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரு வேளை…

ஏதேனும் அற்புதம் நிகழ்ந்து பாஜக ஆட்சி அமைக்காமல் போனாலும், (அதற்கு வாய்ப்பில்லை என்று மோடிஜியின் பரமவைரிகளே ட்வீட் பண்ணுகிறார்கள்), எதிர்க்கட்சியில் உட்காரப்போகிறவர்கள் யார் என்பதையும் காங்கிரஸ் யோசித்தால், அப்போதும் பயமே அவர்களுக்கு மிஞ்சும்.

ஆகவே… பயம் நல்லது!

-ஆர்.வேணுகோபாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe