
பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸுக்கு இன்று 80 வது பிறந்த நாள். இதையடுத்து ஏராளமானோர் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ். மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, மராத்தி, பஞ்சாபி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் 40,000-க்கும் அதிகமான பாடல்களை பாடி சாதனை படைத்தவர்.
வா வா அன்பே அன்பே, ராஜராஜ சோழன் நான்… என காதலில் குழைவதும், அதிசய ராகம் ஆனந்த ராகம் என சங்கீதத்துக்குள் மூழ்கடிப்பதும், தண்ணீத் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்.. என துடியான வேகத்தில் துள்ள வைப்பதும், தெய்வம் தந்த வீடு…, கண்ணே கலைமானே… என சோகத்தில் ஆழ்த்துவதும் யேசுதாஸ் குரலின், மயக்கும் மேஜிக்.

சிறந்த பாடலுக்காக எட்டு முறை தேசிய விருது பெற்றிருக்கிறார் இந்த தேவகுரலோன்.
திரையுலகில், 1960-ஆம் வருடம் தனது இசைப்பயணத்தை தொடங்கிய யேசுதாஸ் பத்மவிபூஷண், பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளை பெற்றிருக்கிறார். சபரிமலையில் இன்றும், அத்தாழ பூஜையில் ஒலிக்கும் ஹரிவராசனம் இவர் பாடியதுதான். இந்த சிம்மகுரலோனுக்கு இன்று 80 வயது.
கர்நாடக இசையிலும் இவர் கைதேர்ந்தவர். செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயரிடம் சங்கீதம் பயின்று சிறந்த முறையில் பாடக்கூடியவர்.

இவ்வளவு சாதித்த பின்னும் யேசுதாஸ் சொல்வது, ‘நான் இப்போதும் மாணவன்தான். இசையெனும் ஊற்றில் இருந்து அள்ளிக்குடிக்க ஆசைகொண்ட மாணவன்’ என்று. அதுதான் அவர் பெருந்தன்மை.
ஏராளமான பின்னணி பாடகர்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு வாழ்த்துகள் குவிந்துவருகிறது.