
ரன்வீர் சிங், ஜீவா நடிக்கும் ’83’ படத்துக்கு தூதராக நடிகர் கமல்ஹாசன் நியமிக்கப்பட இருக்கிறார். இதற்காக கோடிகளில் அவருக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது.
கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 1983 ஆம் ஆண்டு, முதல் முறையாக உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதை மையமாக வைத்து ’83’ என்ற பெயரில் திரைப்படம் உருவாகிறது.

கபீர் கான் இயக்கும் இந்தப் படத்தில் ரன்வீர் சிங், கபில்தேவ் கேரக்டரில் நடிக்கிறார். மதன்லாலாக ஹர்டி சாந்து, கபில்தேவின் மனைவியாக தீபிகா படுகோன் நடிக்கின்றனர்.
சுனில் கவாஸ்கராக தஹிர் ராஜ் பாசின், சையது கிர்மானியாக சஹில் கட்டார் ஆகியோர் நடிக்கின்றனர். தமிழக வீரர் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்தாக, ஜீவா நடிக்கிறார். இந்த படம் இந்தி, தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளில் உருவாகிறது.

’83’ படத்தில் ஜிவாவின் தோற்றம் சமீபத்தில் வெளியானது. மேலும் சிலரின் தோற்றங்களும் வெளியிடப்பட்டன. இந்தப் படத்தை விஷ்ணுவர்தன் இந்துரியின் விப்ரி மீடியா, அனுராக் காஷ்யப்பின் பான்டோம் பிலிம்ஸ், ரிலையன்ஸ்,நதியத்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின் மென்ட், நடிகை தீபிகா படுகோன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

ஏப்ரல் 10 ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது. இதற்கான புரமோஷன் வேலைகளை விரைவில் தொடங்க உள்ளனர். இந்நிலையில், 83 படத்தின் அம்பாசடராக நடிகர் கமல்ஹாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது. இதற்காக, நடிகர் கமல்ஹாசனுக்கு சில கோடிகளில் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.



