தமிழில், பாணா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, தங்கமகன், தெறி, சீமராஜா, சூப்பர் டீலக்ஸ் உட்பட பல படங்களில் நடித்தவர் சமந்தா.
தெலுங்கிலும் நடித்து வருகிறார். பல தெலுங்கு படங்களில் நடித்துள்ள அவர், நடிகர் நாக சைதன்யாவுடன் நடித்தபோது காதலில் விழுந்தார். இவர் நடிகர் நாகார்ஜுனாவின் மகன்.
சில வருடங்களாகக் காதலித்து வந்த அவர்கள், கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் திருமணம் கோவாவில் நடந்தது. திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார் சமந்தா. தமிழ், தெலுங்கில் பிசியாக இருக்கிறார். இப்போது தமிழில் ஹிட்டான 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துள்ளார்.
தமிழில் த்ரிஷா நடித்த கேரக்டரில், சமந்தா நடித்திருந்தார். தமிழில் இயக்கிய பிரேம்குமார், தெலுங்கிலும் இயக்கியுள்ளார். ஜானு என்று டைட்டில் வைக்கப்பட்ட இந்தப் படம் கடந்த சில நாட்களுக்கு முன் ரிலீஸ் ஆகி, வரவேற்பை பெற்றுள்ளது. நடிகை சமந்தாவின் நடிப்பை ரசிகர்கள் புகழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் இன்னும் இரண்டு, மூன்று வருடங்கள் மட்டும்தான் சினிமாவில் நடிப்பேன் என்று தெரிவித்திருந்தார் சமந்தா. ஜானு படத்தின் புரமோஷனுக்காக செய்தியாளர்கள் சந்திப்பு ஐதராபாத்தில் நடந்தபோது இதுபற்றி அவர் பேசினார்.
‘எனக்குத் திருமணமாகிவிட்டது. நானும் என் குடும்பம் பற்றி யோசிக்க வேண்டும். அதனால்தான் 2, 3 வருடத்துக்குப் பின் சினிமாவில் இருந்து விலகிவிட முடிவு செய்துள்ளேன். நான் நடித்து அடுத்து வெளிவரும் படங்களில் என்றும் நினைவில் நிற்கும்படி இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.
சமந்தாவின் இந்தப் பேட்டி பரபரப்பானது. அனைத்து மீடியாவிலும் இந்தச் செய்தி வெளியானது. இதையடுத்து அவர் விளக்கம் அளித்துள்ளார். நான் சொன்னது, கடந்த 10 வருடமாக சினிமாவில் இருக்கிறேன். சவால்கள் நிறைந்த இந்த துறையில் நீடிப்பது கடினம் என்று சொன்னேன். நடிகையாக இல்லாவிட்டால், சினிமாதுறையில் வேறு துறையில் இருப்பேன் என்றார்.