
காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இருந்து நடிகை சமந்தா விலகி விட்டதாகக் கூறப்படுகிறது.
சிம்பு, வரலட்சுமி நடித்த ‘போடா போடி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிய விக்னேஷ் சிவன், அடுத்து இயக்கிய படம், நானும் ரவுடிதான்.
இதில், விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா, ஆர்.ஜே.பாலாஜி, மன்சூர் அலிகான் உட்பட பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படம், 2015 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது. இதன் ஷூட்டிங்கில்தான் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது.
இந்நிலையில், விக்னேஷ் சிவன், சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார். கார்த்திக், கீர்த்தி சுரேஷ் உட்பட பலர் நடித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்திருந்தார்.
அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் மெகா பட்ஜெட் படத்தை இயக்க இருந்தார் விக்னேஷ். இதை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பதாக இருந்தது.

பட்ஜெட் அதிகமானதால் அந்தப் படத்தை தயாரிக்க, மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் வேறு கதையை விக்னேஷ் சிவன் தயார் செய்தார். அதுதான், காத்துவாக்குல ரெண்டு காதல்.
இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக நயன்தாரா, சமந்தா நடிப்பதாகக் கூறப்பட்டது. இதன் அறிவிப்பு காதலர் தினத்தன்று வெளியானது.
இந்நிலையில், இந்தப் படத்தின் கதை நயன்தாராவுக்கும் சமந்தாவுக்கும் அவ்வளவு பிடித்திருந்தது என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் நடிகை சமந்தா இந்தப் படத்தில் இருந்து விலகி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு அவர் கர்ப்பமாக இருப்பதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

இப்போதைய சூழலில் படத்தில் நடிக்க இயலாது என்று சமந்தா, இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் தெரிவித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை.
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த சமந்தா, தெலுங்கில் நாக சைதன்யாவுடன் நடித்தபோது காதலில் விழுந்தார். இவர், நடிகர் நாகார்ஜுனாவின் மகன்.
சில வருடங்களாகக் காதலித்து வந்த அவர்கள், கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பிறகும் நடிகை சமந்தா தொடர்ந்து நடித்து வந்தார்.



