மேலும் 2 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக பொதுமுடக்கம் அமலில் உள்ளது. ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்குச் செல்வதற்கு அரசுத்துறையிடம் இ பாஸ் பெற வேண்டும்.
இந் நிலையில் கடந்த 17 ஆம் தேதி கொடைக்கானல் வனப் பகுதியின் கட்டுப்பாட்டிலுள்ள பேரிஜம் ஏரிப் பகுதிக்கு நடிகர்கள் விமல், சூரி மற்றும் இயக்குநர்கள் 2 பேர் உள்ளிட்ட சிலர் அனுமதி பெறாமல் சென்று தங்கியுள்ளனர். அங்கு அவர்கள் ஏரியில் மீன் பிடித்து மகிழ்ந்துள்ளனர். அப்பகுதியில் திரைப்படத்துறையினருடன் வனத்துறையைச் சேர்ந்த பணியாளர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர்.

இந்த படம் புதன்கிழமை சமூக வலைதளத்தில் வெளியானதையடுத்து, அரசு உத்தரவை மீறி வனப் பகுதிக்குள் சென்றவர்கள் மீதும், அவர்களுக்கு உதவி செய்த வனத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேத்துப்பாறையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மகேந்திரன் புதன்கிழமை கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதனிடம் புகார் கொடுத்துள்ளார்.
இது குறித்து வனத்துறை ரேஞ்சர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் கடந்த 17 ஆம் தேதி நடிகர்கள் விமல், சூரி மற்றும் சிலர் தங்கியிருந்துள்ளனர். அனுமதியில்லாமல் பேரிஜம் ஏரிக்குச் சென்று மீன் பிடித்த காரணத்திற்காக ரூ. 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வனப் பணியாளர்கள் சைமன் பிரபு (25), செல்வம் (24) ஆகிய இருவரும் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இச் சம்பவம் குறித்து மற்ற வன பணியாளர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.



