
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது குறித்து வெளிப்படையாகப் பேசினால், அடுத்து சான்ஸ் கிடைக்காது என்பதால், பலர் மௌனமாகி விடுகின்றனர் என்று வருத்ததில் கூறியுள்ளார் நடிகை இலியானா.
திரைத்துறையில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவதை வெளிப்படையாகக் கூறிவருபவர் நடிகை இலியானா. அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அளித்துள்ள பேட்டியில், சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் உள்ளது. ஆனால் இதை வெளியில் சொன்னால் தங்களது கேரியர் போய் விடுமோ என்று யாரும் வெளியில் சொல்வதில்லை. அடுத்து சான்ஸ் கிடைக்காது என்று மௌனமாகி விடுகின்றனர். ஆனால் என்னைப் பொறுத்தவரை இது ஒரு கோழைத்தனமான செயல்.
பெரிய நடிகர்களுக்கு, திரைத்துறைக்கு வெளியே கடவுள் போன்று ஒரு பெரிய இமேஜ் இருந்து வருகிறது. ஆனால் அந்த நடிகர்களுக்கு ஒரு நிஜ முகம் உள்ளது. அந்த முகம் மக்களுக்குத் தெரியாது. அது, எங்களைப் போன்ற நடிகைகளுக்குத்தான் தெரியும். அவர்களின் முகத்திரையைக் கிழித்தெறிய வேண்டுமென்றால், அனைத்து நடிகைகளும் ஒன்று சேர வேண்டும் என்று பேசியுள்ளார் இலியானா.
நடிகைகள் பலர், வாய்ப்புகளுக்காக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதும், அமைதியாகி விடுவதும், நெடுங்காலமாகவே இருந்துவருகிறது. ஆனால் சமூக வலைத்தளங்கள் பெருகிவிட்ட அண்மைக் காலத்தில் தான் சிலர் வெளிப்படையாக அவற்றைத் தங்களின் கருத்துகளாக சொல்கின்றனர்.



