
புது தில்லி:
தனது வங்கியில் கடந்த 2017 ஏப்ரல் மாதத்தில் இருந்து, 2018 ஜனவரி மாதம் வரையிலான கால கட்டத்தில், வங்கிக் கணக்குகளில் குறைந்த பட்ச மாதாந்திர இருப்புத் தொகை பராமரிக்காத 41 லட்சம் வங்கிக் கணக்குகளை பாரத ஸ்டேட் வங்கி மூடியுள்ளது. இது, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில், வங்கியில் கேட்கப்பட்ட தகவலில் வெளியாகியுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியில் சுமார் 41 கோடி சேமிப்புக் கணக்குகள் உள்ளதாகவும், அவற்றில் 25 கோடி கணக்குகள் குறைந்த பட்ச இருப்புத் தொகையை பரமாரிக்க வேண்டிய நிலையில் உள்ளதாகவும் வங்கி தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கௌத் என்பவர், ஆர்டிஐ., தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி கேட்ட தகவலில், இதனைத் தெரிவித்துள்ளதாம்.
இந்தியாவின் மிகப் பெரும் வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் குறைந்த பட்ச இருப்புத் தொகையாக, மெட்ரோபாலிடன் நகரப் பகுதிகளில் ரூ. 3 ஆயிரமும், நடுநிலை நகரப் பகுதிகளில் ரூ.2 ஆயிரமும், கிராமப்பகுதிகளில் ரூ. ஆயிரமும் பராமரிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.
முன்னதாக செவ்வாய்க் கிழமை அன்று வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த அபராதத் தொகையை 75% அளவுக்குக் குறைத்தது எஸ்பிஐ., வங்கி.
குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் முறை அமலுக்கு வந்ததால் வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாயினர். இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் நிபுணர்களிடம் இருந்து பெற்ற பரிந்துரைகளை ஏற்று, அபராதத்தைக் குறைக்க எஸ்பிஐ வங்கி முன்வந்தது. புதிய அபராதக் கட்டணம் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் சுமார் 25 கோடி வாடிக்கையாளர்கள் பயனடைவர் என்று கூறப் படுகிறது.
மாநகர மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள வங்கிக் கிளைகளில் கணக்கு வைத்திருப்போர் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்கவில்லை என்றால் மாதந்தோறும் அபராதமாக ரூ.50 வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், இனி அது ரூ.15 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும். இதே போல், நகர எல்லை மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள வங்கிக் கிளைகளில் இருக்கும் வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்காவிட்டால், மாதந்தோறும் ரூ.40 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.12 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.10 ஜிஎஸ்டி வரி தனி.
குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத வங்கிக் கணக்குகளில் இருந்து அபராதம் வசூலிக்கும் முறை அமலுக்கு வந்த 8 மாதங்களில் எஸ்பிஐ வங்கி, ஏழை, எளிய, நடுத்தர மக்களிடம் இருந்து அபராதம் என்று கூறி வசூலித்த தொகை ரூ.1,771 கோடி என்று செய்திகள் வெளியாகின. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனமும் விமர்சனமும் எழுந்தது. எஸ்பிஐ வங்கியின் ஜூலை – செப்டம்பர் மாத காலாண்டின் நிகர லாபமே ரூ.1,581.55 கோடி என்ற அளவில் இருக்கும் போது, நிகர லாபத்தை விட, ஏழைகளிடம் இருந்து வலுக்கட்டாயமாக வசூலித்த அபராதம் அதிகம். இதை அடுத்து, இந்த அபராதத் தொகையைக் குறைக்க எஸ்பிஐ முன்வந்தது குறிப்பிடத் தக்கது.



