
சென்னை:
நடிகை ஹன்சிகா மீது அவருடைய மேலாளர், தனக்கு சம்பளத்தை அவர் சொன்னபடி வழங்கவில்லை என்று நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.
‘எங்கேயும் காதல்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஹன்சிகா மோத்வானி. பிரபுதேவா இயக்கத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்து வெளிவந்த படம் அது. அந்தப் படத்தைத் தொடர்ந்து ‘மாப்பிள்ளை’, ‘வேலாயுதம்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘சிங்கம் 2’, ‘ஆம்பள’, ‘குலேபகாவலி’ என வரிசையாக தமிழ்ப் படங்கள் பலவற்றில் நடித்தார். ஜெயம் ரவி, தனுஷ், விஜய், உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சித்தார்த், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விஷால், சிம்பு, பிரபுதேவா என, இவர் நடித்த முன்னணி மற்றும் இளம் நடிகர்கள் பட்டியலும் நீளும்தான்!

தற்போதும், பிஸியாக நடித்துவரும் ஹன்சிகா, மணிரத்னத்தின் உதவியாளர் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துவரும் ‘துப்பாக்கி முனை’, சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம் ஆகியவற்றில் நடித்தும் வருகிறார். ஹன்சிகாவிடம் மேலாளராகப் பணிபுரிந்தவர் முனுசாமி என்பவர்.
இந்நிலையில், முனுசாமி தென்னிந்திய நடிகர் சங்கத்தில் ஒரு புகாரை அளித்தார். அந்தப் புகாரில், தான் இதுவரை ஹன்சிகாவிடம் மேலாளராகப் பணி செய்ததற்கான சம்பளத்தை அவர் வழங்கவில்லை என்றும், அதனைப் பெற்றுத் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.



