நடிகர் சிம்பு, அவ்வப்போது ஏதாவது பேசி வம்பு தும்பில் மாட்டிக் கொண்டு சர்ச்சையைக் கிளப்பி விடுவார். சில நேரங்களில் அதற்காக மனம் கனத்து வெம்பி வெதும்பி பேட்டி எல்லாம் கொடுத்து, மக்கள் மனதைக் கவர முயற்சி செய்வார்.
நடிகர் சிம்புவுடன் ஒருகாலத்தில் நயன்தாரா நெருக்கமாகப் பழகி வந்தார். இருவரும் காதலித்து வந்ததாக அப்போது கூறப் பட்டது. இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வலம் வந்தது அனைவரும் அறிந்ததுதான். பின்னாளில் ஏதோ பிரச்னைகளால் இருவரும் பிரிந்து விட்டனர். அதன் பின்னர் பிரபுதேவாவுடன் நெருக்கமாக இருந்த நயன்தாரா ஏதோ காரணத்தால் பிரிந்து, தற்போது டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.
சிம்புவுடனான காதல் முறிந்த பின்னர், நயன்தாராவும் சரி சிம்புவும் சரி, இருவருமே ஒருவர் குறித்து மற்றவர் பேசுவதைத் தவிர்த்து வந்தனர். பின்னாளில் ‘இது நம்ம ஆளு’ படத்தில் இருவரும் இணைந்து நடித்தாலும், இருவரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
இந்நிலையில், விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் நடிகர் சிம்பு. அப்போது அவர், நயன்தாரா குறித்து மனம் திறந்து பேசியது பலரின் புருவங்களை உயர்த்தியது.
நயன்தாரா குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த சிம்பு, “நான் வல்லவன் படம் எடுத்த சமயம். நயன் உதட்டை நான் கடித்து இழுப்பது போல போட்டோஷூட் நடத்தி, போஸ்டராகவும் வெளியிட்டோம். அது மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளானது. இது பற்றி நயன் என்ன நினைப்பாரோ என்று நினைத்து எனக்குக் கவலையாக இருந்தது. ஆனால் அவரோ, “இது எனக்குத் தொழில். நீங்கள் இயக்குநர். நீங்கள் சொல்வதை நான் செய்வேன்” என்று கூறி அதன் பிறகு அந்தக் காட்சியிலும் நடித்துக் கொடுத்தார். இன்று இவ்வளவு பெரிய ஸ்டாராக நயன்தாரா இருக்கிறார் என்றால், அதுதான் காரணம்” என்று கூறினார் சிம்பு.
அதுபோல், அவர் இன்னொரு நடிகையான த்ரிஷா குறித்தும் கருத்து தெரிவித்தார். ‘விண்ணை தாண்டி வருவாயா’ படத்தில் சிம்புவும் திரிஷாவும் ஜோடியாக நடித்தனர். அந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. சிம்பு, த்ரிஷா காம்பினேஷனையும் வெகுவாக ரசித்தனர் ரசிகர்கள்.
இந்நிலையில் இப்போது ‘விண்ணைத்தாண்டி வருவாயா-2’ படம் தயாராகவுள்ளது. இதில் சிம்புக்கு பதில் மாதவன் நடிக்கிறார் என்று செய்தி வெளியானது. இந்நிலையில் த்ரிஷா குறித்துக் கூறிய சிம்பு, “த்ரிஷாவை சிறு வயதில் இருந்தே எனக்குத் தெரியும். ஆனால் அவர் நடிக்க வருவார் என்று எனக்குத் தெரியாது. ஒரு நாள் திடீர் என்று ஹீரோயின் ஆகிவிட்டார். ஆனால் அவரிடம் பந்தா எதுவும் கிடையாது. எதைப் பற்றி வேண்டுமானாலும் த்ரிஷாவிடம் பேசலாம். அதுபோல் அவரும் என்னுடன் பேசலாம். எங்களிடம் இருப்பது நட்பு அல்ல. காதலும் அல்ல. அது ஒருவகையான அன்பு. ஆதரவு” என்று பெருமையாகக் கூறினார்.
அவரது வார்த்தைக்கு விளக்கம் கொடுக்கும் வகையில், இருவரும் நல்ல நண்பர்கள் என்பதைத் தான் சிம்பு இப்படி கூறி இருக்கிறார் என்று அவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர்.