நடிகை அசின் திருமணம்: தொழிலதிபர் ராகுல் சர்மாவை மணந்தார்

Published:

புதுதில்லி,

நடிகை அசின் திருமணம் தில்லியில் நடந்தது. மைக்ரோமேக்ஸ் நிறுவன அதிபர் ராகுல் சர்மாவை அவர் மணந்து கொண்டார். இந்து, கிறிஸ்துவ இரு மத முறைப்படியும் அவர்கள் திருமணம் நடைபெற்றது.

கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை அசின். கடந்த 2004ல் ஜெயம் ரவியுடன் ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படம் மூலம் தமிழ்ப் பட உலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா என முன்னணி கதாநாயகர்களுடன் நடித்தார். கஜினி, தசாவதாரம், சிவகாசி, வரலாறு, போக்கிரி, காவலன் போன்றவை அசின் நடித்த முக்கிய படங்கள்.

‘கஜினி’ படம் அமீர்கான் நடிக்க இந்தியில் தயாரானபோது கதாநாயகியாக அசின் நடித்தார். அந்தப் படம் வெற்றிகரமாக ஓடியதால் இந்தி படவாய்ப்புகள் குவிந்தன. சல்மான்கான், அபிஷேக் பச்சன், அஜய் தேவ்கான் போன்ற பிரபல இந்தி பட நாயகர்களின் ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இந்நிலையில், அக்ஷய்குமார் ஜோடியாக ‘கிலாடி 786’ படத்தில் நடித்தபோது அசினுக்கும் மைக்ரோமேக்ஸ் செல்போன் நிறுவன அதிபர் ராகுல் சர்மாவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டு காதலானது. இருவரின் திருமண ஏற்பாடுகள் ரகசியமாக நடந்தது.

இதைஅடுத்து தில்லியில் அசின்–ராகுல் சர்மா திருமணம் நடந்தது. அசின் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் காலையில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்கள். அப்போது அசின் வெள்ளை நிறத்தில் கவுன் அணிந்து இருந்தார். திருமணம் முடிந்ததும் 10 அடுக்குகளில் செய்யப்பட்ட கேக்கை இருவரும் வெட்டினார்கள்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

பின்னர் மாலையில் நட்சத்திர ஓட்டலில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. இந்த திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 100 பேருக்கு மட்டும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு அவர்கள் கலந்து கொண்டார்கள். திருமண வரவேற்பு, வருகிற 23ஆம் தேதி மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கிறது. திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலக முடிவு செய்திருப்பதால், அசின் புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவில்லை.

Related articles

Recent articles

spot_img