
திருப்புன்கூர் நந்தனார் விழாவை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்று கோரி இந்து மக்கள் கட்சி கோரிக்கை மனு அளித்துள்ளது. சீர்காழி வட்டாட்சியர் வழியாக தமிழக முதல்வருக்கு இந்தக் கோரிக்கையினை அளித்துள்ளனர் இந்து மக்கள் கட்சி அமைப்பினர்.
இது குறித்து அக்கட்சியின் சார்பில் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் தெரிவித்த போது…
63 நாயன்மார்களில் ஒருவரான திருநாளைப்போவார் நாயனார் என்கிற நந்தனார் நாகை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, வைத்தீஸ்வரன் கோயிலை அடுத்த ஆதனூரில் பிறந்தவர்.
புலையர் குலத்தில் பிறந்தவர் ஆயினும் சிவபெருமான் மீது அளவற்ற அன்பும், பக்தியும் கொண்டிருந்தார். தொழிலின் மூலம் தனக்கு கிடைக்கும் தோல் மற்றும் நரம்புகளை ஆலயத்தில் வாசிக்கப்படும் இசைக் கருவிகள் செய்ய வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். எப்போதும் சிவ நாமத்தையே உச்சரித்துக் கொண்டிருந்தவர்.
ஒரு நாள் ஆதனூரை அடுத்த திருப்புன்கூர் சிவலோகநாதசுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்யச் சென்றார். ஆனால் அந்த காலத்தில் நிலவிய தீண்டாமைக் கொடுமைகளால் அவரால் கோயிலுக்குள் சென்று தரிசிக்க முடியாத நிலை.
வெளியிலிருந்து வணங்கி விடலாம் என்று பார்த்தால் நந்தி மறைக்கிறது. சிவபெருமானை தரிசிக்க முடியாத சூழலில் மிகுந்த ஏக்கத்துடன் அழுது புலம்புகிறார் .அப்போது தன் மீது உண்மையான பக்தி கொண்டிருந்த நந்தனார் தன்னை தரிசிக்க வேண்டி குறுக்கே நின்ற நந்தியெம்பெருமானை “சற்றே விலகி இரும் பிள்ளாய் “என்று உத்தரவிடுகிறார்.
உடனே நந்தி சிறிது வடது புறமாக நகர்ந்து கொள்ள கருவறையில் ஆனந்த சுடராய், அருள் வடிவாய் வீற்றிருந்த இறைவனை கண்டு வணங்கியதாக வரலாறு கூறுகிறது. இன்றைக்கும் அத்திருக்கோயிலில் நந்தி சற்று விலகியே இருக்கிறது.மேலும் சைவ சமயத்தில் மேன்மையான திருக்கோயிலான சிதம்பரம் நடராஜப் பெருமானை தரிசிக்க வேண்டும் என்பது அவரது பேராவலாக இருந்தது.
ஆனால் சாதிக் கட்டுப்பாடுகளை எண்ணி வருந்தி “நாளைக்குப் போவேன் -நாளைக்குப் போவேன்” என்று ஒவ்வொரு நாளும் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு நடராஜரை மனதிலேயே வணங்கி வருகிறார். அதனாலேயே அவர் “திருநாளைப்போவார் நாயனார் ” என அழைக்கப்பட்டார்.
தில்லையில் நடனம் புரியும் நடராஜரை தரிசிக்க சென்றவர் எல்லையிலே சுற்றிக் கொண்டிருந் திருக்கிறார்.
தன்னுடைய தரிசனம் கிடைக்க செய்வதற்காக நடராஜர் தில்லைவாழ் அந்தணர்களின் கனவில் தோன்றி நந்தனாரைஅழைத்து வரச்சொல்லி ஆணையிடுகிறார். சிவபெருமானின் கட்டளையை உளப்பூர்வமாக, மகிழ்வுடன் ஏற்று தீட்சிதர்களும் நந்தனாரை மிகவும் சிறப்பாக மரியாதை செய்து அழைத்து வர கனக சபையில் ஆடும் அம்பலத்தரசனை தரிசனம் செய்து இறைவனோடு கலந்து விடுகிறார்.
இறைவன் முன் அனைவரும் சமம், இறைவன் மீது உண்மையான பக்தி கொண்டிருந்தால் இறைவனை அடையலாம் என்பதை வரலாறு ஆக்கியவர் நந்தனார். அவருக்கு நந்தி விலகி வழிபட்ட தலமான திருப்புன்கூர் சிவலோகநாத சுவாமி திருக்கோயிலில் அவரது அவதார தினமான புரட்டாசி மாத ரோகிணி அன்று குரு பூஜை நடத்தப்படுவது வழக்கம்.
2014, 2015 ஆண்டுகளில் ஒரு தனியார் அறக்கட்டளை நந்தனார் குரு பூஜை விழாவினை நடத்தியது. அதன் பிறகு கடந்த வருடம் சிறிய அளவில் நந்தனார் குருபூஜை விழா நடைபெற்றது.
இந்த ஆண்டு வருகிற (புரட்டாசி – 21) அக்டோபர் 07-ஆம் தேதி புதன்கிழமை அவரது அவதார தினத்தன்று இந்து சமய அறநிலையத்துறை மூலம் அரசே இந்த விழாவினை சிறப்பாக நடத்த வேண்டும் என இந்து மக்கள் கட்சி பணிவுடன் கேட்டுக் கொள்கிறது… என்று மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார்..



