தேனி மாவட்டம் பெரியகுளம் பாரதி நகர் பகுதியில் மதரஸா என்ற பெயரில் ஆதரவற்ற பெண்களை அழைத்து வந்து இலவசக் கல்வி கொடுப்பதாகக் கூறி அடைத்து வைத்திருந்தனராம். அந்தப் பெண்களுக்கு பல வகை இன்னல்கள் மற்றும் பாலியல் தொல்லைகள் கொடுத்து வந்துள்ளதாக ஏற்கெனவே குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
இதை அடுத்து அந்தப் பகுதியில் மேற்கொண்ட விசாரணையில், அவை சட்டபூர்வமற்ற வகையில் இயங்கி வருவதாகக் கூறப்பட்டது. ஏற்கெனவே இரண்டு முறை இது போல், அந்த மதரஸாவில் இருந்து பெண்கள் தப்பித்து வெளியே ஓடி வந்த சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், இன்று அதுபோல் மீண்டும் ஒரு சம்பவம் நடந்து, இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மை என வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மதரஸாவில் இருந்து தப்பி ஓடி வந்த பெண்கள் இருவர், வடுகபட்டி பகுதியில் மக்களிடம் அடைகலம் புகுந்தனர். அந்தப் பெண்களைத் தொடர்ந்து விரட்டி வந்த இரண்டு வாகனங்களைத் தடுத்த மக்கள், வாகனங்களை அடித்து நொறுக்கினர்.
தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட அவர்கள், பின்னர் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதரஸா என்ற பெயரில் கொடுமைப்படுத்தப் பட்டதாக அந்தப் பெண்கள் கண்ணீரும் கம்பலையுமாய் போலீஸாரிடம் கூறியுள்ளனர்.