விரும்பித் தொடப்படுகிற தொடுதல்களைக்கூட ஒரு பெண் மறந்துபோகக்கூடும். ஆனால், தன்னுடல் விருப்பமின்றி ஒரு பொருளைப்போல கையாளப்பட்ட அவமானத்தையும் அருவருப்பையும் அவளால் ஒருபோதும் மறக்கமுடியாது. முதுமை கூடி நினைவு தடம்மாறிப் பிறழும்வரை மனதில் ஊர்ந்து திரியும் புழு அது’
எனக்குத் தெரிந்த ஒரு பெண் தன் பணி மேலாளரால் தொடர்ந்து தகாத தொடுகைக்கு ஆளாக்கப்பட்டுவந்தாள். ஆனாலும், அவளுடைய ஏழ்மையான குடும்பப் பின்னணி அதைச் சகித்துக்கொள்ளச் செய்தது. பிறகு பொறுத்துக்கொள்ள முடியாமல் வேலையை விட்டு நின்றுவிட்டாள்.
“அந்த நாயின்ரை முகம் எனக்குக் கிட்ட வரேக்கை மூக்கிலை ஓங்கிக் குத்தோணும் போலை இருக்கும். ஆனா, அந்தக் கொடுமை எனக்கு நடக்காததுபோல, மரக்கட்டை போல நான் நிக்கப் பழகினன். எதிர்த்தா, வெளியிலை சொன்னா வேலையை விட்டுத் தூக்கிப்போடுவான்”என்று அவள் ஒருநாள் என்னிடம் சொன்னாள்.
சலுகைகளின் நிமித்தம்தானென்றாலும், தன்னால் நேசிக்கப்படாத ஒருவனால் தொடப்படுவதென்பது, அதைச் சகித்துக்கொண்டிருப்பதென்பது பெருந் துன்பம். ‘அப்படியொரு சலுகை தேவைதானா?’எனும் யதார்த்தத்தை உணராத ‘தெய்வங்களை’க் குறித்து ஒன்றும் சொல்வதற்கில்லை. ஒரு பெண்ணின் இக்கட்டான நிலையைப் பயன்படுத்தி, பாலியலை லஞ்சமாகப் பெறும் பெருந்தகையாளர்களே இங்கு அதிகம். சூழலும் வாய்ப்பும் கிட்டியபோதிலும் தன் சக உயிரைச் சங்கடப்படுத்தாத ஆண்களும் (மிக அரிதாக) உளரென்பதை மறுப்பதற்கில்லை.
“ஏன் முன்னமே சொல்லவில்லை?”என்பது போன்ற கேள்விகள் அபத்தமானவை. குற்றம் இழைத்தவரை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்டவளின் முதுகுக்குப் பின்னால் ‘வேசி’என கிசுகிசுத்துப் பல்லைக் காட்டுகிற சமூகந்தானே இது?
- கருத்து: தமிழ்நதி
Thamizhnathy Nathy




