
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்
அண்மையில் நடந்து முடிந்த மிகப் பெரும் ஹிந்து நிகழ்வு மகா கும்பமேளா. பிரயாக்ராஜ் க்ஷேத்திரத்தில் நடந்த நாற்பத்தைந்து நாள் மகோத்ஸசவமான மகா கும்பமேளா, உலகின் பார்வையை ஈர்த்தது. உலகிலேயே மிக அதிக அளவில் மக்கள் பங்குகொண்ட ஒரே ஒரு நிகழ்வு. அதிலும், தொடர்ந்து பல நாட்கள் நடந்தது. இந்தத் திருவிழா ஒரு மகத்தான அற்புதமாக நிலைத்து நிற்கிறது.
இந்த மாபெரும் கும்பமேளா தொடர்பான செய்திகள் பல்வேறு சமூக ஊடகங்களின் வழியே பரவாலாகப் பகிரப்பட்டன. இமயம் முதல் குமரி வரை மக்கள் சிரத்தையோடும் பக்தியோடும் பங்குபெற்ற இந்த மகோத்சவம் பண்டைய சாஸ்திரங்களையும், ஜோதிட கணிப்புகளையும் உள்ளடக்கி நடந்தது.
ஆச்சர்யமாக, வெளிநாட்டவர் பலரும் இந்த உற்சவத்தில் பங்குகொண்டு பவித்திர ஸ்நானங்களைக் கடைப்பிடித்தார்கள். வெறும் குதூகல நோக்கத்தோடு அன்றி, தார்மிக சிரத்தையோடு இதனை மேற்கொண்டது கவனிக்கத்தக்கது. அவர்களுள் சிறந்த தத்துவவாதிகளும், மேதைகளும், பெரும் செல்வந்தர்களும் அடங்குவர். பீடாதிபதிகளும், உத்தம ஆன்மீக சாதகர்களும், ஸித்த புருஷர்களும் இந்த பவித்திரமான நன்னாட்களில் அங்கு ஒன்றுகூடி ஸ்நானங்களை மேற்கொண்டு, தார்மீக உற்சாகத்தைத் தூண்டினார்கள்.
இந்த சந்தர்ப்பத்தில் கவனிக்க வேண்டிய சில அம்சங்கள் –
ஒருபுறம் உலகனைத்தும் இது குறித்து அறிந்து, போற்றுகையில், நம் நாட்டு ஹிந்து எதிர்ப்பாளர்களும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் இந்த மகா சம்பவம் குறித்த நேர்மறை கருத்தைத் தெரிவிக்க இயலாமல் போகிறார்கள். அதோடு, எதிர்மறையாக வக்கிர வியாக்கியானங்கள் செய்கிறார்கள். இது நம் நாட்டில் நடந்த ஒரு அற்புதம் என்பது தெளிவாகத் தென்பட்டாலும் அந்த உண்மையை அங்கீகரிக்க இயலாமல் புழுங்குகிறார்கள்.
ஹிந்து எதிர்ப்பு சக்திகள் சிலவும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் இதனைச் சரியாக நடக்கவிடக் கூடாது என்று முயன்றன என்ற செய்திகளும் காதில் விழுகின்றன. அவை உண்மைக்குத் தொலைவில் இல்லை.
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகா கும்பமேளாவை சிறப்பாக நடத்திய முறையை நேரடியாகப் பார்த்த, சாமானிய மக்களில் இருந்து, பிரமுகர்கள் வரை அனைவரும் வாயாரப் புகழ்ந்து வருகின்றனர்.
எல்லா இடங்களிலும் தூய்மை, சுகாதாரம், குளிப்பதற்கான சிறந்த ஏற்பாடுகள், வசதிகள், உணவு, விருந்தோம்பல் என்று ஒன்றல்ல. அனைத்தும் அற்புதம். நவீன தொழில்நுட்ப விஞ்ஞானத்தைப் பயன்படுத்தி, கோடிக்கணக்கான மக்களுக்கு வேண்டிய வசதிகளையும், சுற்றுச்சூழல் தூய்மையையும், குளிக்கும் துறைகளின் ஏற்பாடுகளையும் அமைத்தளித்த முறை பாராட்டுக்குரியது.
இந்தப் பெருமை ஆளும் கட்சிக்குக் கிடைத்து விடுமே என்ற பொறாமையில் அங்கங்கே, சிலர் சிலச்சில சில்லறை சதித் திட்டங்களை தீட்டினாலும், அவற்றை உடனுக்குடன் களைந்து, கட்டுப்படுத்தி, நிகழ்ச்சியை ஈடிணையில்லாத விதத்தில் தடையின்றி நடத்திய முறை பாராட்டுக்குரியது.
நள்ளிரவு தாண்டியபின் சிலருடைய மோசமான அணுகுமுறையாலோ என்னவோ, தள்ளுமுள்ளு நேர்ந்து சிலர் உயிரிழந்தது வருத்தத்தை அளிக்கிறது. உயிரிழப்பு இல்லாவிட்டாலும், தீ விபத்தால் கீதா பிரஸ் போன்ற பெருமைக்குரிய அமைப்பின் நூல்கள் எரிந்து சாம்பலானது வருத்தமளிக்கிறது.
இத்தனை பெரிய நிகழ்ச்சியில் இந்த சம்பவம் அளவில் சிறியதானாலும் வருத்தமளிப்பதால், பொறுப்பானவர்கள் முன்வந்து தகுந்த முன்னெச்சரிக்கையோடு, கட்டுதிட்டமாக, மேலும் விழிப்போடு செயல்படுவது நன்மை பயக்கும்.
பாதுகாப்பு விஷயத்திலும், மத வெறியர்கள், அரசியல் வெறுப்பு சக்திகள் போன்றோரிடமிருந்து ஆபத்து நேரக்கூடும் என்ற குறிப்புகளை கவனித்து, உடனுக்குடன் பாதுகாப்புகளை அதிகப்படுத்தி, அமைதிக்கு பங்கம் நேராமல் காப்பற்றியதை கவனித்து, உலகனைத்தும் வியந்து பாராட்டியது.
பத்தாண்டுகளுக்கு முன்பு, வரை, ‘மகா கும்பமேளா’ என்று இல்லாவிட்டாலும், கும்பமேளா போன்ற திருவிழாக்கள் நடந்துள்ளன. அவை எவற்றிலும் காண இயலாத தனித்துவமான சிரத்தையும், ஏற்பாடும், அமைதிக்கான பாதுகாப்பும் இங்கு நிலைகொண்டிருந்ததைக் காண முடிந்தது.
ஊடகங்களின் விஸ்தாரமான பங்களிப்பால், செய்திகள் வேகமாகப் பரவினாலும், நாக சாதுக்களின் விஷயத்தில் அதிக அளவு உற்சாகத்தைக் காட்டி, ஆச்சர்யத்தோடு, சின்னச் சின்ன சேனல்கள் பரபரப்பை ஏற்படுத்தின. ஆயிரக்கணக்கான நாக சாதுக்களின் கூட்டத்தில் ஒரு சில வேஷதாரிகளும் இருக்கலாம். சில ஊடகத்தினர், அவர்களை மட்டுமே காண்பித்து, நாக சாதுக்களைப் பற்றிய சரியான அபிப்பிராயத்தை ஏற்படுத்த இயலாமல் போனார்கள்.
சிலர் தேவையில்லாத பரபரப்புக்காக அப்படிப்பட்டவர்கள் மீதே கேமராவை மையப்படுததினார்கள். அவர்கள் தம் வேலையைப் பார்த்துக் கொண்டு, புனித மகோத்சவத்தில் ஸ்நானம் செய்துவிட்டுத் திரும்பவும் தம் ஏகாந்த வாசத்திற்குச் செல்கின்றனர். அத்தகைய மகநீயர்களை இவ்விதமாகக் குறிவைப்பது சரியல்ல.
எது எப்படியானாலும், பூகோளத்தில் வேறெங்குமே இல்லாத நாக சாதுக்களின் வருகை மகா அற்புதம். அவர்களுக்கென்று தனிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்த விதம் பெருமைக்குரியது.
இந்த சிறப்புகளோடு கூட மற்றுமொரு முக்கிய விஷயம். பிரயாக்ராஜின் அருகில் சற்று தூரத்தில் இருக்கும் வாராணசி, அயோத்தி, சித்திரகூடம் போன்ற க்ஷேத்திரங்களையும் தீர்த்தங்களையும் யாத்திரிகர்கள் பெரிய அளவில் சென்று தரிசித்தார்கள்.
இவற்றின் மூலம் மத்திய, மாநில அரசுகளின் சுற்றுலாத்துறை வருமானமும் அதிகரித்தன. ஆன்மிகத்தை மட்டுமின்றி, முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு கவனிக்க வேண்டிய அம்சம் இது.
ஹிந்து தீர்த்த க்ஷேத்திரங்கள், வியாபார அமைப்புகள், போக்குவரத்து அமைப்புகள் போன்றவை திடமான பொருளாதாரப் பங்களிப்பை அளித்து, நாட்டு மக்கள் அனைவரின் நலனுக்கும் உதவுகின்றன.
எது எப்படியானாலும், நம் தேசத்தின் மகோனந்தமான நிகழ்வாக, மஹா கும்பமேளாவை வர்ணித்துப் பாராட்டுவதில் பெருமை கொள்வோமாக. புஷ்கரங்களை நடத்தும் மகா நதிளைக் கொண்ட மாநிலங்களும், புகழ் பெற்ற திருத்தலங்களுக்கும், ஆலயங்களுக்கும் இருப்பிடமான மாநிலங்களும் இந்த மகா கும்பமேளா நடந்த வைபவத்தை முழுமையாகப் பயிலவேண்டும்.
மக்கள்தொகை அதிகமாவதால், நதி நீர் மாசடையாமல் எவ்வாறு தூய்மையாகப் பாதுகாப்பது என்பதைக் கற்க வேண்டும். அதிக அளவில் மக்கள் கூட்டம் சேரும் நிகழ்சிகளில் தொழில்நுட்ப வசதிகளோடும், கட்டுப்பாட்டோடும், நேர்மையோடும் மனத் தூய்மையோடும் எவ்விதம் நடந்து கொள்வது என்பதை அறிய வேண்டும்.
ஒரு ஆதர்சமான அற்புத நிகழ்ச்சியாக, இனிமையான ஞாபகமாக இந்த உற்சவத்தை நடத்தி முடித்த தலைவர்களைப் பாராட்டியே தீர வேண்டும்.
(தலையங்கம், ருஷிபீடம் மாத இதழ், மார்ச் 2௦25)