பக்குவப்படாதவர்கள்!

இளையராஜா விவகாரம் இவ்வளவுக்கு பெரிதாக்கப்படுவதும், வெகுஜன சமூகம் அந்த நிருபரை வசை பாடுவதும் ஏனோ?

இளையராஜா பொது இடங்களில் வருவது குறைவு… அப்படி ஓர் இடத்துக்கு அவர் வந்துவிட்டார்…. அதனால், நிருபர் அவரிடம் இதுதான் சந்தர்ப்பம் என்று கேள்விக் கணை தொடுத்தார்… இதில் நிருபர் தரப்பில் எந்தக் குற்றமும் இல்லை! அடிக்கடி சந்திக்கக் கூடிய நபராகவோ.. அல்லது வைரமுத்து போல் தானாக முன்வந்து கொட்டும் கருத்து கந்தசாமிகளாக இருப்பவர்களாகவோ எனில் இந்த சந்தர்ப்பத்தில் அந்தக் கேள்வியை நிருபர் கேட்டிருக்க மாட்டார். மேலும், அன்னக்கிளி, ஆத்தா ஆத்தோரமா வாரீயான்னு பாட்டு கொடுத்து ஒரு சமுதாய வீழ்ச்சியின் துவக்க நிலையில் இருந்தவர் என்பதால்… அவரிடம் சிம்பு குறித்த பாடலுக்கான கருத்தைக் கேட்பது முற்றிலும் நியாயமே! இசையமைப்பாளர் என்ற வகையில் அவரிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்க முடியும்?

பரபரப்பையும் விவாதங்களையும் முன்வைத்தே ஊடகங்கள் இயங்குகின்றன… இது உண்மை. அந்த மாதிரியாக வளர்க்கப்பட்ட செய்தியாளர், அவருடைய பணியை செய்கிறார். அவருடைய கேள்வியால், இளையராஜா ஏதாவது பதில் சொல்லியிருந்தார் என்றால்… அது சிம்பு விவகாரத்துக்கு மேலும் வலு சேர்த்திருக்கும். அல்லது நீர்த்துப் போகச் செய்திருக்கும். இளையராஜாவின் கருத்து வேறு திசையில் இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றிருக்கலாம் அல்லது ஊடகங்களில் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கலாம்.

பொதுவாக, வளர்ந்த நிலையில்  உள்ளவர்களிடம் கேள்வி கேட்பதே, ஓர் அறிவுரையை அவர்கள் வழங்குவார்கள், அல்லது இந்த இளைய சமுதாயத்தின் போக்கு சரியில்லை, மாற்றிக் கொள்ளுங்கள் என்று கூறுவார்கள் என்று எதிர்பார்த்துதான்! அந்த நிருபருக்கும் அத்தகைய எண்ணம் இருந்திருக்கக் கூடும். சிம்பு செய்த தவறுக்கு இளையராஜா ஏதாவது அறிவுரை கூறுவார், அல்லது இளைய சமுதாயம் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என்று கூறுவார் என்பதை எதிர்பார்த்துதான் அவர் கேள்வி எழுப்பியிருக்கக் கூடும். ஆனால், இந்த விஷயத்தில் அவர் கருத்து சொல்வதும் சொல்லாததும் அவரின் விருப்பம். உரிமை. 

இருப்பினும், கனத்த இதயத்துடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.. அதில் இப்படி ஓர் கேள்வி தேவையா என்று எண்ணினால்… அந்தச் சூழல் சம்பந்தப்பட்ட நபருக்குத்தானே ஒழிய செய்தியாளருக்கு அல்ல… அவர் சூழ்நிலைகளின் தாக்கத்துக்குள் புகுந்து கொண்டு, அவரும் சூழலோடு ஒத்திருந்தார் எனில், செய்தி வெளியே வராது. சூழலோடு தாமரை இலைத் தண்ணீர் போல் விலகியே இருக்க வேண்டும்… அதுதான் நிருபருக்கான லட்சணம். அதை அந்த நிருபர் சரியாகத்தான் செய்தார். தவறு இல்லை! 

மனிதாபிமான அடிப்படையில் அவசர கால உதவிகளைச் செய்யலாமே ஒழிய, முதல் வேலை செய்தி சேகரிப்பதும், அதை அளிப்பதும்தான்!

இந்த நிலையில், சூழலியலைப் புரிந்து கொண்டு, இளையராஜா “நோ கமென்ட்ஸ்”, “இந்த இடத்தில் இந்தக் கருத்து சொல்ல விரும்பவில்லை”, “தேவையற்ற கேள்வி” என்று சொல்லி நகர்ந்திருக்கலாம். அல்லது, மௌனமாக அந்த இடத்தை விட்டு சென்றிருக்கலாம். ஏனெனில் அவர் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டு, நகரப் போகும் நிலையில்தான் இருந்தார். அவர் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் நகர்ந்திருப்பாரேயானால் இந்த அளவுக்கு சர்ச்சை வந்திருக்காது. ஊடகத்தில் வளரும் நிலையில் அல்லது, ஓரளவு முகம் அறிந்த நபராகவே இருந்தாலும், அவரைப் பார்த்து “உனக்கு அறிவிருக்கா?” என்று கேட்பது எந்த வகையிலும் நியாயம் அற்றது. ஒரு குழந்தையைப் பார்த்துக் கூட அவ்வாறு முட்டாப் பயலே, அறிவு கெட்டவனே என்று சொல்லித் திட்டுவது, பெரியவர்களுக்கு அழகில்லை. சக மனிதரைப் பார்த்து, அல்லது வளர்நிலை இளைஞரைப் பார்த்து அவ்வாறு கேட்பது, வளர்ந்துவிட்ட மனிதருக்கு அழகில்லைதான்! அதை வளர்ந்த நிலையில் இருக்கும் இளையராஜா செய்து விட்டார்.

அந்த நிருபரும் சூழலியலைப் புரிந்து கொண்டு, விலகியிருக்கலாம். மேலும் மேலும் விவாதம் செய்யும் நோக்கில் முன்னேறிச் செல்லும் நிலையைத் தவிர்த்திருக்கலாம்.

ஆனால், இதை மீடியாக்கள் பெரிது படுத்துவதாக பார்வையாளர்கள் கருதினால், மீடியாக்களின் பணியையும் நெருக்கடியையும், தற்போதைய போட்டி உலகையும் கருத்தில் கொண்டு யோசித்துப் பாருங்கள். வாசகர்கள் வாசகர்களாகவே தங்கள் கண்ணோட்டத்தை அமைத்துக் கொள்ளட்டும்! ஒரு பார்வையாளனுக்கும் செய்தியாளனுக்கும் உள்ள வேறுபாடு அது! அந்த வேறுபாட்டைப் புரிந்து கொண்டால் போதும்! சர்ச்சைகள் சுற்றிச் சுற்றி வராது! மொத்தத்தில்… நாம் பக்குவப்படாதவர்கள்!