பள்ளி பொது தேர்வுகளில் பங்கேற்கும் மாணவியரை, ஆண் ஆசிரியர்கள் சோதிக்க கூடாது. ஆள்மாறாட்டம் செய்பவர்கள் மீது, காவல்துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும்’ என, கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
பிளஸ் 2 பொது தேர்வு, மார்ச், 2ல் துவங்குகிறது. இதையடுத்து, பிளஸ் 1 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வுகளும் துவங்க உள்ளன. தேர்வுக்கான விதிமுறைகள் அடங்கிய கையேடு, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள்: * தேர்வு அறை கண்காணிப்பு பணியில், அங்கீகாரம் பெற்ற, அரசு, அரசு உதவி மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர் பணியில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். தனியார் சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் ஆசிரியர்களை நியமிக்க கூடாது*
அனைத்து தேர்வு மையங்களிலும், அந்த பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் யாரும், தேர்வின்போது இருக்கக் கூடாது. வினாத்தாள், விடைத்தாள் கட்டுக்காப்பு மையங்களில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
ஆள்மாறாட்டம் செய்வது, விடைத்தாள்களை மாற்றுவது, கிரிமினல் குற்றம். அந்த தேர்வர்கள் மீது, போலீசில் புகார் செய்ய வேண்டும்
*பறக்கும் படையில் இடம் பெறும் ஆசிரியர்களுக்கு, பிற கல்வி மாவட்டங்களில், பணி வழங்க வேண்டும்.
வினாத்தாள் மற்றும் விடைத்தாள் எடுத்துச் செல்லும் பணியில், நம்பத் தகுந்தவர்களை நியமிக்க வேண்டும். அவர்களுடன், துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியில் இருக்க வேண்டும்
கட்டுப்பாட்டு மையங்களில், விடைத்தாள்களை பத்திரமாக, ‘சீல்’ இட்டு வைக்க வேண்டும். தேர்வு மையங்களின் வாயில் கதவுகளை பூட்டி வைக்கக் கூடாது. பறக்கும் படையினர் மற்றும் அதிகாரிகள், ஆய்வுக்கு வரும் வகையில், எந்த தடைகளும் இருக்கக் கூடாது.
மாணவ – மாணவியரை பயமுறுத்தும் வகையில், ஆய்வு பணி செய்யக் கூடாது* மாணவியரை சோதனையிட, பெண் ஆசிரியைகள் நியமிக்கப்பட வேண்டும். அனைத்து தேர்வர்களையும், கட்டாயம் சோதிக்க தேவையில்லை; சந்தேகம் ஏற்பட்டால் மட்டும் சோதிக்கலாம். தேர்வு மைய வளாகம், தேர்வறை, கழிப்பறை, பெஞ்ச், மேஜை உள்பட அனைத்து இடங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளன.
தேர்வு எழுதும் மாணவர்கள், ‘மொபைல் போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச்’ உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் எடுத்து வரக் கூடாது. சாதாரண, ‘வாட்ச்’ அணியலாம். தேர்வறையில் இயங்கும் கடிகாரம் காட்டும் நேரத்தையே பின்பற்ற வேண்டும். தேர்வு மைய கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், தங்கள் மொபைல் போனை, ‘ஸ்விட்ச் ஆப்’ செய்து, முதன்மை கண்காணிப்பாளிடம் ஒப்படைத்து, தேர்வறைக்குள் செல்ல வேண்டும்