சப்போட்டா பழம் தின்று சின்னக் குழந்தை மரணம் அடைந்தது அந்தக் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஜகித்யால மாவட்டத்தில் இந்த சோக சம்பவம் நேர்ந்தது. ஒரு தாயின் சிறிய கவனக்குறைவினால் கள்ளம் கபடம் அறியாத சிறு குழந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த அன்னையின் ஒரு சிறு கவனக்குறைவு அன்போடு பெற்று வளர்த்த மகனை பலி வாங்கிவிட்டது. என்ன சாப்பிடுகிறோம், என்ன செய்கிறோம் என்று தெரியாத சிறுவன் சப்போட்டா பழம் சாப்பிட்டு உயிரிழந்தான்.
ஜகித்யால மாவட்டம் மல்லாபூர் கிராமத்தைச் சேர்ந்த அனுபுரம் சுஜாதா, லிங்காகௌட் தம்பதிகளுக்கு இரு மகன்கள். வேலைவாய்ப்புக்காக லிங்காகௌட் சவுதிக்குச் சென்றார். பீடி தொழிலாளியான சுஜாதா தன் இரு பிள்ளைகளையும் வளர்த்துக்கொண்டு இங்கேயே இருந்தார்.
திங்கள் கிழமை அன்று மாலை சுஜாதா குழந்தைகளுக்காக சப்போட்டா பழம் வாங்கி வந்து வீட்டில் வைத்தார். அவற்றை பிள்ளைகளுக்கு தின்னக் கொடுக்கும் போது இரண்டாவது மகன் (4 வயது) சிவகுமாரின் தொண்டையில் சப்போட்டா விதை மாட்டிக்கொண்டது. அதனால் அவன் மூச்சு விட முடியாமல் தொல்லைக்கு ஆளானான்.
இதனால் அச்சமடைந்த சுஜாதா, குடும்பத்தினர் உதவியோடு உடனே மெட்பல்லியிலிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கே சிகிச்சை அளித்தும் சிவகுமார் உயிர் பிழைக்கவில்லை. அதனால் அந்த குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.