திருமலை திருப்பதியில் கல்யாண உத்ஸவ லட்டினை இனி பணம் கொடுத்தே வாங்கிக் கொள்ளலாம்.
திருமலை ஏழுமலையானை தரிசித்து திரும்பும் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கும் திட்டத்தை கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் தேவஸ்தானம் செயல்படுத்தி வருகிறது. கூடுதலாக லட்டு தேவைப்படும் பக்தர்கள், ஒரு லட்டு, 50 ரூபாய் விலையில், லட்டு கவுண்டரில் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
அது போல், கல்யாண உத்ஸவ லட்டு மற்றும் வடை பரிந்துரை கடிதங்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கல்யாண உத்ஸவ லட்டையும், பரிந்துரை கடிதம் இல்லாமல் அளிக்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
கல்யாண உத்ஸவ லட்டினைப் பெற விரும்பும் பக்தர்கள், ஒரு லட்டு 200 ரூபாய் என்ற விலையில் லட்டு கவுண்டரில் பெற்றுக் கொள்ளலாம். இது நேற்று முதல் சோதனை முறையில் அளிக்கப்பட்டு வருகிறது.
கல்யாண உத்ஸவ லட்டினை விநியோகிப்பதற்காக, 10 ஆயிரம் லட்டுகள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.