
கோவையில் 6ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்திய சிஎஸ்ஐ., பள்ளிக்கு ஆட்சியர் உத்தரவின் பேரில் ‘சீல்’ வைக்கப் பட்டது. கோவை முதன்மைக் கல்வி அலுவலர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக, தமிழகத்தில் முழு ஆண்டு தேர்வுகளைத் ரத்து செய்து 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து, உத்தரவும் பிறப்பித்தது தமிழக அரசு! அதுமட்டுமல்ல, பத்தாம் வகுப்பு தேர்வும் கூட ரத்து செய்யப் பட்டு, அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து, அரசு வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளது.
மேலும், தற்போதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தீவிரமடைந்து வருகிறது. எனவே பள்ளிகளைத் திறப்பது குறித்து தமிழக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. செப்டம்பர் மாதத்தில் கொரோனோ பரவல் குறித்து நிலமையை ஆராய்ந்து அதன் பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப் படுகிறது.
இந்த நிலையில் கோவை சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 6ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கோவை டவுன்ஹால் பகுதியில் செயல்பட்டு வரும் இப்பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை இன்று காலை சில மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் வந்துள்ளனர். அவர்களை 6ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்காக நுழைவுத்தேர்வு எழுத பள்ளி நிர்வாகம் அழைத்திருந்ததாக தகவல் பரவியது.
இதைஅடுத்து, சிஎஸ்ஐ பள்ளியின் அடாவடித்தனம் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும், முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கும் சிலர் புகார் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, மாவட்டக் கல்வி அலுவலர் ராஜலட்சுமி, தெற்கு வட்டாட்சியர் முருகன் ஆகியோர் அப்பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கே 50க்கும் மேற்பட்ட மாணவர்களை பள்ளி நிர்வாகத்தினர் வரவழைத்து, நுழைவுத்தேர்வு நடத்தியது தெரியவந்தது.
இதை அடுத்து, மாணவர்கள் தேர்வு எழுதியதைத் தடுத்து நிறுத்திய அதிகாரிகள், அவர்களின் பெற்றோரிடம் விசாரணை செய்தனர். அதற்கு அவர்கள், நுழைவுத்தேர்வு எழுதுவதற்காகவே தாங்களும் உடன் வந்துள்ளதாக தெரிவித்தனர்! இதனால் அதிருப்தி அடைந்த அதிகாரிகள், இது குறித்த விவரத்தை ஆட்சியருக்கு தெரிவித்தனர். இந்நிலையில், ஆட்சியர் உத்தரவின் பேரில், அந்தப் பள்ளிக்கு கல்வித் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.