மாணவர்களை தேசத்திற்கு எதிராகத் தூண்டி விருகிறார் திருமுருகன் காந்தி என்று குற்றம் சாட்டியுள்ளது ஏபிவிபி மாணவர் அமைப்பு!

கடந்த 19ஆம் தேதி லயோலா கல்லூரியில் வீதி விருது விழா என்ற நிகழ்ச்சியில் திருமுருகன் காந்தி, கல்லூரிக்குள் அரசியல் பேசக் கூடாது என்று அரசாங்கம் சுற்றறிக்கை விட்டிருக்கிறது. மாணவர்களிடம் பேசாமல் பிறகு யாரிடம் பேசுவது? படிப்பினைப் பிறகு கூட படித்துக் கொள்ளலாம், அரசாங்கத்தை எதிர்த்து உடனே போராட வா என்பதாக அழைப்பு விட்டு பேசியிருக்கிறார்.

அவர் பேசிய இந்தப் பேச்சுக்களுக்காக கண்டனம் தெரிவித்துள்ளது அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு. அதன் மண்டல அமைப்புச் செயலாளர் பிரித்விராஜ் இது குறித்துக் கூறியபோது…

மாணவர்களுக்கு படிப்பை விட முக்கியமான விஷயம் வேறென்ன இருக்க முடியும்? அரை குறை அறிவினை வைத்துக் கொண்டு அரசியலுக்கு வருவது நாட்டையும் நாட்டு மக்களையும் கெடுத்து விடும். படிப்பே இல்லாமல் அரசியலில் நல்லது செய்த தலைவர்களை முன்னுதாரணம் காட்டி சமாதானம் செய்யக் கூடாது.

எல்லாரும் காமராஜர், முத்துராமலிங்கத் தேவர், கக்கன் போல இயல்பிலேயே நிர்வாக அறிவுடன் இருந்து விட முடியாது. அதுவும் இன்றைய உலகமயமாக்கப்பட்ட அரசியல் மற்றும் வர்த்தகச் சூழ்நிலையில் அரசியல் மற்றும் அரசு நிர்வாகத்தில் இருப்பதற்கு நிறைந்த கல்வியறிவும், பரந்த பார்வையும் மிகவும் அவசியம்.

இன்றைய சூழலில் பள்ளிக்கூட வாழ்க்கை முழுவதும் மதிப்பெண்ணுக்காக கழித்துவிட்ட மாணவர்களுக்கு பொது அறிவு என்பது மிகக் குறைவாகவே இருக்கிறது. பெரும்பாலான மாணவர்கள் எடுப்பார் கைப்பிள்ளைகளாகத்தான் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் இவர்களை படிப்பினையும் முடிக்காமல் அரசியலுக்குள் இறக்கிவிட்டால், அவர்கள் வாழ்வு சீரழிந்துவிடும். இது ஏதோ மாணவர்கள் வாழ்க்கையைச் சிதைக்கத் திட்டமிட்டே பேசுவதாக இருக்கிறது.

கல்லூரிகளுக்குள் அரசியல் பேசக் கூடாது என்ற நிபந்தனை இருக்கும் பொழுது திருமுருகன் காந்தி லயோலா கல்லூரிக்குள் காழ்ப்பரசியல் பேசி, மாணவர்களை தேசத்திற்கு எதிராகத் திசை திருப்ப முனைவதை ஏபிவிபி வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்தப் பேச்சுக்காக திருமுருகன் காந்தி உடனடியாக நிபந்தனை யற்ற மன்னிப்பை மாணவர் சமுதாயத்திடம் கேட்கவேண்டும் என்றும் இந்தப் பேச்சைக் கவனத்தில் கொண்டு திருமுருகன் காந்தி மீது அரசு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஏபிவிபி சார்பில் கோரிக்கை வைக்கிறோம்… என்றார்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...