சில முக்கிய வேலைகள் இருக்கையில் சீனியர் மாணவர்களைக் கொண்டு ஜூனியர் மாணவர்களுக்கு பரத நாட்டியம் சொல்லிக் கொடுக்கச் சொல்வதாக ஒரு நடனக் கலைஞர் தொலைக் காட்சி நேர்காணலில் கூறி கொண்டிருத்தார். உடனே எனக்கு எங்கள் டியூஷன் வகுப்பு நினைவுக்கு வந்தது.
எங்கள் வீட்டு வேலைக்காரப் பெண்மணி தன் இரண்டு பெண்களையும் சனி ஞாயிறுகளில் வீட்டு வேலைக்கு உடனழைத்து வருவது வழக்கம். அப்போது அவர்களின் பள்ளிப் பாடங்களைப் பற்றியும் மதிப்பெண்களைப் பற்றியும் விசாரிப்பேன். அவர்கள் மூன்றாவதும் ஆறாவதும் பயின்று வந்தனர்.
அவர்கள் கூறும் செய்திகள் எனக்கு வியப்பாக இருக்கும். அவர்களை பெற்றோர் சிரமப்பட்டு வீட்டு வேலை செய்து தனியார் ஆங்கிலப் பள்ளியில் படிக்க வைத்துள்ளனர்.
எந்த பாடத்தைப் பற்றியும் அவர்களுக்கு பெயர் தெரிகிறதே தவிர பொருள் தெரிவதில்லை. விடுமுறை நாட்களில் வேலைக்கு அழைத்துச் செல்லாமல் எங்கள் வீட்டுக்கு அனுப்பச் சொல்லி இலவசமாக நானும் என் கணவரும் பாடம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினோம்.
அவர்கள் மேலும் தங்கள் அண்டை அயல் ஏழைக் குழந்தைகளையும் அழைத்து வந்தார்கள். அவர்களுள் சில புத்திசாலிப் பையன்களும் சில குறும்புக்காரப் பிள்ளைகளும் இருந்தார்கள். அவர்களுக்குப் பாடம் சலிக்காமல் இருப்பதற்காக அவ்வப்போது கேரம் போர்டு விளையாடவும் சொல்லிக் கொடுத்தோம். பாலும் பிஸ்கட்டும் கொடுத்தோம்.
அவர்களுக்கு இன்று சொல்லிக் கொடுத்ததை நாளை கேட்டால் பிடிப்பதில்லை. பள்ளியில் அவ்வாறு தனிப்பட்ட கவனிப்பு இருப்பதில்லையாம். பாடப் புத்தகமே அவர்களிடம் இல்லாததைப் பார்த்து வியந்தேன். வெறும் வொர்க் புக் மட்டும்தான் வாங்கச் சொல்கிறார்களாம்.
வகுப்பாசிரியர் போர்டில் எழுதும் பதில்களை அந்த வொர்க் புக்கில் பூர்த்தி செய்து அதை மனப்பாடம் செய்கிறார்கள் பிள்ளைகள். இந்த விந்தையான கல்வி முறையால் என்ன அறிவு வளரும் என்று புரியவில்லை. அதோடு எட்டாம் வகுப்பு வரை அவர்களை தேர்வில் பெயில் போட மாட்டார்களாம்.
எங்கள் பக்கத்து வீட்டு அவுட் ஹவுஸில் குடியிருப்பவர்கள் தம் இரண்டு பெண் குழந்தைகளையும் டியூஷனுக்கு அனுப்ப ஆரம்பித்தார்கள். அவர்கள் சிறியதாக மாவு மில் ஒன்று வைத்திருந்தார்கள். அதில் ஒரு சிறுமி எல் கே ஜி. இன்னொரு சிறுமி ஒன்றாம் வகுப்பு.
நான் இந்த இரண்டு சிறுமிகளுக்கும் எதைச் சொல்லித் தந்தாலும் அவர்கள் ஏற்க மறுத்தார்கள். ஏனென்று கேட்டபோது அவர்கள் சொன்ன பதில் எங்களை வியப்பில் ஆழ்த்தியதோடு புன்னகையையும் வரவழைத்தது.
சில ஆண்டுகளுக்கு முன் எங்கள் பக்கத்து வீட்டில் குடியேறிய அவர்களுக்கு என்னை அடுத்த வீட்டு ஆன்ட்டியாகத் தான் தெரியும். பள்ளிக்குச் சென்றறியாத தங்கள் அம்மாவைப் போலவே என்னையும் அந்த குழந்தைகள் நினைத்ததில் தவறில்லைதான். ‘நீ வெறும் ஆன்ட்டிதான். உனக்கு ஒண்ணும் தெரியாது. எங்க டீச்சருக்குத் தான் எல்லாம் தெரியும்” என்று போட்டார்கள் ஒரு போடு.
‘சரி, போகட்டும்!’ என்று எங்கள் வேலைக்காரப் பெண்மணியின் பெண்கள் இருவருள் யார் சும்மா இருக்கிறார்களோ அவர்களை விட்டு அப்பெண்களுக்கு ஏபிசிடி சொல்லித் தரச் சொன்னேன்.
அச்சிறுமி தன் மடியில் எங்கள் பக்கத்து வீட்டுக் குழந்தையையை அமர்த்தி கையைப் பிடித்து எழுத வைத்துக் கொண்டிருந்தாள். குழந்தைகளை அழைத்துச் செல்ல வந்த மாவு மில் பெண்மணி அந்தக் காட்சியைப் பார்த்துக் கொதித்து விட்டாள்.
“நல்லாயிருக்கே! அவளைப் போய் சொல்லித் தரச் சொல்றீங்களே! அதுவும் அவ மடி மேல போய் உக்கார்ந்துருக்கு பாரேன்!” என்று சொல்லி தர தரவென்று இழுத்துச் சென்று விட்டாள் தன் பெண்களை. பரஸ்பரம் ஏழைகளுக்குள் கூட ஒருவருக்கொருவர் இத்தனை குல, இன வேறுபாடுகளும் உயர்வு தாழ்வு மனப்பான்மையும் இருக்கிறதே என்று கவனித்து மிகவும் வருந்தினேன்.
எங்கள் காலனியில் உள்ள முனிசிபாலிடி பார்க்கில் அப்போது உள்ளே செல்ல மூன்று ரூபாய் கட்ட வேண்டியிருந்தது. ஒரு நாள் வகுப்பு முடிந்ததும் பையன்களில் சிலர் சில்லறைக் காசுகளை கையில் வைத்து ஏதோ கணக்கு போடுவதை கவனித்து என்ன விஷயம் என்று கேட்டேன்.
அவர்கள் எல்லோரும் பார்க் சென்று விளையாடக் காசு போதாது என்றார்கள். அவர்கள் சற்று தூரத்திலிருந்து சைக்கிளில் வருபவர்கள். எங்கள் காலனியைப் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை.
இன்னொரு இலவச பார்க் இருப்பதையும் அங்கு தான் நாங்கள் தினமும் வாகிங் போவோம் என்றும் எடுத்துச் சொல்லி அவர்களை அழைத்துச் சென்று காண்பித்தேன். அது பெரிய தவறாகி விட்டது என்பது பிறகு தான் புரிந்தது.
சனி ஞாயிறுகளில் டியூஷனுக்குக் வருவதாக தங்கள் வீட்டில் சொல்லி விட்டு நேராக அந்த பார்க்கில் சென்று விளையாடி விட்டு வீட்டுக்குச் சென்று விடுகிறார்கள் பிள்ளைகள்.
அதனால் எத்தனை நீதிக் கதைகள் சொல்லியும் பாடம் படிக்க வைக்கப் பார்த்த எங்கள் முயற்சி தோல்வியில் முடிந்தது.