
ஆபரேஷன் சிந்தூர் எப்படி நடந்தது, என்ன நடந்தது என்பது குறித்து நாட்டுக்கு விளக்குவதற்காக, இன்று மாலை ஊடக செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் முப்படைகளின் சார்பில் அவற்றின் டிஜிஎம்ஓ.,க்கள் கலந்து கொண்டு, செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.
“பயங்கரவாத கட்டமைப்புகளை முற்றாக அழிக்கவே ஆபரேஷன் சிந்தூர்” என தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. “ஆபரேஷன் சிந்தூர்” தெளிவான இராணுவக் குறிக்கோளை கொண்டே திட்டமிடப்பட்டது. பயங்கரவாதத்தை திட்டமிட்டவர்கள் மற்றும் பயங்கரவாதிகள் மீது தக்க பழிவாங்கும் நோக்கத்துடன், அவர்களின் பயங்கரவாத அடைக்கலம் மற்றும் கட்டமைப்புகளை முற்றாக அழிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மீண்டும் மீண்டும் கூறப்படுவது ஒன்றே ஒன்று தான். இந்தியாவின் தீர்மானமும், பயங்கரவாதத்தை ஒட்டுமொத்தமாக சகிக்காத நியாயமான மனநிலையும் தான்” என்று இந்திய ராணுவம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ராணுவம் மற்றும் விமானப்படை, கடற்படை டி.ஜி.எம்.ஓ.,க்கள் மே. 11 இன்று மாலை விளக்கம் அளித்தனர். இந்திய முப்படைகள் தரப்பில் நடந்த இந்த செய்தியாளர் சந்திப்பில், ஏர் மார்ஷல் ஏ.கே. பார்தி, லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜீவ், வைஸ் அட்மிரல் பிரமோத், மேஜர் ஜெனரல் ஷர்தா ஆகியோர் கலந்து கொண்டு, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
அப்போது, இந்தியாவின் துல்லியமான தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் சேதம் அடைந்தது குறித்த வீடியோவை விமானப்படை ஏர் மார்ஷல் ஏகே பாரதி வெளியிட்டு, எவ்வாறு துல்லியத் தாக்குதல் திட்டமிடப்பட்டது என்பது குறித்து விளக்கினார். மேலும், இந்தியாவின் தாக்குதலில், முரிட்கே மற்றும் பஹவல்பூரில் செயல்பட்ட பயங்கரவாத முகாம்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்த வீடியோக்களையும் வெளியிட்டார்.
தொடர்ந்து அவர் பேசியபோது, பஹவல்பூர் மற்றும் முரிட்கேவில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்த இந்திய விமானப்படைக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இலக்குகள் நிர்ணயிக்கப்பட்ட பிறகு, பாதிப்பு குறைவாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை முதன்மையாகக் கொண்டு, துல்லியமாகத் தாக்கப்பட்டது. மே 9 – 10 ஆகிய நாட்களில் பாகிஸ்தான் ராணுவ ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்கள் நமது எல்லைக்குள் வந்தன. அவற்றால், நமது ராணுவ கட்டமைப்புகளை தாக்க முடியவில்லை.
கடந்த 9ம் தேதி இரவு 10:30 மணி அளவில், நமது நகரங்களில் ஏராளமான ட்ரோன்கள் ஆளில்லா விமானங்கள் பறந்தன. தரையிலும், எதிரிகள் நிர்ணயித்த இலக்குகளுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதற்காக வான் பாதுகாப்பு கவசம் தயார் நிலையில் இருதப்பட்டது. ஜம்மு, உதம்பூர், பதன்கோட், அமிர்தசரஸ், ஜெய்சால்மர், டல்ஹவுசி ஆகிய நகரங்களில் இந்த ட்ரோன்கள் பறந்தன. அவை அனைத்தும் சுட்டு வீழ்த்தப்பட்டன.
பயங்கரவாதிகளை மட்டும்தான் தாக்கினோம் என்பதற்கான ஆதாரங்களை கொண்டு வந்துள்ளோம். பாகிஸ்தானில் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன. பயங்கரவாதிகளை மட்டுமே தாக்குவதை உறுதியாகக் கொண்டோம். ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதிகளுக்கு தெளிவான செய்தியை தெரிவித்துள்ளோம் . ஏப்.22ல் பஹல்காமில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட கொடூரம் உங்களுக்கு தெரியும். பயங்கரவாதத்தை தண்டிக்க தெளிவான ராணுவ நோக்கத்துடன் நடத்தப்பட்டது ஆபரேஷன் சிந்தூர். பாகிஸ்தானில் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டன.
பாகிஸ்தானில் பதுங்கியிருந்த 100 பயங்கரவாதிகள் வரை கொன்றிருக்கிறோம் என்றார் லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் காய்.
தாக்குதல் நடக்கும்போதே பயணிகள் விமானங்கள் பறக்கவும் பாகிஸ்தான் அனுமதித்தது. பின்னடைவு இருந்தாலும், கவனத்தோடு தாக்குதலை இந்திய தரப்பில் முன்னெடுத்தோம். எந்த ஒரு பயணிகள் விமானமும் இந்திய தரப்பிலிருந்து தாக்கப்படவில்லை. நாங்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு பாகிஸ்தான் மக்களுக்கு பாதிப்பின்றி பதிலடி கொடுத்தோம் என்று மீண்டும் கூறினார் ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி.
சரியாக குறிவைத்து, முருட்கே பயங்கரவாத பயிற்சி மையத்தில் 4 முறை தாக்குதல் நடத்தப்பட்டது. பயங்கரவாத முகாம்கள் தவிர, வேறெந்த கட்டமைப்பையும் தாக்கவில்லை. பாகிஸ்தானின் விமான படைத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானின் ஆளில்லா விமானம், ட்ரோன் மூலம் இந்திய ராணுவ நிலைகளை தாக்க முயற்சி செய்தது. இந்திய நிலைகள் மீதான அனைத்து தாக்குதல் முயற்சிகளையும் வெற்றிகரமாக முறியடித்தோம். என்று உறுதியாகத் தெரிவித்தார் ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி.
எங்கு அடித்தால் வலிக்குமோ, அங்கு தாக்குதல் நடத்த முடிவு செய்தோம். மே 7 முதல் 10 வரை 40 வீரர்களை இழந்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தகவல் வெளியிட்டது. பாகிஸ்தானின் விமான படைத்தளங்கள் மீது இந்தியா தரப்பில் தாக்குதல் நடத்தப்பட்டது. நமது தாக்குதல் பயங்கரவாதிகள் மீது மட்டும்தான், ராணுவத்தின் மீது அல்ல என்பதை மீண்டும் உறுதியாகத் தெரிவிக்கிறேன் என்றார் ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி.
கடற்படை விழிப்போடு இருந்தது என்று விளக்கம் அளித்தார் கடற்படை அதிகாரி ஏ.என். பிரமோத் மேலும் அவர், அரபிக் கடலில் இந்திய கடற்படை தொடர் கண்காணிப்பில் இருந்தது. ராணுவம், விமானப்படையோடு இணைந்து, ஒருங்கிணைந்த கண்காணிப்பை நடத்தினோம். தாக்குதல் நிறுத்தம் இருந்தாலும், இந்திய கடற்படை தொடர் கண்காணிப்பில் இருக்கிறது என்று தெரிவித்தார் கடற்படை அதிகாரி ஏ.என். பிரமோத்.
செய்தியாளரின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் போது,
பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு பதிலடி அளிக்கும் வகையில், நாம் மீண்டும் லாகூர் மற்றும் குஜ்ரன்வாலாவில் உள்ள கண்காணிப்பு ரேடார் மையங்கள் மீது இலக்கு வைக்கப்பட்டது. காலை வரை ட்ரோன் தாக்குதல் தொடர்ந்தது. லாகூர் அருகே இருந்து ட்ரோன்களை ஏவிய போதும், பாகிஸ்தான் பயணிகள் விமானத்தை பறக்க பயணித்தது. தங்கள் நாட்டு விமானத்தை மட்டும் அல்லாமல் சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி அளித்தது. ஆனாலும் இந்திய விமானப்படை கட்டுப்பாட்டுடன் செயல்பட்டது.
நமது வான் பாதுகாப்பு அமைப்பு எந்த அச்சுறுத்தலையும் சமாளித்ததுடன், ராணுவ அமைப்புகள் மற்றும் சிவிலியன் மணடலங்களை பாதுகாத்தது.இந்தியா கட்டுப்பாட்டுடன் தாக்குதல் நடத்தியது.
ராணுவ உள்கட்டமைப்புகளை குறிவைத்தால் அதற்கு உடனடியாக பதிலடி கொடுப்பது என முடிவு செய்தோம். சக்லாலா, ரபிக்கி, ரஹீம்யார் கான் விமான படை தளங்கள் மீது தாக்குதல் நடத்தி, அத்துமீறலை பொறுத்து கொள்ள முடியாது என்ற தெளிவான செய்தியைஅனுப்பினோம். இதனைத் தொடர்ந்து சர்கோடா, புலாரி மற்றும் ஜகோபாபாத்திலும் தாக்குதல் நடத்தினேம்.
எந்ததளத்திலும் எந்த அமைப்பையும் தாக்கும் திறன் நம்மிடம் உள்ளது. பயங்கரவாத கட்டமைப்புகள் மட்டுமே நமது இலக்கு. துல்லியமாக தாக்குதல் நடத்தி இதனை நிறைவேற்றினோம். ஆனால், 7 ம் தேதி பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள், டுரோன்களை அனுப்பியது. அவை பெரும்பாலானவை சுட்டு வீழ்த்தப்பட்டன. 3 மட்டும் தாக்கினாலும், சிறிய அளவில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தியது.
நாம் பயங்கரவாதிகள் மீது மட்டும் தான் குறி வைத்தோம். ஆனால், பாகிஸ்தான் அப்பாவி மக்கள் மற்றும் ராணுவ கட்டமைப்புகளை குறிவைத்தது. இதற்கு கடுமையான பதிலடி கொடுத்தோம். பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் லாகூர் மற்றும் குஜ்ரன்வாலாவில் ரேடார் அமைப்புகளை சேதப்படுத்தினோம். பதற்றத்தை அதிகரிப்பது நமது நோக்கம் கிடையாது. பயங்கரவாதிகளுடன் மட்டுமே நமது மோதல். பாகிஸ்தான் ராணுவ கட்டமைப்புகளுடன் கிடையாது என்றார் ஏ.கே.பார்தி.





