
மக்களையும் ஆட்சியாளர்களையும், நீதித்துறையையும், அதிகாரிகளையும் திசை திருப்புவது ஒன்றை மட்டுமே தங்களின் முழுநேர தொழிலாகச் செய்து கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நிதி அமைச்சர், உள்துறை அமைச்சர் இப்போது தன் குடும்பத்தின் மூலம் அதனைத் தொடர வழிவகை மேற்கொண்டுள்ளார்..!
அவ்வளவு நல்லவனாய்யா நீயி..? வேறு ஒன்றுமில்லை.. இப்போது மீண்டும் எந்த அரசு அதிகாரிகளாவது அப்ரூவராக முனைந்தால்.. உங்கள் வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறும் என்பதை சூசகமாகத் தெரிவிக்கிறாராம்..!
ப.சிதம்பரம் வெளியிட்ட டிவிட்டர் பதிவுகள் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தன. இது குறித்து வசந்தன் பெருமாள் எழுதிய கட்டுரை..

திஹார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மக்கள் மன்றத்தில் தனது வாதங்களை வைக்கத் துவங்கி இருக்கிறார்.
அவர் கேட்டுக் கொண்டதன் பேரில் அவரது குடும்பத்தினர் அவர் சார்பாக ட்விட்டர் இணையத்தில் அந்த வாதத்தை பதிவு செய்து இருக்கிறார்கள்.
ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான 300 கோடி ரூபாய் அந்நிய செலாவணி அனுமதி முடிவை ஒரு டஜன் அதிகாரிகள் பரிசீலனை செய்து , ஒப்புதல் அளிக்கலாம் என்று எனக்கு பரிந்துரை செய்தார்கள். அவர்கள் எல்லாம் கைது செய்யப் படவில்லை. கடைசி கையெழுத்திட்ட தான் மட்டுமே கைது செய்யப் பட்டதாகவும் அந்த பதிவின் மூலம் ப.சிதம்பரம் தனது வாதத்தை முன் வைக்கிறார்!
ஆஹா , இது அரசியல் பழிவாங்கும் போக்கு தான். பாவம் தான் ப.சிதம்பரம் என்று மக்கள் நினைக்க வேண்டும் என்பது தான் இந்த வாதத்தின் நோக்கம்!ஆனால், உண்மை நிலை என்ன?

முன் ஜாமீன் மனுவின் மீது வாதிட்ட ப.சிதம்பரத்தின் வக்கீல்கள் டெல்லி உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் ஏற்கனவே வைத்த வாதங்கள் தான். அந்த வாதங்கள் தோற்றுவிட்டன.
வழக்கு வாத பிரதிவாத கட்டத்தை அடையும் போதும் வைக்கப்போகிற வாதங்கள் தான். தவிர, அரசாங்க துறை செயலாளர்களும் முக்கியமான அதிகாரிகளும் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்? ஒத்து வரும் அதிகாரிகள் ஒத்துவராத அதிகாரிகள் என்று அடையாளம் கண்டு மட்டுமே
நியமனம் செய்யப்படுகின்றார்கள்.
எந்த ஆட்சியும் இந்த விஷயத்தில் விதிவிலக்கு அல்ல! அமைச்சர் முடிவு செய்து விட்டு அதற்கு தகுந்தபடி கோப்புகள் தயாரிக்கப்படும் என்பது உயிரிழந்த ரகசியம்! அதனால் , அவர்கள் தான் பரிசீலனை செய்து முடிவும் எடுத்து எனக்கு பரிந்துரை செய்தார்கள் என்ற வாதம் சட்டத்தின் பார்வையில் சரியாக இருந்தாலும் , யதார்த்தம் வேறு!
* மேலும், குறைபாடுடைய முடிவு முறைகேடான முடிவு ஆகிய இரண்டுக்கும் அடிப்படை வித்தியாசம் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட முடிவால் நாட்டிற்கு நன்மை உண்டாகும் என்று கருதி அமைச்சரோ அதிகாரிகளோ எடுக்கும் ஒரு முடிவு , அவர்களின் கணிப்புக்கு மாறாக தவறாக பலனை வந்துவிடக்கூடும்.
அது குற்றம் அல்ல; சரியாக கணிக்க முடியாமல் போன பிழை. நோக்கம் சரியாக இருந்ததா என்பது தான் அங்கு கேள்வி! கணிப்புப் பிழைகள் மனித இயல்பு.

முறைகேடான முடிவு என்பது நாட்டின் நன்மையை முன்னிறுத்தாமல் தனிப்பட்ட ஆதாயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து எடுக்கப்படும் முடிவு!
ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் 300 கோடி ரூபாய் அந்நிய செலாவணி அனுமதி தந்து அதன் மூலம் ப.சிதம்பரம் பண ஆதாயம் பெற்றார்; அதை நேரடியாக பெறாமல் தனது மகனுக்கு கிடைக்கும்படி செய்தார் என்பது தான் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கு!
இந்த அனுமதி மூலம் ப.சிதம்பரம் சம்பந்தப்பட்டவர்களுக்கு பணம் கைமாறிய ஆதாரங்கள் இருக்கின்றன: அதே கோப்பில் கையெழுத்திட்ட அதிகாரிகளுக்கு பண ஆதாயம் கைமாறிய ஆதாரங்கள் இதுவரையில் கிடைக்கவில்லை : கிடைக்கும் போது அவர்களையும் சிறையில் அமைப்போம் என்று சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் வாதிட்டால் அதை நிராகரிக்க முடியாது!
* அதிகாரிகளை கைது செய்து ஒட்டுமொத்த அதிகாரவர்க்கத்தையும் அச்சத்தில் ஆழ்த்தி நிர்வாக முடக்கம் ஏற்படவேண்டும் என்று ப.சிதம்பரம் விரும்பலாம்!
* மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இரண்டாம் அலைக்கற்றை வழக்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழக்கு போன்றவை கிளம்பி புகழ்பெற்ற போது அரசு அதிகாரிகள் எந்த கோப்பிலும் கையெழுத்திட தயக்கம் காட்டியதால் அரசு நிர்வாக முடக்கத்தை சந்தித்தது!
* முறைகேடான நடவடிக்கைகளில் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் அதிகாரிகள் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டு வருகிறார்கள் என்பது
இந்த செய்திக்கு தொடர்பில்லாத ஆனால் தொடர்புடைய தகவல்!
- வசந்தன் பெருமாள் Vasanthan Perumal



