
தென்னாப்ரிக்கா டர்பனில் தமிழரான பிரகாஷ் படையாச்சி அவர்கள், தென்னாப்ரிக்க அரசின் ஒத்துழைப்புடன் “மனித உரிமைகளும் ஈழத்தமிழருக்கு நீதியும் அமைதியும்” என இரண்டு நாட்கள் நடத்திய மாநாட்டில் கலந்துகொள்வதற்கான பயணத்திற்கு அனைத்து நடவடிக்கைகள் மேற்கொண்டும் அண்ணாச்சி வைகோ அவர்களுடைய தாயார் மரணச் செய்தியினால் கலந்துகொள்ள இயலவில்லை.
தென்னாப்ரிக்காவில் தமிழர்களும் மற்றும் தென் மாநிலங்களைச் சேந்தவர்களும் 18ம் நூற்றாண்டின் இறுதியிலே அங்கு சென்று இன்றுவரை அங்கு முக்கிய பிரமுகர்களாக வாழ்ந்துவருகின்றனர்.
உத்தமர் காந்தி அவர்கள் தென்னாப்ரிக்காவில் இருந்தபொழுது தமிழர்களான தில்லையாடி வள்ளியம்மை, நாகப்பன், சூசை, நாராயணசாமி, செல்வம், தம்பி நாயுடு போன்றோர் அவருக்குத் துணையாக இருந்தனர்.
இன்றைக்கும் அங்கு படையாச்சி, முதலியார், நாயுடு, நாயக்கர் என்று தங்கள் பெயர்களுக்குப்பின் அழைக்கப்படுவதும் ஆவணங்களில் குறிப்பிடுவதும் வாடிக்கை ஆகும்.
தென்னாப்ரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தை காந்தியார் துவங்கியபோது இவர்களெல்லாம் அவருக்கு மிகுந்த உதவியாக இருந்தவர்கள். குறிப்பாக காந்தியாருக்குத் தளபதியாக தம்பி நாயுடு விளங்கினார். இவருடைய ஐந்து தலைமுறையினரும் நெல்சன் மண்டேலாவுடன் இணைந்து அந்நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள்.
காந்தியின் சகாவான தம்பி நாயுடு 1933அக்டோபர் 30ம் நாள் காலமானார். அவருக்கு தென்னாப்ரிக்க அரசு நினைவு அஞ்சல் தலையும், அவர் பெயரை நகர வீதி ஒன்றிற்கும் சூட்டியது. தம்பி நாயுடு அவர்களின் பெற்றோர் அன்றைய மாயவரத்துக்கு அருகில் உள்ள மத்தூர் என்ற இடத்திலிருந்து மொரீஷியஷிற்குச் சென்றனர்.

பின், அங்கிருந்து தென்னாப்ரிக்காவிலுள்ள ட்ரான்ஸ்வாலுக்குச் சென்று குடிபெயர்ந்தனர். தென்னாப்ரிக்காவில் இன்றைக்கும் தமிழர்களையும், தெலுங்கர்களையும் மதராசி என்று அழைப்பதுண்டு. தென்னாப்ரிக்க கருப்பின மக்களைப்போல இவர்களும் நிறவெறியினால் புறக்கணிக்கப்பட்டனர். 1906ல் பாரிஸ்டராக காந்தி தென்னாப்ரிக்கா சென்றபொழுது, சட்டமறுப்புப் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டார். அதற்கு உறுதுணையாக சுந்தர் பண்டிட், தம்பி நாயுடு, தில்லையாடி வள்ளியம்மை போன்றவர்கள் இருந்தனர்.
போராட்டம் ஆரம்பிக்கும் போது சுந்தர் பண்டிட் ஒதுங்கிக்கொண்டதால், தம்பி நாயுடுவை இந்தப்போராட்டத்திற்குத் தளபதியாக காந்தி அறிவித்தார். இந்தப் போராட்டங்களில் தம்பி நாயுடு 1893முதல் 1914வரை தென்னாப்ரிக்க வெள்ளை அரசாங்கத்தை எதிர்த்து 21முறை சிறைக்குச் சென்றார். இதில் 14முறை கடும் தண்டனைகளை அனுபவைத்தார். இவருடைய மனைவி வீரம்மாளும் இவரோடு பலமுறை சிறை சென்றவர்.
தம்பி நாயுடு குடும்பத்தார் காந்தியுடனே அவருடைய டால்ஸ்டாய் பண்ணையிலே தங்கியிருந்தனர். காந்தி இந்தியா திரும்பியவுடன் தம்பி நாயுடு அவர்களுடைய நான்கு பிள்ளைகளையும் போராட்டக்களத்திற்கு அர்ப்பணித்தார். இவர்களை காந்தியார் தன்னுடைய புதல்வர்களாக தத்தெடுத்து, அவர்களை தாகூரின் சாந்தி நிகேதனுக்கு கல்விகற்க அனுப்பியும் வைத்தார். இதில் பக்கிரிசாமி என்ற மகன் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார்.
பார்த்தசாரதி, பாலகிருஷ்ணன் என்ற இருவரும் 1919ல் படிப்பை முடித்து தென்னாப்ரிக்கா திரும்பிவிட்டார்கள். மற்றொருவரான ராய் என்ற நாராயணசாமி மட்டும் 1928வரை இந்தியாவிலே தங்கி இருந்தார். இவரும் காந்தியின் மகன் தேவதாஸ் காந்தியும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். 1928ல் தென்னாப்ரிக்கா திரும்பிய நாராயணசாமி டாக்டர்.யூசும், டாக்டர் குணரத்தின நாயுடு, டாக்டர் மாண்டி நாயக்கர் ஆகியோருடன் இணைந்து நேட்டாலில் இந்திய காங்கிரஸ் கட்சியினை ஆரம்பித்து இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக தென் அமேரிக்காவில் இருந்து குரல் எழுப்பினர். அத்தோடு தென்னாப்ரிக்க விடுதலைப் போராட்டத்திற்காக ஆங்கிலேய அரசை எதிர்த்து போராடி வந்தனர்.
ஒருகட்டத்தில் நாராயணசாமி நாயுடு கம்யூனிஸ்டாக மாறினார். 1953ல் நாராயணசாமி காலமானார். இவரது மனைவியும் தம்பி நாயுடு அவர்களின் மருமகளுமான மனோன்மணி என்ற அம்மா நாயுடு தன்னுடைய மாமனார் மற்றும் மாமியாரைப் போன்றே தென்னாப்ரிக்க விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு அங்குள்ள கருப்பர்கள் மத்தியில் அன்னையாகத் திகழ்ந்தார். நெல்சன் மண்டேலா குடும்பத்தோடு மிக நெருக்கமாகவும் இருந்து பல போராட்டங்களில் சிறைக்கும் சென்றார்.

இவரைப்போலவே தம்பி நாயுடு அவர்களின் மகளான தயா நாயகி என்ற தைலம்மாள் 1959ல் மண்டேலாவுடன் தேசத் துரோக சதித்திட்டக் குற்றங்களுக்காக விசாரணைக் கைதிகளாக இருந்த வால்டர் சிசுலு, கத்தரடா, கிச்சுலு, ஜோஸ்லோவா போன்ற 30 போராளிகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் மீறி உணவு வழங்கினார். 27 ஆண்டுகள் சிறைவாசம் முடித்து மண்டேலா 1990ல் விடுதலையானபொழுது அம்மா நாயுடுவையும், தம்பி நாயுடுவின் மகளான தயா நாயகியையும் ஆரத்தழுவி தன்னுடைய வாஞ்சையை வெளிப்படுத்தினார்.
1996ல் தென்னாப்ரிக்கா விடுதலை பெறும் முன்னரே தைலம்மாள் 1991லே காலமானார். இந்திய அரசு 1988ல் தம்பி நாயுடுவின் மருமகளான மனோன்மணி மற்றும் அவரது பேத்தியுமான சாந்தியையும் அரசுவிருந்தினராக இந்தியாவுக்கு அழைத்து கௌரவித்தது. தென்னாப்ரிக்கா விடுதலை பெற்றதும் அந்நாட்டின் உயரிய விருதான லுத்தூலி விருதினை வழங்கியது.
1993ல் தம்பிநாயுடுவின் மருமகள் மனோன்மணி என்ற அம்மாநாயுடு காலமானார். இவருடைய மகளும் தம்பி நாயுடுவின் பேத்தியுமான சாந்தி அவர்களை தென்னாப்ரிக்க வெள்ளை அரசு நெல்சன் மண்டேலாவின் மனைவி வின்னி மண்டேலாவையும் சதிக்குற்றத்தில் சிக்கவைத்த சாட்சியங்கள் கேட்டுக் கொடுமைப்படுத்தும்போதும் அதற்கு இணங்காமல் தைரியமாக அவற்றை எதிர்கொண்டார். சாந்தியின் சகோதரரான இந்திரஸ் என்ற எழுச்சிநாதன் நாயுடுவும் நெல்சன் மண்டேலாவுடன் ரோமன் தீவில் பத்தாண்டுகள் கடும் சிறைத்தண்டனை அனுபவித்தவர். அவரும் 1991ல் விடுதலை பெற்றார்.
அம்மா நாயுடுவின் மற்றோரு புதல்வி ரம்னியும் விடுதலைப் போராளி ஆவார். அவர் 1964ல் முகம்மது இஸ்மாயில் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
கடுமையாக அத்துமீறல்களை எதிர்கொள்ளவேண்டிய சூழலில் தம்பிநாயுடுவும் அவரது குடும்பத்தினரும் சொல்லன்னாத் துயர்களை அனுபவித்தனர். அம்மா நாயுடுவின் மற்றொரு மகனான பிரேமா நாதனும் அவருடைய மனைவி கமலாவும் வீட்டுக்காவலில் சிறைவைக்கப்பட்டனர். இவருடைய பத்து வயது மகன் குபன் நாயுடு தென்னாப்ரிக்க விடுதலைப் போராளிகளை விடுதலை செய்யும்படி நீதிமன்ற வளாகத்திலேயே கோஷம் போட்டதற்காக கைதுசெய்யப்பட்டு தனது மெட்ரிக் தேர்வை சிறையிலிருந்தே எழுதினான்.
தமிழக மாயவரத்திலிருந்து கிட்டத்தட்ட 18ம் நூற்றாண்டின் இறுதியில் தென்ஆப்ரிக்கா சென்று வாழ்ந்த குடும்பத்தின் கதையாகும். இன்றைக்கும் தென்னாப்ரிக்காவில் தமிழகத்தையும் மற்றும் நமது தென்மாநிலத்தையும் சார்ந்த மக்களின் சந்ததியினர் வாழ்ந்துவருகின்றனர்.
தம்பி நாயுடுவுடைய சந்ததியினரை சந்தித்து உறவாடவும், அங்கு தங்கவும் அன்புக்குரிய தாமோதரன் அவர்கள் இந்த பயணத்தின் போது ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் திட்டமிட்டவாறு பயணிக்க இயலவில்லை. இருப்பினும் என்னுடைய விபரங்களை அறிந்தவுடன், குபன் நாயுடு குடும்பம் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொல்லியுள்ளார்கள். எப்படியும் அங்கு செல்லவேண்டும்.
தம்பி நாயுடு, தில்லையாடி வள்ளியம்மை, சூசை, நாராயணசாமி, செல்வன் போன்றோர்களுடைய பணிகளும் தியாகங்களும் தென்னாப்ரிக்க நாட்டின் விடுதலையிலும், நிறவெறிக்கு எதிரான போராட்டத்திலும் உலக வரலாற்றில் தமிழர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி.
உலகமே கொண்டாடிய உத்தமர் காந்தி, நெல்சன் மண்டேலா இருவரின் தளபதிகள் தான் நம்மண்ணின் தவப்புதல்வர்கள். வாழ்க அவர்கள் புகழ்.
- கே.எஸ். ராதாகிருஷ்ணன் (வழக்குரைஞர், திமுக., செய்தி தொடர்பாளர்)