spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைமகாகவி பாரதியார் பிறந்த நாள் சிந்தனைகள்!

மகாகவி பாரதியார் பிறந்த நாள் சிந்தனைகள்!

- Advertisement -

மனிதன் சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கு உரிய நெறிமுறைகளாக பாரதியார் கவிதைகளில் ஆங்காங்கே வெளியிட்டுள்ள பத்துக் கட்டளைகளை.

1.கவலையற்றிருங்கள்
——————————
கவலைப்படுவதையே இயல்பாகக் கொண்டிருக்கிறான் மனிதன். இங்ஙனம் எப்பொழுதும் கவலையிலே இணங்கி நிற்பவனைப் ‘பாவி’ எனச் சாடுகின்றார் கவிஞர். வீணாகக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதால் மட்டும் அவனது கவலை தீர்ந்துவிடாது. எனவே,
“நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கிஅஞ்சி உயிர்வாழ்தல் அறியாமை”
என்கிறார் பாரதியார். அவரது கருத்தில் கவலைப்படுதலே கருநரகம்; கவலையற்று இருத்தலே முக்தி.

2.அச்சம் தவிருங்கள்
———————————
‘அஞ்சி யஞ்சிச் சாவார் – இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே’ எனத் தற்கால பாரத மக்களின் நிலைமையைப் பற்றி நெஞ்சு பொறுக்காமல் வெதும்பிப் பாடியவர் பாரதி. ‘அறம் செய விரும்பு!’ என ஆத்திசூடியைத் தொடங்கிய அவ்வைக்கு மாற்றாக, ‘அச்சம் தவிர்!’ என ஆத்திசூடியைத் தொடங்கிப் புதுமை படைத்தவர் அவர்.
“யார்க்கும் அஞ்சோம், எதற்கும் அஞ்சோம்;எங்கும் அஞ்சோம், எப்பொழுதும் அஞ்சோம்”
என்பதே அச்ச உணர்வைப் போக்கி வீர உணர்வைக் கைக்கொள்வதற்கு அவர் படைக்கும் தாரக மந்திரம்.

3.சஞ்சலமின்றி இருங்கள்
———————————
நிறைவான – வாழ்வுக்கு, மனம் சஞ்சலம் இல்லாமல் – சலனம் இல்லாமல் – இருக்க வேண்டும்.
‘தலையில் இடி விழுந்தால் சஞ்சலப்படாதே; ஏது நிகழினும் நமக்கேன் என்றிரு, பராசக்தி உளத்தின் படி உலகம் நிகழும்’ என அறிவுறுத்துகின்றார் பாரதியார். ‘திருவைப் பணிந்து, நித்தம் செம்மைத் தொழில் புரிந்து, வருவது வருக என்றே மகிழ்வுற்று இருக்க வேண்டும்’ என்பதே அவரது அடிப்படையான வாழ்வியல் சிந்தனை.

4.போனதற்கு வருந்துதல் வேண்டா
——————————————-
நடந்து போனதை நினைத்து வருந்துவதும், நடக்கப் போவதை எண்ணி மயங்குவதுமே சாதாரண மனிதனின் இயல்புகள். இவ்விரு இயல்புகளிலிருந்து விடுபட்டு, ‘இன்று புதிதாய்ப் பிறந்தோம்’ என்ற – நம்பிக்கையோடு – வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்த வேண்டும்.
“சென்றதுஇனி மீளாது… நீர்இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டுதின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்”என்பது அவர் அறிவுறுத்தும் வாழ்வியல் பாடம்.

5.கோபத்தை வென்றிடுங்கள்
————————————
‘சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி’ என்பது வள்ளுவம். இதனை அடியொற்றி சினத்தின் கேட்டினையும் பொறுமையின் பெருமையினையும் பாரதியார் பாடியுள்ளார்.
“சினங் கொள்வார் தமைத்தாமே தீயாற்சுட்டுச்செத்திடுவார் ஒப்பாவார்…கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி யுண்டாம்…கொடுங் கோபம் பேரதிர்ச்சி; சிறிய கோபம்ஆபத்தாம் அதிர்ச்சியிலே சிறிய தாகும்…”

6.அன்பு செய்யுங்கள்
—————————-
‘அன்பே சிவம்’ என்பது திருமூலர் வாக்கு. ‘வையகத்தில், அன்பிற் சிறந்த தவமில்லை; அன்புடையார், இன்புற்று வாழ்தல் இயல்பு’ என்பது பாரதி உணர்த்தும் வாழ்க்கை நெறி. சுருங்கக் கூறின், அன்பே அவரது மதம்.

7.தன்னை வென்றாளும் திறமையைப் பெறுங்கள்
———————————————
ஒருவன் வாழ்க்கையில் உயர முக்கியமானது அவன் தன்னை அறிதல்; – தன்னை ஆளல்; – தன்னை வெல்லல். ‘தனைத்தான் ஆளுந்தன்மை நான் பெற்றிடில், எல்லாப் பயன்களுமே தாமே எய்தும்’ என ‘விநாயகர் நான்மணி மாலை’யில் பாடுவார். ‘ஆத்ம ஜயம்’ என்ற வேதாந்தப்பாடலில், “தன்னை வென்றாளும் திறமை பெறாதுஇங்கு
தாழ்வுற்று நிற்போமா?” என்றார்.

8. நல்ல மனத்தைப் பெறுங்கள்
—————————————-
மனத் துய்மையின் இன்றியமையாமையை நன்கு உணர்ந்த கவியரசர் பாரதியார் கவிதைகளில் ஆங்காங்கே மனத்திற்குப் பல அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
“ முன்றிலில் ஓடுமோர் வண்டியைப் போலன்று,மூன்றுலகும் சூழ்ந்தேநன்று திரியும் விமானத்தைப் போல் ஒருநல்ல மனம் படைத்தோம்” என்பது மனத்தை வாழ்த்திக் கவிஞர் பாடியிருக்கும் பாட்டு.
மனிதன் ‘பன்றியைப் போல் இங்கு மண்ணிடைச் சேற்றிற் படுத்துப் புரளும்’ மனதினை வேண்டாது, ‘விமானத்தைப் போல் விண்ணில் பறந்து வாழும்’ மனத்தினைப் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும்.
“மனத்தைக் குழந்தை மனம் போலே வைத்துக் கொள்ளுங்கள். கபடமின்றி இருங்கள் என்று பாரதியார் ஓயாமல் உபதேசிப்பார்” என அவரது துணைவியரான செல்லம்மா பாரதி குறிப்பிடுவார்.

9 இயற்கை(தெய்வம்)காக்கும் என நம்புங்கள்
———————————————-
நம் வாழ்வில் வரும் சோதனைகள், – நெருக்கடிகள், – துன்பங்கள், – தொல்லைகள் எல்லாவற்றையும் ‘மன்னும் சக்தியாலே’ – ‘எல்லாம் புரக்கும் இறை நம்மையும் காக்கும்’ என்ற நம்பிக்கையாலே – வெற்றி கொள்ளலாம் என ஆழமாக நம்புகின்றார் பாரதியார்.
தேடிஇயற்கை சரணடைந்தால், கேடதனை நீக்கி, கேட்ட வரம் தருவான் என்கிறார்.
“ நம்பினார் கெடுவதில்லை; நான்கு மறைத் தீர்ப்பு;

10.அமரத் தன்மை எய்துங்கள்
————————————-
‘அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி. அகத்திலே அன்பினோர் வெள்ளம். பொழுதெலாம் இறைவனது பேரருளின் நெறியிலே நாட்டம், கரும யோகத்தில் நிலைத்திடல்’ என்னும் இப் பண்புகளையே அருளுமாறு எல்லாம் வல்ல
பரம்பொருளிடம் வேண்டுகோள் விடுக்கிறார் பாரதியார். அவர் சுட்டும் இப் பண்புகள் எல்லாம் ஒரு மனிதனின் வாழ்வில் – ஆளுமையில் – படியுமாயின், அவன் மண்ணிலேயே விண்ணைக் காண்பான்; அமரத் தன்மையை அடைவான் என்பது உறுதி.

பாரதியார் வலியுறுத்திப் பாடியுள்ள இப் ‘பத்துக் கட்டளை’களைக் கசடறக் கற்று, அவற்றின் வழி நிற்கும் மனிதனின் வாழ்வு நிறைந்த வாழ்வாக விளங்கும். இம் மண்ணுலக வாழ்விலேயே நல்லவையே மனிதனுக்கு வந்து சேரும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe