
2017 ஆகஸ்ட் மாதத்தில் உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்துவமனையில் பிராணவாயு உருளைகள் பற்றாக்குறையின் காரணமாக குழந்தைகள் உயிரிழந்தது குறித்து தமிழக ஊடகங்கள் பதறி துடித்து செய்திகளை குவித்து கொண்டேயிருந்தன.
தொடர்ந்து இது குறித்த விவாதங்கள் பலநாட்களுக்கு நடைபெற்றன. அந்த மாநிலத்தில் ஆளும் பாஜக குறித்த பல்வேறு விமர்சனங்களை தமிழக ஊடகங்கள் செய்து கொண்டிருந்தன.
கடந்த மாதம் ராஜஸதான் மாநிலம் கோட்டாவில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உயிரிழந்தது குறித்து பொத்தாம் பொதுவாக செய்திகளை வெளியிட்ட தமிழக ஊடகங்கள் இது குறித்த ஒரு விவாதத்திற்கு கூட முன்னெடுக்காதது ஏன்?
கோரக்பூரில் உயிரிழந்த குழந்தைகளுக்கு பொங்கி எழுந்த ஊடகங்கள், கோட்டாவில் உயிரிழிந்த குழந்தைகளை புறந்தள்ளியது ஏன்?
தவறு எங்கே நடந்தாலும், ஊடகங்கள் தட்டி கேட்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை.
கோரக்பூர் விவகாரத்தில் ஒவ்வொரு நாளும் விவாதங்களுக்கு சென்று உரிய தகவல்களை நாம் கொடுத்து கொண்டிருந்தோம். பல விமர்சனங்களை தாங்கி கொண்டு பொறுமையாக பதிலளித்து கொண்டிருந்தோம்.
உத்திரப்பிரதேசமோ, ராஜஸ்தானோ, தவறு எங்கு நடந்தாலும் அது கண்டிக்கப்பட வேண்டியதே.
உத்திர பிரதேசத்தில் 2017 செப்டம்பர் வரை நடைபெற்ற குழந்தைகள் உயிரிழப்பு 1317. பாஜக அரசில் இது போன்று நடக்கலாமா . நிர்வாகம் செயலிழந்து விட்டது என்றெல்லாம் கதறியவர்கள், அதற்கு முன் 2016ல் 6121, 2015ல் 6917, 2014ல் 5850 குழந்தைகள் அதே மருத்துவமனையில் உயிரிழந்தது போது வாய் மூடி மௌனம் காத்தது ஏன்?
காங்கிரஸ் கட்சி ஆளும் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் சென்ற வருடம் மட்டும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உயிரிழந்து குறித்து பேச மறுப்பதேன்?
உத்திரப் பிரதேசத்தில் நடந்த விவகாரத்தை ஆளும் பாஜகவின் மீதான விமர்சனமாக முன்வைத்த தமிழக ஊடகங்களும், தமிழக எதிர்க்கட்சிகளும், தற்போது ராஜஸ்தான் விவகாரம் குறித்து அமைதி காப்பது ஏன்? உத்திரபிரதேச குழந்தைகள் மீது பாசம். ராஜஸ்தான் குழந்தைகள் மீது வெறுப்பு ஏன்?
ராஜஸ்தான் கோட்டா மருத்துவமனையில் 50 விழுக்காடு உபகரணங்கள் செயலிழந்து போயிருப்பது குறித்து விவாதம் செய்ய, காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியான திமுக.,வை கேள்வி கேட்காது இருப்பதன் மர்மம் என்ன?
அந்த மருத்துவமனையில் உள்ள 19 காற்றோட்ட குழாய்களில் (Ventilators) செயல்படாது இருந்தது என்பதையும்,111 உட்செலுத்தும் குழாய்களில் (Infusion Pumps) 81 செயலிழந்த நிலையில் இருந்தன என்பதையும், 28 தெளிகருவிகளில் 22 பணியாற்றவில்லை என்பதையும், 38 நாடி பிராண வாயு அளப்பான்களில் (Oxy Meters) 6 மட்டுமே செயல்பட்டுக்கொண்டிருந்தது என்பதையெல்லாம் விவாதம் செய்யாது மறந்தது அல்லது மறைத்தது ஏன்?
அரசு இயந்திரங்கள் செயல்படாமல் போவது தவறு தான். நிர்வாகமின்மை, அலட்சியம் என்பதெல்லாம் குற்றம் தான். எந்த அரசு செய்தாலும் தவறு தான். ஆனால், பாஜக அரசுகள் குறித்து விமர்சனத்தை வைக்கும் ஊடகங்கள் காங்கிரஸ் அரசுகள் குறித்து மௌனம் காப்பது ஏன்?
உண்மையிலேயே பொது அக்கறை மற்றும் பொறுப்புணர்ச்சி இருந்தால் இதில் பாரபட்சம் காட்டுவது ஏன்? பாஜக தவறுகளை திருத்தி கொள்ளும்.
ஆனால் ஊடகங்கள் தவறுகளை சுட்டிக் காட்டுவதில் உள்ள பாரபட்சங்களை திருத்தி கொள்ளுமா? உள்நோக்கத்தோடு பாஜகவை குறிவைக்கும் முயற்சி ஏன்?
ஊடகங்கள் அரசியல் செய்வது தேசத்திற்கு நல்லதல்ல.
- நாராயணன் திருப்பதி.



