Homeகட்டுரைகள்ஆன்மீகப் போராளிகள்; மகாகவியும் சுவாமிஜியும்!

ஆன்மீகப் போராளிகள்; மகாகவியும் சுவாமிஜியும்!

bharathi-and-vivekananda
bharathi-and-vivekananda

ஆன்மீகப் போராளிகள் – மகாகவியும் சுவாமிஜியும்
கட்டுரை: பத்மன்

மகாகவி சுப்ரமண்ய பாரதியாரின் நினைவு தினம் செப்டம்பர் 11-ஆம் தேதி – மறைந்த ஆண்டு 1921. இதே தேதியில்தான், அதாவது கடந்த 1893-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதியில் தான் அமெரிக்காவின் சிகாகோ நகரில் சர்வசமய மாநாட்டில் ஹிந்து மதம் மற்றும் பாரதத்தின் பெருமையை நிலைநாட்டும் தனது உலகப் புகழ்பெற்ற சொற்பொழிவை சுவாமி விவேகானந்தர் ஆற்றினார்.

முண்டாசும் முரட்டு மீசையும் கொண்ட மகாகவியின் தோற்றமும், மீசை மழித்த முகமெனினும் முண்டாசுக் கட்டும் முறுக்கேறிய உடல்வாகும் கொண்ட சுவாமிஜியின் தோற்றமும் வீரமிகு ஆண்மையின் அடையாளங்கள். அதேநேரத்தில் பெண்ணுரிமைக்காகக் கனிவுடன் மட்டுமல்ல கம்பீரமாகவும் குரலெழுப்பிய முன்னோடிகள் அவர்களிருவரும்.

ஆண்மை என்பது ஆளும் திறன் – பிறரை மட்டுமல்ல, தன்னையும் அடக்கி ஆளும் திறன். அதேபோல் பெண்மை என்பது பேணும் கலை – தன்னை மட்டுமல்ல, பிறர் நலனையும் பேணும் கலை. ஆணுக்குள் பெண்மையும், பெண்ணுக்குள் ஆண்மையும் புதைந்து கிடக்கிறது. இதுதான் அர்த்தநாரீஸ்வர தத்துவம். நவீன விஞ்ஞான ஆய்வுக் கருத்துகளும், இந்தத் தத்துவத்தைத்தான் வேறு வார்த்தைகளில் மொழிகின்றன.

ஆண்கள் தங்கள் சுயநலத்துக்காக வெளிவேஷத்தோடு காட்டும் பரிவு பெண்களுக்கு அவசியமில்லை என்றும், மாதர்குலம் தம்மைத்தாமே பலவீனர்கள் என்று நினைப்பதை விட்டொழித்து மன மற்றும் ஆன்ம பலத்தோடு உலக வாழ்க்கையை அணுகவேண்டும் என்றும் உண்மையான அக்கறையோடு உபதேசித்தவர் சுவாமிஜி.

“பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா” என்றும், “ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் இந்த நாட்டிலே” என்றும் ஆனந்தக் கூத்தாடியவர் மகாகவி பாரதி. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று பெண்ணடிமைத்தனம் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில், “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்” என்று தன்னையே பெண்ணாக பாவித்துக்கொண்டு, உண்மையான பெண் சுதந்திரம் போதித்தவர், மகாகவி பாரதி.

அவர் இப்படிப்பட்ட பெண்கள் முன்னேற்றப் புரட்சிக்காரராக உருவானதற்கு ஒருவகையில் சுவாமிஜிதான் காரணம்.

1905-ல் வாராணசியில் (காசியில்) நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்குச் சென்ற மஹாகவி பாரதி, டம்டம் நகரில், சுவாமிஜியின் சீடர் சகோதரி நிவேதிதாவைச் சந்தித்தார். அப்போது மனைவியை அழைத்துவரவில்லையா? என்று சகோதரி நிவேதிதா கேட்க, பெண்பிள்ளைகளை இதுபோல் அழைத்து வரும் வழக்கம் இல்லை என்று பதில் கூறியிருக்கிறார் பாரதி.

அப்படியானால், நீங்கள் கேட்கும் தேச சுதந்திரம் எப்படிப் பூர்த்தியாகும்? என்று கேட்டார் சகோதரி நிவேதிதா. அப்போதுதான் மகாகவியின் ஞானக்கண் விழித்தது. சகோதரி நிவேதிதையை தனது ஆன்மீக குருவாக ஏற்றார் மகாகவி பாரதியார். அவரது பேச்சிலும், மூச்சிலும் தேச சுதந்திரத்தோடு, பெண் சுதந்திரமும் புகுந்து கொண்டது.

அந்த வகையில் சுவாமிஜிக்கு மகாகவி சீடர் வழிப் பேரப்பிள்ளை.

சுவாமிஜியின் பல ஆங்கிலச் சொற்பொழிவுகளைத் தமிழில் மொழிபெயர்த்து, தான் துணை ஆசிரியராகப் பணியாற்றிய சுதேசமித்திரனில் வெளியிடச் செய்திருக்கிறார் மகாகவி. சுவாமிஜியின் இளைய சகோதரர் பூபேந்திரநாத் தத்தா சென்னைக்கு வருகை தந்தபோது பூபேந்திரர் விஜயம் என்ற பெயரில் வாழ்த்துக் கவிதையைப் படைத்துள்ளார் மகாகவி.

தனது ஆன்மீக குரு நிவேதிதை மீதும் அவர்தம் குருவான சுவாமி விவேகானந்தர் மீதும் அளவற்ற அன்பும் மதிப்பும் கொண்டவர் மகாகவி பாரதியார். அதேநேரத்தில் சுவாமிஜியோடு மாறுபடும் ஆன்மீக, சமூகக் கருத்துகளை பட்டவர்த்தனமாகவே பகர்ந்துள்ளார் பாரதியார். அதுதான் பாரதி.

இருவருமே பகவத் கீதைக்கு எழுதியுள்ள உரையே இதற்குத் தக்கதொரு சான்று. பகவத் கீதையின் உட்பொருளை சுவாமி விவேகானந்தர் பல்வேறு உபநிஷத மேற்கோள்களைக் கொண்டே நிலைநாட்டினார்.

வேதாந்தம் எனப்படும் உபநிஷதக் கருத்துகளின் மிகச் சிறந்த விளக்கவுரைதான் பகவத் கீதை என்பது சுவாமி விவேகானந்தரின் திண்ணமான கருத்து. அவரது பகவத் கீதை விளக்கவுரையில், துறவு வாழ்க்கையே மோக்ஷத்துக்கான சாதனம் என்பது வலியுறுத்தப் பட்டிருக்கும். ஆனால், மகாகவி உபநிஷதங்களோடு ஓரளவு உடன்பட்டாலும், “வேதத்தின் கொள்கையை நிலைநாட்டுவதற்காகவே பகவத் கீதை செய்யப் பட்டது” என்ற நிலைப்பாட்டையே தனது பகவத் கீதை முன்னுரையில் முன்வைக்கிறார்.

ரிக் வேதத்தின் புருஷ சூக்தம் இஃதெல்லாம் கடவுள் என்று கூறும் கருத்தையொட்டியே பகவத் கீதையை ஸ்ரீ கிருஷ்ணர் மொழிந்தார் என்பதே மகாகவியின் முடிவு.
மேலும், “துறவறத்தைப் போலவே இல்லறமும் மோக்ஷத்துக்குரிய சமமான சாதனம் என்று பகவத் கீதை சொல்லியிருப்பது மிகப் பெரிய ஆறுதல்” என்கிறார் பாரதியார். அதாவது துறவறத்தின் மூலமே மோக்ஷம் சாத்தியம் என்ற சுவாமிஜியின் வாதத்தை மறுத்துரைக்கிறார் மகாகவி.

“துறவு வாழ்க்கை வாழ்ந்த மிகப் பெரிய மகான்கள்கூட உலகத்தில் மானுடர் எய்தற்குரிய பரிபூரண வாழ்க்கை வாழ்ந்தனர் என்று கூறத்தகாது” என தைரியமாகச் சொல்கிறார் மகாகவி.

வேதகாலத்தில் துறவு வழி என்பது ஹிந்துக்களுக்குள்ளே கிடையாது என்று அடித்துக்கூறும் மகாகவி, மகாபாரதத்திலும் இன்ன பிற முந்தைய புராணங்களிலும் கூறப்பட்டுள்ள வேதரிஷிகளின் சரித்திரங்களை இதற்கு மேற்கோள் காட்டுகிறார்.

வசிஷ்டர், வாமதேவர் உள்ளிட்ட அனைத்து ரிஷிகளும் குறிப்பிட்ட காலம் வரை பிரம்மசர்யம் காத்து கொடிய தவம் புரிந்தாலும்கூட பின்னர் இல்லறம் புகுந்து, மணம் புரிந்துகொண்டு மனைவி, மக்களுடனேயே இன்புற்று வாழ்ந்தனர் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

சுவாமிஜி துறவறத்தைத் தூக்கிப் பிடிப்பதற்கான காரணத்தையும் மகாகவி எடுத்துரைக்கிறார். “சுவாமி விவோகாநந்தர் வேதத்தின் பிற்சேர்க்கைகளாகிய உபநிஷத்துக்களையே முக்கியமாகப் பயின்றவர். இந்த உபநிஷத்துக்கள் வேதாந்தம் என்ற பெயர் படைத்தன. அதாவது வேதத்தின் நிச்சயம். இவை வேத ரிஷிகளால் சமைக்கப்பட்டனவல்ல. பிற்காலத்தவரால் சமைக்கப்பட்டன.

ஸம்ஹிதைகள் என்று மந்திரங்கள் சொல்லப்படுவனவே உண்மையான வேதங்கள்” என்று விளக்கம் தருகிறார் பாரதியார். பிற்காலத்தில் துறவு வாழ்க்கையும், மாயாவாதமும் முக்கியத்துவம் பெற்றதற்கு பௌத்தத்தின் தாக்கங்களே காரணம் என்பது மகாகவியின் வாதம்.

நமது பாரதப் பண்பாட்டின் பாரம்பரிய வழக்கமான இந்த ஆரோக்கியமான விவாதம், நம்மை மேலும் மேம்படுத்தட்டும்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,100FansLike
380FollowersFollow
76FollowersFollow
74FollowersFollow
3,951FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

பொன்னியின் செல்வன்-3 நாட்களில் ரூ.200 கோடி வசூல் ..

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் பாகம் 1' திரைப்படம் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200...

வலிமை, பீஸ்ட் படங்களுக்குப் பிறகு வசூலில் கலக்கும் பொன்னியின் செல்வன் ..

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செப்30இல்  வெளியான இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்...

படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை!

புத்தம் புது படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை!...

பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் பிரபல பாடகி ஜோனிடா காந்தி..

பிரபல பின்னனி பாடகி ஜோனிடா காந்தி , பஞ்சாபி தெலுங்கு மராத்தி குஜராத்தி கன்னட...

Latest News : Read Now...