
சுதந்திரப் போர் வீரர்கள்!
தீரன் சின்னமலை
கொங்கு மண்ணான ஈரோடு மேலப்பாளையத்தில் 1756ல் பிறந்தவர்! ‘தீர்த்தகிரி கவுண்டர்’ என்று அழைக்கப்பட்டவர்! ஆங்கிலேயருக்கு இறுதி மூச்சு வரை அடிபணியாமல், எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்தவர். போர்க் கலை பல கற்று, துணிச்சலான போர் உத்திகளை படைகளுக்குக் கற்றுத் தந்து போரிட்டு, கிழக்கிந்திய கம்பெனியை வேரறுக்க எண்ணியவர். மைசூர் மன்னன் திப்பு சுல்தான் உடன் இணைந்து, ஆங்கிலேயரை எதிர்த்து மூன்று முறை வெற்றி கண்டவர்.
இளம் வயதிலேயே வாள், வில் பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம், தடி வரிசை என கற்றுத் தேர்ந்தவர். தற்காப்புகலைகளைக் கற்று அவற்றைத் தம் நண்பர்களுக்குக் கற்றுக் கொடுத்து, போர்ப் பயிற்சி அளித்து, இளம் வயதிலேயே ஒரு படையைத் தயார் செய்து வைத்திருந்தார்.
தீர்த்தகிரியின் ஊரான கொங்குப் பகுதி அப்போது மைசூர் மன்னரின் ஆளுகையில் இருந்தது. எனவே, மைசூருக்காக பிரிக்கப்பட்ட வரிப் பணம், சங்ககிரி வழியாக மைசூர் அரண்மனைக்கு எடுத்துச் செல்லப்படும். ஒரு நாள் தன் நண்பர்களுடன் வேட்டைக்குச் சென்றிருந்த தீர்த்தகிரி, அந்த வரிப்பணத்தைப் பறித்து, அவ்வூர் ஏழை மக்களுக்குக் கொடுத்தார். தடுத்த தண்டல்காரர்களிடம், “சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்துக் கொண்டதாக மைசூர் ஹைதரிடம் சொல்” என்று கூறி அனுப்பினார். அது முதல் தீர்த்தகிரி ‘தீரன் சின்னமலை’ ஆனார்.

அப்போது தமிழ் மண்ணில் ஆங்கிலேயரின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இதை சிறிதும் விரும்பாத சின்னமலை, ஆங்கிலேயரைக் கடுமையாக எதிர்த்தார். அந்நிலையில், 1782-ல் மைசூரின் ஹைதர் அலி மரணமடைந்து அவர் மகன் திப்பு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். ஆங்கில அடக்குமுறைக்கு எதிராக திப்பு கிளர்ந்தெழுந்த போது, தீரன் சின்னமலை கைகொடுத்தார். கொங்கு பகுதில் ஒரு படையைத் தம் வசம் வைத்திருந்த தீரன் சின்னமலையின் வீரம் அறிந்திருந்த திப்பு, அவருடன் சேர்ந்து வலிமையான போர்ப் படையை அமைத்தர். இவர்களின் கூட்டணி, சித்தேஸ்வரம், மழவல்லி, ஸ்ரீரங்கப்பட்டணம் ஆகிய இடங்களில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போர்களை நடத்தியது. இந்த மூன்று மைசூர் போர்களிலும் ஆங்கிலேயரின் படைகளுக்கு பெரும் சேதம் விளைவித்து, வெற்றிவாகை சூடியது திப்பு – தீரன் கூட்டணிப் படை !
மூன்று மைசூர் போர்களிலும், திப்புசுல்தான், தீரன் சின்னமலை கூட்டணி வெற்றியடைந்தது. இதனால் வெகுண்ட ஆங்கிலேயர்கள், புதிய போர் உத்திகளைக் கொண்டு நான்காம் மைசூர் போரைத் தொடங்கினர். இந்த முறை திப்பு சுல்தான், நெப்போலியனிடம் உதவி கோரி தூது அனுப்பினார். இருப்பினும், நான்காம் மைசூர் போரில் 1799ம் ஆண்டு மே 4ல் திப்பு சுல்தான் போர்க் களத்தில் மரணமடைந்தார்.
திப்பு சுல்தான் மரணத்துக்குப் பின், தீரன் சின்னமலை கொங்கு நாட்டில் உள்ள ஓடாநிலை எனும் ஊரில் தங்கினார். சிவன்மலை – பட்டாலிக் காட்டில் தன் வீரர்களுக்கு மேலும் பயிற்சி அளித்து, பிரெஞ்சுக்காரர்களின் உதவியுடன் பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களை சேகரித்தார். மேலும், படைகளைப் பெருக்கும் விதமாக திப்புவின் சிறந்த போர் வீரர்களைத் தன் படையில் சேர்த்து, தன்னை ஒரு பாளையக்காரராக அறிவித்தார்.
அடுத்த பாளையக்காரர்களை ஒன்று திரட்டினார். கர்னல் க்ஸிஸ்டரின் கம்பெனி 5 ஆம் பட்டாளத்தை அழிக்க, 1800ல் கோவை கோட்டையைத் தகர்க்க முன்னேறினார். ஆனால், கோவைப்புரட்சி தோல்வியுற்றது. 1801ல் பிரெஞ்சுக்காரர் கர்னல் மாக்ஸ்வெல் தலைமையில் ஆங்கிலேயரை பவானி-காவிரிக் கரையில் எதிர்த்து வெற்றிக் கண்டார். அதைத் தொடர்ந்து 1802ல் சென்னிமலைக்கும் சிவன் மலைக்கும் இடையே நடந்த போரில் வெற்றி பெற்றார். 1803ல் அறச்சலூரில் உள்ள கர்னல் ஹாரிஸின் ஆங்கிலப்படையை கையெறி குண்டுகளை வீசி வெற்றி கண்டார்.
இதனிடையே தீரன் சின்னமலையை சூழ்ச்சியால் வீழ்த்த எண்ணிய ஆங்கிலேயர், அவரது சமையல்காரருக்கு ஆசை காட்டி, தீரன் சின்னமலையையும் அவரது சகோதரர்களையும் கைது செய்தனர். அவர்களை சங்ககிரி கோட்டைக்குக் கொண்டு சென்று ஒப்புக்கு விசாரணை செய்து, 1805 ஜூலை 31ல் தூக்கிலிட்டனர். தம்பிகள், படைத்தலைவர் கருப்ப சேர்வை ஆகியோருடன் தீரன் சின்னமலையும் வீரமரணம் அடைந்தார்.
தீரன் சின்னமலை நினைவில்…
தீரன் சின்னமலை உருவச்சிலை தமிழக அரசால் சென்னையில் அமைக்கப்பட்டது. ஓடாநிலையில் சின்னமலை நினைவு மணிமண்டபம் அமைக்கப் பட்டது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ‘தீரன் சின்னமலை மாளிகை’ என்று பெயர்சூட்டப் பட்டது. 2005 ஜூலை 31 அவரது 200ஆவது நினைவு தினத்தில் ‘தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை’ வெளியிடப்பட்டது.
- செங்கோட்டை ஸ்ரீராம்