
கட்டுரை : ஜெயஸ்ரீ எம். சாரி, நாக்பூர்
பழம்பெரும் நாடான பாரத நாடானது திருவிழாக்களின் பூமியாய் விளங்குகிறது. ஒவ்வொரு மாநில மக்களும் அவர்களுக்கே உரித்தான வகையில் திருவிழாக்களை கொண்டாடுகிறார்கள்.
மஹாராஷ்டிரா மாநிலத்திலும் சங்கராந்தி கொண்டாடப் படுகிறது. இந்தக் கொண்டாட்டத்தில் ‘ஹல்தி கும்கும்’ (Haldi Kumkum) என்னும் பெண்களுக்கு மஞ்சள்-குங்குமம் தரும் நிகழ்ச்சி திருமணமான பெண்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சங்கராந்தி தினத்திலிருந்து இந்நிகழ்ச்சி ஆரம்பமாகும்.
திருமணமான பெண்கள் தங்கள் வீடுகளில் சுமங்கலிகளை அழைத்து மஞ்சளும், குங்குமமும் தருவார்கள். வெல்லத்தை உபயோகித்து செய்யப்படும் எள்ளுருண்டைகளை வழங்கி
“Til- Gul Gya, Goad Goad Bola ( தீல்-கூல் க்யா, கோட் கோட் போலா),” –

மராட்டியில் தீல்- என்றால் எள்ளு. கூல்- என்றால் வெல்லம். எள்ளும், வெல்லமும் எடுத்துக் கொள்ளுங்கள், இனிய சொற்களை பேசுங்கள்- என்று அர்த்தமாகும். பிறகு பரிசாக தங்களால் முடிந்ததை கொடுப்பார்கள். அதற்கு மராட்டியில் வாண் ( Waan) என்று பெயர். முந்தைய காலங்களில் தங்கள் இல்லங்களில் இருக்கும் தானியங்கள், பொருட்களை (அதையே வாணாக) கோதுமை, எலந்தப்பழம் முதலியவற்றுடன் கொடுப்பார்கள். தற்போது காலத்திற்கேற்ப வாணில் கொடுக்கப்படும் சாமான்களும் மாறி விட்டன.
இந்நிகழ்ச்சியில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் ‘உகானா’ ( Ukhana) சொல்வது. அந்தக் காலத்தில் எல்லாம் சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவனின் பெயரை வெளியில் சொல்ல மாட்டார்கள், சொல்ல கூச்சப்பட்டார்கள். அதனால், இந்த உகானாவின் மூலம் ஒரு பெண் தன் கணவனின் பெயர் வருகிற மாதிரி குறைந்தபட்சமாக நான்கு வரிகளில் கவிதையாக சொல்வர்.

காலங்கள் மாறியிருந்தாலும், காட்சிகள் மாறியிருந்தாலும் ‘உகானா’ சொல்வது மறக்கப்படாமல் தொடர்கிறது.
‘உகானா’ சொல்லும் போட்டிகளும் நடக்கும். இதில் வயதான சுமங்கலிகளும், நடுத்தர வயது குடும்பத் தலைவிகளும், புதிதாய் திருமணம் ஆனவர்களும் ஆர்வத்தோடு பங்கற்பர். கவித்துமான, அருமையான சொற்றொடர்களுடன் ஜனரஞ்சகமாக, நகைச்சுவையாக சொல்பவர்களும் உண்டு. ஹிந்தி, மராட்டிய மொழிகளில் பெண்கள் அற்புதமாய் ‘உகானா” சொல்வார்கள்.
எங்கள் காலனியில் நடந்த ‘ஹல்தி கும்கும்’ நிகழ்ச்சியின் போது பூனாவிலிருந்து வந்த புது மருமகள் அனைவருக்கும் மஞ்சள் குங்குமம் கொடுத்து விட்டு ‘உகானாவும்’ சொல்லிக் கொண்டே வந்தார். நிறைய சுமங்கலிகள் அதில் பங்குக்கொண்டமையால் அந்த புது மருமகளின் குரல் அவ்வளவாக எடுபடவில்லை. எல்லோரும்,” அடேங்கப்பா! பூனாவிலிருந்து வந்தவள் அல்லவா, அதனால் தான் ஆங்கிலத்தில் கூறுகிறாள்,” என்று அவளைப் பாராட்டி மகிழ்ந்தனர்.

என் முறை வந்தபோது அந்தப் பூனாப் பெண் கூறிய ‘உகானா’ வை நீங்களே ரசியுங்கள்.
“All Indians are my brothers, except my Bharath” (அப்பெண்ணின் கணவன் தான் பரத்)- என்றாளே பார்க்கலாம். அந்த இடத்தில் சிரிப்பு அடங்க வெகு நேரமாயிற்று.

வண்ணமயமான ரங்கோலிகள் போடுதல், வீடுகளை அலங்கரித்தல், அற்புதமாய் தங்களை அழகு படுத்திக் கொள்ளுதல், ‘உகானா’ விற்காக சொற்களை யோசித்தல், ‘வாண்’ பரிசுப் பொருட்களை தேர்ந்தெடுத்தல் என இந்த வருடம் வரும் மாசி மாத அமாவாசைக்கு முதல் நாள் வரையிலும், அதன்பிறகு ரதசப்தமி தினமும் மாஹாராஷ்டிராவில் உள்ள பெண்கள் உற்சாகத்துடன், மகிழ்ச்சியுடனும் ‘ஹல்தி கும்கும்’ நிகழ்ச்சியை தொடர்வர். பல மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் தங்கள் பண்பாட்டையும் வெளிப்படுத்துவர்.
திருவிழாக்களின் சாரமே அதுதானே!!