

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலம் இவரது சொந்த ஊர். மயிலாடுதுறை அருகே உள்ள செம்பொன்னார்கோவில் சம்பந்தம் உயர்நிலைப் பள்ளி மற்றும் குத்தாலம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் பள்ளிப் படிப்பு. பின்னர் அரசு ஆடவர் கல்லூரி, கும்பகோணம், மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரிகளில் மேற்படிப்பினைத் தொடர்ந்தார். இயற்பியலில் முது அறிவியல் பட்டம், தமிழ் வரலாறு ஆகியவற்றில் முதுகலைப் பட்டங்கள், ஆய்வியல் நிறைஞர் பட்டம் ஆகியவற்றோடு தமிழில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார்.
வானிலை ஆய்வுத் துறையில் வானிலையாளராக 39 ஆண்டு கால பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். வானிலை தொடர்பான பல கட்டுரைகளை 1991ஆம் ஆண்டு முதம் பல இதழ்களில் எழுதியுள்ளார். இதுவரை வானிலை தொடர்பாக இரண்டு, அறிவியல் தொடர்பான ஏழு, ஆன்மீகம் பற்றிய இரண்டு, காவிரி பற்றி ஒன்று, தமிழிலக்கியம் தொடர்பாக இரண்டு நூல்களை எழுதியுள்ளார்.
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் கட்டுரைகள் எழுதுபவர். 2015ஆம் ஆண்டு ஹிந்தி மொழியில் எழுதிய கட்டுரைக்காக மாண்புமிகு இந்தியக் குடியரசுத்தலைவரின் “ராஜ்பாஷா கௌரவ் புரஸ்கார்” என்ற விருதினைப் பெற்றுள்ளார். மயிலைத் திருவள்ளவர் தமிழ்ச் சங்கத்தினரால் “அறிவியல் களஞ்சியம்” என்ற விருதினைப் பெற்றுள்ளார்.
இவர், நம் தமிழ் தினசரி தளத்தில், நம் வாசகர்களின் சுவை கருதி, தாம் ரசித்த விநாயகர் நான்மணிமாலை விளக்கத்தினை தொடர்ந்து எழுதவுள்ளார்.
விநாயகர் நான்மணிமாலை – பகுதி 1

அறிமுகம்
விநாயகர் சிவபெருமானின் புதல்வர். தமிழகத்தில் விநாயகர் கோயில்கள் பல உள்ளன. ஒவ்வொரு தெரு முனையில், குளக்கரையில், அரசமரத்தடியில், ஆற்றங்கரைப் படித்துறைக்கருகில் என விநாயகர் வீற்றிருக்கும் இடங்கள் இங்கே அதிகம். ஆதிசங்கரர் தோற்றுவித்த ஷண்மதங்களில் கணாபத்யம் என்று சொல்லப்படும் விநாயகரை வணங்கும் மதமும் ஒன்று. கணபதியை, விநாயகரை வணங்காத எந்த பூஜையும் இல்லை; எந்த நிகழ்ச்சியும் இல்லை; எந்தச் செயலும் இல்லை.
பாண்டிச்சேரியில் பாரதியார் வாழ்ந்த காலத்தில் அங்குள்ள ‘மணக்குள விநாயகர்’ மீது ‘விநாயகர் நான் மணிமாலை’ என்ற பாடலைப் பாடினார். இப்பாடல் முறையே வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் என்ற யாப்பில் அமைந்துள்ளது. அதனால் நான்மணிமாலை என்ற பெயர் பெற்றது. அந்தாதித் தொடையால் ஆனது. (ஒரு பாடலின் இறுதி அடி அல்லது சீர் அடுத்த பாடலுக்குத் தொடக்கமாக வருவது. (அந்தம் = முடிவு, ஆதி = தொடக்கம்) இதில் 40 பாடல்கள் உள்ளன. எனவே நான்மணிமாலை என்று பெயர் பெற்றது.
விநாயகர் எப்படிப்பட்டவர்? அவர் சொல்லுக்கும் சூழ்ச்சிக்கும் அப்பாற்பட்டவர். பல உருவாகப் படர்ந்த வான்பொருள், உலகம் காக்கும் சக்தி, ஓம் எனும் பொருளை உள்ளத்தில் நிறுத்திச் சக்தியைக் காப்பவர், எளியவர் (விநாயகர் நான்மணிமாலை – 2) என்றெல்லாம் விநாயகரை அனைத்துமாய்ப் பார்க்கிறார் பாரதியார்.
விநாயகர் உருவத்திலேயே வைதிகச் சமய கடவுள்களான முருகன், நாராயணன், சிவபெருமான் முதலிய தெய்வங்களை மட்டுமன்றிப் பிறசமயத் தெய்வங்களான அல்லா, யெஹோவா (விநாயகர் நான்மணிமாலை – 8) ஆகியோரையும் காண்பதாய் பாடியிருப்பது, ஒன்றில் பல தெய்வங்களைக் காணும் பாரதியின் பொது நோக்கை, தனித்தன்மையைக் காட்டுகிறது. சக்தியிடம் எல்லாத் தெய்வங்களையும் பார்த்தது போல் விநாயகரிடமும் சிறு தெய்வம், பெருந்தெய்வம் முதலிய அனைவரையும் பார்க்கும் பண்பு பாரதியிடம் உள்ளது.

கடவுள் வடிவங்கள் தத்துவங்களே. கடவுள் உறவுமுறை மனிதனின் பாவனைகளே அன்றி வேறல்ல. சிவம் – சக்தி, அம்மை – அப்பன், இலிங்க அமைப்பு எல்லாமே ஒன்றின் பல, பலவின் ஒன்று. உலக இயக்கமே ஆண்மை – பெண்மை அடிப்படையிலேயே விளங்குகின்றது. வழிகள் (சமயம்) பலவாயினும் அவை சேருமிடம் (இறைவன்) ஒன்றே என்ற உணர்வுடையவர் பாரதி.
விநாயகர் நான்மணிமாலை பாடலின் இறுதியில் வெற்றிக்கும் வீரத்திற்கும் வாழ்த்துக் கூறிப் பக்திக்கும், உண்மைக்கும், ஊக்கத்திற்கும் வரவேற்பு கூறுகிறார் பாரதி. மனிதரிடம் உள்ள நல்ல குணங்களே தேவர்கள். யுகங்கள் நான்கு. பாரதி வாழ்ந்த யுகம் கலியுகம். கலியுகத்தின் தன்மையாக மறம் ஓங்கும், அறம் நீங்கும், கேடு விளையும், நீதி தூங்கும் என்று சான்றோர் கூறியுள்ளனர். கலியுகத்திற்கு அடுத்து வரும் யுகம் கிருதயுகம். யாருக்கும் எக்காலத்தும் துன்பம் வருவதை விரும்பாத பாரதி, இனி வரும் யுகமாகிய கிருதயுகத்தில் எல்லோரும் நன்மை பெற்றுத் தீமை இல்லாமல் வாழ்வதற்கு விநாயகரை வேண்டுகிறார்.
எல்லாக் கவிஞர்களும் தாம் வாழ்ந்த – வாழும் கால நிலையை மட்டும் பாடினார்கள். பாரதியோ அவர்களையும் மிஞ்சி ஒளிமயமான எதிர்கால யுகத்திற்காக இப்போதே வேண்டுகிறார். யாரிடம் வேண்டுகிறார் ? கற்பக விநாயகரிடம். கற்பகமரம் கேட்டவர்க்குக் கேட்டதைக் கொடுக்கும் தன்மை உடையது. இல்லை என்ற சொல்லுக்கு அங்கு இடமில்லை. ஆகவே, பாரதியார் தாம் கேட்கும் வேண்டுதல்கள் எல்லாம் திண்ணமாய்க் கிடைக்கும் என நம்புகிறார். நம்பிக்கை தானே வாழ்வின் அடிப்படை? எனவே, அந்த நல்ல வாழ்வை அடைய அன்பாகிய தவம் மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் அனைவரும் இன்புற்று வாழலாம் என்பதை அவர் பாடல்கள் நினைவூட்டுகின்றன.
இனி இந்த, பாரதியார் பாடிய விநாயகர் அகவல் என்ன சொல்கிறது என நாளை காண்போமா?
(தொடரும்)