ஏப்ரல் 22, 2021, 7:18 காலை வியாழக்கிழமை
More

  விநாயகர் நான்மணி மாலை விளக்கம் (பகுதி-21)

  மங்கலமான குணங்களை உடையவனே; மணக்குளக் கணபதியே என் நெஞ்சத்தில் நிறைந்து இருந்து எனக்கு அருள்புரிவாய். அகன்ற விழி

  manakkula vinayakar

  விளக்கம்: முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

  பாடல் 28 – அகவல்

  எனை நீ காப்பாய், யாவுமாந் தெய்வமே!
  பொறுத்தா ரன்றே பூமியாள்வார்;
  யாவு நீயாயி னனைத்தையும் ஒறுத்தல்
  செவ்விய நெறி யதிற் சிவநிலை பெறலாம்;
  பொங்குதல் போக்கிப் பொறை யெனக்கீவாய்; 5

  மங்கள குணபதி மணக்குளக் கணபதி
  நெஞ்சக் கமலத்து நிறைந்தருள் புரிவாய்;
  அகல்விழி உமையா ளாசை மகனே.
  நாட்டினைத் துயரின்றி நன்கமைத் திடுவதும்
  உள்ளமெனு நாட்டை யொரு பிழை யின்றி 10

  ஆள்வதும் பெரொளி ஞாயிறே யனைய
  சுடர்தரு மதியொடு துயரின்றி வாழ்தலும்
  நோக்கமாகக் கொண்டு நின்பதம் நோக்கினேன்;
  காத்தருள் புரிக, கற்பக விநாயகா,
  காத்தருள் புரிக,கடவுளே யுலகெலாம் 15

  கோத்தருள் புரிக, குறிப்பரும் பொருளே
  அங்குச பாசமுங் கொம்புந் தரித்தாய்
  எங்குல தேவா, போற்றி!
  சங்கரன் மகனே தாளினைப் போற்றி.

  பொருள் – விநாயகனே நீ என்னைக் காப்பாயாக. இந்த உலகில் உள்ள அனைத்துப் பொருள்களாக உள்ள தெய்வமே, பொறுமை உடையவர்கள் இந்த பூமையை ஆள்வார்கள். இந்த உலகில் உள்ள பொருட்கள் அனைத்தும் நீ என்னும்போது ஏனையோரின் தவறுகளுக்குத் தண்டனை தருவது உன் செயலன்றோ. மனிதர்கள் அதனைச் செய்யலாமா? அவ்வாறு செய்யாதிருத்தல் செம்மையான சிவநெறியாகும். இந்த நெறியைப் பின்பற்றினால் சீவன் முக்தி பெற்று சிவநிலையை அடையலாம். எனவே கோபத்தை நீக்கி பொறுமையை எனக்கு அருள்வாயாக.

   மங்கலமான குணங்களை உடையவனே; மணக்குளக் கணபதியே என் நெஞ்சத்தில் நிறைந்து இருந்து எனக்கு அருள்புரிவாய். அகன்ற விழிகளையுடைய உமையவளின் ஆசை மகனே, இந்தத் திருநாட்டினைத் துன்பமின்றி நன்றாக அமைத்திடுவதும், என் உள்ளமெனும் நாட்டை ஒரு குற்றமும் இல்லாமல் ஆட்சி செய்வதும் நீயல்லவோ. ஒளிவீசும் சூரியனைப் போன்ற அறிவுடன் வாழவேண்டும் என்ற நோக்கத்துடன் உன் திருவடிகள் நோக்கிப் பணிந்தேன். காத்தருள்வாயே கற்பக விநாயகா.  

    காத்தருள் புரிவாய் கற்பக விநாயகா, இந்த உலகை எல்லாம் என்னுடைய நல்ல வாழ்வோடு இணைத்து அருள்வாயாக. இத்தன்மை உடையவன் என்று குறிப்பாகச் சொல்லவியலாத தன்மை உடையவனே, திருக்கரங்களிலே அங்குசம், உடைந்த தந்தம் தரித்தவனே, எங்கள் குலதெய்வமே உன்னை வணங்குகிறேன்; சங்கரன் மகனே உன்னை வணங்குகிறேன்.

  பாடல் ‘எனை’ எனத் தொடங்கி, ‘போற்றி’ என முடிகிறது.

    இந்த அகவற்பாவின் இரண்டாவது அடியில் “பொறுத்தார் பூமியாள்வார்” என்ற பழமொழியை பாரதியார் பயன்படுத்துகிறார். பொறுமை, நாம் கற்க வேண்டிய பாடம். பொறுமையுடையவன் எதைச் சாதிக்க வேண்டுமென நினைக்கிறானோ அதைச் சாதிப்பான் என்று பெஞ்சமின் ஃப்ராங்கிளின் கூறுவார். இப்போதெல்லாம் சிறிய விஷயத்திற்குக் கூட பொறுமையில்லாமல் கொதித்துப் போகிறோம். இதனால் பகைமை வளர்ந்து விடுகிறது.

  இந்தப் பகைமை நம் உறவுகளையும் நட்புகளையும் இழந்து ஒன்றுமில்லாமல் செய்து விடுகிறது. நாம் பொறுமை இழப்பதால் நம்மையே இழந்து போகிறோம் என்பதை யாரும் உணர்வதில்லை. எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக் கொள்ளாமல் அதைப் பெரியதாக நினைத்துக் கொள்வதால், அதைத் தாங்கிக் கொள்ள முடியாத நிலைக்குப் போய் விடுகிறோம். எந்த விசயத்தையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமலும் போய் விடுகிறோம்.

  பொறுமை நமக்கு பல உண்மைகளைக் கற்றுத் தருகிறது. எதையும் தாங்கிக் கொள்ளும் பொறுமையை நாம் வளர்த்துக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். பொறுமையாயிருப்பது நமக்கு கஷ்டமாகத் தோன்றினாலும் அது நமக்கு பலமான மன வலிமையையும் அதன் மூலம் பல நன்மைகளையும் தருகிறது. பொறுமையின் சிறப்பு பற்றி மேலும் நாளைக் காணலாம்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »