- ஜெயஸ்ரீ எம்.சாரி, நாக்பூர்.
மஹாராஷ்டிராவின் புகழ்பெற்ற துறவிகளில் ஒருவரான ராஷ்டிரசந்த் துகடோஜி மஹாராஜ், தன் பஜனைகளின் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். அவர் எழுதிய ‘கிராம் கீதா’ என்னும் நூல் மராட்டிய இலக்கிதத்தில் கீதையாகவே கருதப்படுகிறது. துகடோஜி மஹாராஜ், “கிராம் கீதா’ நூலில் கிராமத்தின் வளர்சிக்காக கூறப்பட்டுள்ள அனைத்துக் கருத்துகளும் இன்றும் நமக்கு வழிகாட்டுவதாய் உள்ளது.
ஜுன் 30-ந்தேதி துகடோஜி மஹாராஜின் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. தற்போது உள்ள தொற்று நோயின் அபாயத்தை உலக மக்கள் அனைவரும் ஒவ்வொரு நிமிடமும் எதிர்கொண்டுள்ளோம். துகடோஜி மஹாராஜ் தன்னுடைய ‘கிராம் கீதாவில்’ 14-வது அத்தியாயமான கிராம ஆரோக்கியத்தில் தொற்று நோய் பற்றியும், அச்சமயத்தில் மக்களின் அறியாமை குறித்தும் எழுதியுள்ளார்.
துகடோஜி மஹாராஜ், தொற்று நோயின் தாக்குதலை கூறும்போது ‘ நம்முடைய செயல்களே நமக்கு துன்பத்தை தருகிறது, நாமே நமக்கு எதிரி (ஷத்ரு ஆபனாச்சி ஆபுலே) ,’ என்கிறார். தற்போதைய கொரானா காலத்தில் நாம் முகக்கவசம் அணியாமல் வெளியே சென்றால் நம் ஆரோக்கியத்திற்கே கெடுதல் ஏற்படுகிறது. நமக்கு நாமே எதிரியாகிறோம்.
இன்னொரு பத்தியில் ராஷ்டிரசந்த், தினசரி வாழ்வியலில் ஒருவரும் கூட முறையான வழிமுறைகளை பின்பற்றுவதில்லை என்பதை சாடுகிறார். நோயாளிகள் எங்கு வேண்டுமானாலும் எச்சில் துப்புகிறார்கள், தொற்று நோயை பரப்புகிறார்கள், ஆயிரனானோர் பாதிப்படைகின்றனர்,என்கிறார்.
லாக்டவுனில் பொது இடங்களில் எச்சில் துப்பிய மனிதர்களை கட்டுப்படுத்த நம் காவலர்களின் முயற்சி எடுத்தது நம் நினைவில் இப்போது வருவதை நம்மால் தடுக்க முடியவில்லை.
கிராமமோ, நகரமோ மக்கள் சுத்தமாக இருப்பதில்லை. நோய்களாலும், தொற்றாலும் அவதிக்குள்ளாகின்றனர் , என்கிறார் துகடோஜி.
மக்கள் தாங்களே தங்கள் கடமையை உணர்ந்து ஆதர்ஷ் மனிதர்களாக செயல்பட்டு ஆரோக்கிய கிராமமாகவும், தொற்று நோயிலிருந்தும் தாமும் விடுபட வேண்டும், என்கிறார் அவர்.
கிராம் கீதையானது, ‘ கிராமத்தார் வழிமுறைகளை பின்பற்றினால், அவர்கள் வாழ்வு மலரும். கிராமும் தொற்று நோயிலிருந்து விடுபடும்,’ என்றும் விளக்குகிறது.
மக்கள் வழிநெறிகளை பின்பற்றினால், அவர்களின் செயல்களும் நன்மை பயக்குவதாய் அமையும். ஆனால், ஏதாவது சிறிய அறியாமையால் பல தவறுகள் தொடரும் என்று அருமையாய் விளக்குகிறார் ராஷ்டிரசந்த் துகடோஜி மஹாராஜ்.
இவ்வாறு இன்றைய சூழலுக்கும் ஏற்றவாறு தன் கருத்துகளின் மூலமாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே துகடோஜி மஹாராஜ் தொற்று நோய் பரவுவதை தடுப்பதில் மக்களின் பங்கை வலியுறுத்துகிறார்.
ராஷ்டிரசந்த் துகடோஜி மஹாராஜ் மக்களின் ஆரோக்கியத்திற் காகவும் அதே அத்தியாயத்தில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்
” முறையாக தியானமும், காலை நடைபயிற்சியும் செய்தால் ஆக்ஸிஜன் பெற்று உடலும், மனமும் சுத்தமாக்க முடியும்,” என்கிறார்.
முகக்கவசம் அணிவது, அடிக்கடி கைகளை சுத்தப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் – ஆகிய வழிமுறைகளை நாம் கடைப்பிடித்தும், நம் அறியாமையையும் நீக்கியும் ஆரோக்கியமானது ஒவ்வொரு இல்லத்தையும் தழுவ ஒத்துழைக்க வேண்டிய நேரமிது. அதுவே நம் ராஷ்டிரசந்த் துகடோஜி மஹாராஜ் போன்ற எண்ணிலங்கா துறவிகளின் கருத்துகளுக்கு கொடுக்கும் மரியாதை ஆகும்.