
ஜி.எஸ்.டி கவுன்சில்
கட்டுரை: முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
பகுதி 4
ஜி எஸ் டி தொடர்பான அனைத்து விவகாரங்களுக்கும் சகல அதிகாரம் பெறும் ஜி.எஸ்.டி கவுன்சில்மட்டுமே பொறுப்பு. மத்திய அரசும் இல்லை மாநில அரசும் இல்லை. முக்கியமாக பிரதமர் மோதி அல்லது அந்தப் பெண்மணி நிர்மலா சீத்தாராமன் இல்லை. ஜி.எஸ்.டி.சி என்றழைக்கப்படும் ஜி.எஸ்.டி கவுன்சில்தான் ஜி.எஸ்.டி வரி சதவிகிதங்களை நிர்ணயிப்பது, வரி வசூலிப்பதற்கான சட்டங்களைக் கொண்டு வருவது, சட்டங்களை அமல்படுத்துவது, நடைமுறைப்படுத்துவதற்கான நிர்வாக வசதிகளைச் செய்து கொடுப்பது என ஜி.எஸ்.டி தொடர்பான அனைத்து விஷயங்களையும் செய்யும்.
இது ஒரு ஃபெடரல் கான்ஸ்டிடியூஷனல் பாடியாக (Federal Constitutional Body) கொண்டு வரப்பட்டிருக்கிறது. மக்களவை, மாநிலங்களவை போன்ற பாடிகளை நாம் லெஜிஸ்லேசன் பாடி என்று அழைக்கிறோம். லெஜிஸ்லேசன் பாடிகள் சட்டங்களைக் கொண்டு வரலாம், சட்டங்களை அனுமதிக்கலாம், சட்டத்தின் மீது விவாதிக்கலாம்…
ஆனால் அந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது எக்ஸிக்யூட்டிவ் பாடிகளால்தான். இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு கவுன்சிலுக்கு லெஜிஸ்லேஷன் மற்றும் எக்ஸிக்யூட்டிவ் பாடியாக இயங்கச் சட்டத்தில் இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் அது ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு மட்டுமே.

ஜி.எஸ்.டி உறுப்பினர்கள் யார் யார்?
மத்திய உறுப்பினர்கள் – 2, மத்திய நிதி அமைச்சர் மற்றும் மத்திய நிதி இணை அமைச்சர்; மாநில உறுப்பினர்கள் – 31 , டெல்லி மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் உட்பட அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர் அல்லது அம்மாநில அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களில் ஒருவர். மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை – 33
மத்திய அரசின் நிதி அமைச்சர் – எப்போதும் சேர்மேனாக தலைமை வகிப்பார். வைஸ் சேர்மேனாக – 31 மாநில உறுப்பினர்களின் ஒருவர் தேர்வு செய்யப்படுவார்.
ஒரு ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 50 சதவிகித உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஒரு சட்டத்தைக் கொண்டு வர வேண்டும், ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 75 சதவிகித ஆதரவு ஓட்டுக்களுடன்தான் கொண்டு வர முடியும்.
ஓட்டுக்களின் வெயிட்டேஜ்
மத்திய அரசின் இரு உறுப்பினர்களின் ஓட்டுகளையும் சேர்த்து 33.33 சதவிகித மதிப்பளிக்கப்பட்டிருக்கிறது. 31 மாநில உறுப்பினர்களின் ஓட்டுக்களுக்குத் தலா 2.15 சதவிகித ஓட்டு மதிப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆக ஒரு மாற்றைத்தைக் கொண்டு வர வேண்டும் என்றால் கூட குறைந்தபட்சமாக இரு மத்திய உறுப்பினர்கள் மற்றும் 20 மாநில உறுப்பினர்களின் ஓட்டுகள் அவசியம். அப்போது தான் 75 சதவிகித ஓட்டுடன் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.
யாருக்கு இல்லை ஜி.எஸ்.டி?
சாதாரண மாநிலங்களில் 20 லட்சம் ரூபாய்க்குள் ஆண்டு விற்றுமுதல் இருப்பவர்களுக்கு ஜி.எஸ்.டி சட்டம் பொருந்தாது. சிறப்பு மாநிலங்களான ஜம்மு & காஷ்மீர் மற்றும் வடகிழக்குப் பகுதியிலுள்ள 11 மாநிலங்களில், 10 லட்சம் ரூபாய்க்குள் ஆண்டு விற்றுமுதல் இருப்பவர்களுக்கு ஜி.எஸ்.டி சட்டம் பொருந்தாது. இரண்டு மாநிலங்களுக்கு இடையே வணிகப் பரிமாற்றம் செய்பவர்களுக்கு இந்த விலக்கு செல்லுபடியாகாது.

மத்திய மற்றும் மாநில அரசுகள் அளித்த விலக்குகள்
இதுவரை ஒவ்வொரு மாநில அரசு மற்றும் மத்திய அரசு தங்கள் மாநிலத்தில் தொழிற்துறையினை மேம்படுத்தி சில வரிச் சலுகைகளைக் கொடுத்திருக்கும். இனி அந்த வரிச் சலுகைகள் எல்லாம் செல்லுபடியாகாது. ஜி.எஸ்.டி கவுன்சில், பொருள்கள் அல்லது சேவைகள் மீது விதித்திருக்கும் வரிகளை அப்படியே செலுத்தியாக வேண்டும்.
மத்திய அரசு மாநில அரசுகளுக்கு ஜி எஸ் டியில் உரிய பங்கைத் தரவில்லை, ஏன்?
ஜூலை 2017 முதல் பிப்ரவரி 2021 வரை, ஜிஎஸ்டியில் மைய அரசு 5.43 லட்சம் கோடி வசூலித்துள்ளது. இதிலிருந்து மாநிலங்களுக்கு உரிய தொகை செலுத்தப்பட வேண்டும். இந்தத் தொகையில், பிப்ரவரி 2021 நிலவரப்படி மூன்றில் ஒரு பங்கு மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது, இது நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சகம் வழங்கிய தரவைக் காட்டுகிறது.
மொத்தத்தில், அனைத்து மாநிலங்களுக்கும் மொத்தமாக 3.37 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2020 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் ₹ 2.06 லட்சம் கோடி நிலுவையில் உள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் பொருள் பொதுமுடக்கத்திற்குப் பிறகு மாநிலங்களுக்கு அதன் ஜிஎஸ்டி பங்கு கிடைக்கவில்லை.
மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சுமார், 31,892 கோடி, கர்நாடகாவிற்கு 19,504 கோடி, குஜராத் மாநிலத்திற்கு 17,094 கோடி ஆகியவை நிலுவையில் உள்ளன என்று மாநில வாரியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முதல் மூன்று மாநிலங்களும் சேர்ந்து மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி நிலுவைத் தொகையில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளன.
இந்த மாநிலங்களைத் தவிர, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மானிலங்களுக்கு 10,000 கோடிக்கும் அதிகமான வரி நிலுவையில் உள்ளது. இதேபோல், இந்த மையம் வடகிழக்கு மாநிலங்களுக்கு ₹ 3,000 கோடிக்கு மேல் கடன்பட்டுள்ளது. மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வரிப்பணத்தைச் சரிவரக் கொடுத்ததா? இல்லையா?
ஒருவேளை கொடுக்கவில்லை என்றால் அந்தப் பணத்தை என்ன செய்தது? மத்திய அரசில் இந்தக் கேள்விகளுக்கு யாரும் பொறுப்பாக பதில் சொல்வதில்லை. எதிர்க்கட்சிகளும் ஜி எஸ் டி விஷயத்தில் சரியான தகவல்களை சொல்வதில்லை. எனவே ஜி எஸ் டி கொண்டு வந்ததன் நோக்கம் நிறைவேறியதா இல்லையா? என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி.