October 26, 2021, 1:18 am
More

  ARTICLE - SECTIONS

  அண்ணா என் உடைமைப் பொருள் (பகுதி 2)

  ஆம், அண்ணாவைப் பற்றிக் கேட்கும்போது மட்டுமல்ல, அவரைப் பற்றி நினைக்கும் போதும் மனதில் உணர்ச்சி பொங்குவதைத் தவிர்க்க

  anna en udaimaiporul 1 - 1

  அண்ணா என் உடைமைப் பொருள் (பகுதி 2)
  – வேதா டி. ஸ்ரீதரன் –

  பரவாயில்லையே, நீ என்னைப் பத்தி ரொம்ப உயர்வாகத்தான் நினைத்திருக்கிறாய்!

  நான் டிப்ளமா படித்தவன். படிப்புக்குப் பின்னர் சில ஆண்டுகள் ஏதேதோ இடங்களில் வேலை பார்த்தேன். எனக்குச் சுமார் இருபத்தி மூன்று வயது ஆகும்போது, ஆர்எஸ்எஸ் ஸ்தாபகர் டாக்டர் ஹெட்கேவார் நூற்றாண்டு விழா சமயத்தில் ஆர்எஸ்எஸ் முழு நேர ஊழியன் ஆனேன். மதுரை மாவட்டம், எழுமலையில் இருந்த ஓர் ஆசிரமத்தில் தங்கி சங்கப் பணி செய்து வந்தேன். விரைவில் என்னை விஜயபாரதம் பத்திரிகையின் ஆசிரியர் ஆக்குவது என்று சங்கத்தில் முடிவு செய்திருந்தார்கள்.

  சிறு வயதில் எனக்கு ஸ்வாமி விவேகானந்தர் மீது ஓரளவு ஈடுபாடு இருந்தது. விவேகானந்தர் வாழ்க்கை பற்றிச் சுருக்கமாக ஸ்வாமி சித்பவானந்தர் எழுதிய புத்தகம் படித்திருந்தேன். ஸ்வாமிஜியின் உரைகள் அதிகம் வாசித்ததில்லை.

  சென்னை வருவதற்குச் சில மாதங்கள் முன்பு ஒருநாள், ஶ்ரீ இருளப்பன் என்ற ஆர்எஸ்எஸ் முழுநேர ஊழியர், ‘‘திரு. ரா. கணபதி என்பவர் எழுதியுள்ள ஸ்வாமி விவேகானந்தர் என்ற புத்தகம்தான் விவேகானந்தர் வாழ்க்கையை முழுமையாக விளக்கும் புத்தகம்’’ என்று குறிப்பிட்டார். அந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. எனினும், அந்தக் காலத்தில் புத்தகம் விலை கொடுத்து வாங்கும் நிலையில் நான் இல்லை.

  இதற்குச் சில நாட்கள் பின்னர், எழுமலையைச் சேர்ந்த ஶ்ரீ இளங்கோவனிடம் அந்தப் புத்தகம் இருப்பதைப் பார்த்தேன். ராமகிருஷ்ண தபோவன அன்பரான அவர், ஆர்எஸ்எஸ்.,ஸிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தவர். புத்தகத்தை அவரிடம் இரவல் வாங்கிக் கொண்டு எனது அறைக்குச் சென்றேன்.

  ஒரு பெரிய புத்தகத்தைப் படிப்பதென்றால், முதலில், ரேண்டமாக ஏதாவது ஒரு பக்கத்தை எடுத்துப் படித்துப் பார்ப்பது எனது வழக்கம். வாசிப்பதற்கு எளிமையான புத்தகமா என்பதைத் தெரிந்து கொள்வதற்கு இது ரொம்ப உபயோகமாக இருக்கும். பின்னர் பொருளடக்கத்தைப் பார்ப்பேன். புத்தகத்தில் உள்ள விஷயங்கள் எனக்கு எந்த அளவு தேவை என்பது புரியும். இந்த இரண்டு அம்சங்களின் அடிப்படையில் அந்தப் புத்தகத்தை ஆழ்ந்து படிப்பதா, மேலோட்டமாகப் பார்த்தால் போதுமா அல்லது படிக்கவே வேண்டாமா என்பதை முடிவு செய்வேன்.

  அதுபோலவே, ஸ்வாமி விவேகானந்தர் என்ற அந்தப் புத்தகத்தையும் குருட்டாம் போக்கில் புரட்டினேன். ஸ்வாமிஜி பரிவ்ராஜகராக ஊர் சுற்றி அலைந்த காலகட்டத்தைப் பற்றிய பகுதி கண்ணில் பட்டது. படிக்க ஆரம்பித்தேன். நூலில் காணப்பட்ட அதீத வர்ணனை எரிச்சலூட்டுவதாக இருந்தது. நூலாசிரியரின் எழுத்து நடையை என்னால் ரசிக்க முடியவில்லை.

  swami vivekananda - 2

  இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தேன்.

  புத்தகத்தைப் படிக்க வேண்டாம் என முடிவு செய்ததற்கு இன்னொரு முக்கியமான காரணமும் உண்டு. நூலாசிரியர், ஸ்வாமி விவேகானந்தரை தெய்வத்துக்கு இணையாக வர்ணித்திருந்த விதம் எனக்கு ஏற்புடையதாக இல்லை என்பதுதான் அந்த மிக முக்கியமான காரணம்.

  என்னைப் பொறுத்த வரை, ‘ஸ்வாமிஜி ஓர் அவதார புருஷராக இருக்கலாம். ஆனாலும், அவர் ஓர் உதாரண புருஷர். என்னைப் போன்ற லட்சக்கணக்கான சாமானிய மனிதர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். நல்ல வழிகாட்டி. என்னைப் போன்றவர்கள் அவரைப் பின்பற்றி நடந்தால் வாழ்வில் மேம்பட்ட மனிதர்களாக வாழலாம்.’

  ஆனால், இந்த நூலாசிரியரின் பார்வையில் அவர் மாபெரும் அவதாரம். இந்தப் புத்தகத்தைப் படித்தால், தெய்வமே பூமியில் ஸ்வாமிஜி வடிவத்தில் மனிதக் கால்களுடன் நடமாடியது என்ற உணர்வு என் மனதில் விதைக்கப்படும். பின்னர் ஸ்வாமிஜியை எங்கோ தொலைதூரத்தில் இருப்பவராக என் மனம் கருத ஆரம்பித்து விடும். ஸ்வாமிஜி எனக்கு அன்னியமாகி விடுவார். எனக்கு எட்டாத தொலைவில், மிக உயரத்தில் இருக்கும் ஒரு மாபெரும் தெய்விக புருஷரை நான் எவ்வாறு எனது வாழ்க்கையின் வழிகாட்டியாகக் கருத முடியும்?

  இந்தக் காரணத்தால் நான் அந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டாம் என்று முடிவெடுத்தேன். அதே நேரத்தில் இந்தப் புத்தகத்தைப் பற்றி என்னிடம் உயர்வாகக் கூறிய நண்பர் இருளப்பன், ரா. கணபதி என்னும் இந்த நூலாசிரியர் பெரிய ஆன்மிக எழுத்தாளர் என்றும், அவர் நிறைய ஆன்மிக நூல்கள் எழுதியுள்ளார் என்றும் குறிப்பிட்டிருந்தார். இத்தகைய ஆன்மிக எழுத்தாளர்கள் மீது எனக்கு எரிச்சல் ஏற்பட்டது.

  சாதாரண நாலாந்தர எழுத்தாளர்கள் கூட எளிமையாக, சுவையாக, படிப்பவர்கள் ரசித்துப் படித்துப் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதுகிறார்கள். ஆனால், தரமான, நல்ல விஷயங்களை எழுதும் இந்த ரா. கணபதி போன்ற ஆன்மிக எழுத்தாளர்கள் ஏன் வாசிப்பதற்குக் கடினமான மொழிநடையில் எழுத வேண்டும் என்ற கேள்வி எனக்குள் பூதாகாரமாக எழுந்தது.

  அதிலும், பத்திரிகை ஆசிரியராகப் பொறுப்பேற்கப் போகிறவன் என்பதால், இதுபோன்ற எழுத்தாளர்களின் எழுத்தில் இருக்கும் குறைகளைச் சரி செய்யும் தார்மிகக் கடமை எனக்கு இருப்பதாகவும் நினைத்தேன். எனவே, சென்னைக்குப் போய் விஜயபாரதம் ஆசிரியராகப் பொறுப்பேற்ற பின்னர், நேரம் கிடைக்கும்போது, இந்த ரா. கணபதி என்ற எழுத்தாளரைப் பார்த்து அவரிடம் எனது வருத்தத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும் நினைத்தேன்.

  எனினும், அந்த எழுத்தாளரையும், அவர் எழுதிய (நான் படிக்க விரும்பாத – அதனால் படிக்காத) ஸ்வாமி விவேகானந்தர் புத்தகத்தையும் காலப்போக்கில் மறந்தே போய் விட்டேன்.

  நான் சென்னை வந்த சூட்டிலேயே விஜயபாரதத்துக்கு ஶ்ரீ நம்பி நாராயணன் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இதனால், ஆர்எஸ்எஸ்.,ஸின் புத்தக வெளியீடுகளைக் கவனிக்கும் பணி எனக்கு வழங்கப்பட்டது.

  இந்தக் காலகட்டத்தில், அந்த ரா. கணபதி என்ற எழுத்தாளருக்கு விஜில் அமைப்பு சார்பில் விருது வழங்கப்பட்டது. அந்த விருது அவருக்கு வழங்கப்பட்ட செய்தி விஜயபாரதத்தில் நிச்சயம் வெளியாகி இருக்கும். எனினும், நான் விஜயபாரதம் ஆசிரியரோ அல்லது ப்ரூஃப் ரீடரோ இல்லை. எனவே, விஜயபாரதம் வாசித்தே ஆக வேண்டிய நிர்ப்பந்தம் எனக்குக் கிடையாது. விருப்பம் இருந்தால் படிப்பேன். சில இதழ்கள் படிக்காமல் இருந்ததும் உண்டு. இதனால், அந்த எழுத்தாளருக்கு ஆர்எஸ்எஸ்.,ஸின் பரிவார் இயக்கமாகிய விஜில் அமைப்பு விருது வழங்கி கௌரவித்த செய்தியும் எனக்குத் தெரியாமல் போய்விட்டது.


  இதற்குச் சுமார் ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் எனது வியாபாரத்துக்காகப் புத்தக ஆர்டர்கள் கேட்டு நான் அதே ரா.கணபதி என்ற எழுத்தாளரிடம் சென்றதும், அவரைச் சுற்றி இருந்த எல்லோரையும் போலவே நானும் அவரை அண்ணா என்று அழைக்க ஆரம்பித்ததும், படிப்படியாக அவர் மீது மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டதும், விரைவிலேயே அவருக்கு மிகவும் நெருக்கமாக ஆனதும் யதேச்சையாக நடந்த சம்பவங்கள் என்று நான் முதலில் நினைத்திருந்தேன். ஆனால், இவை அனைத்தும் அண்ணாவின் சங்கல்பமே என்பது நீண்ட நாட்களுக்குப் பின்னர் எனக்குப் புரிந்தது. அண்ணாவின் வார்த்தைகளில் சொல்வதானால், ‘‘புரிய வைக்கப்பட்டது’’.


  இந்தக் காலகட்டத்தில் யதேச்சையாக நண்பர் ஒருவரது அலுவலகத்தில் ஸ்வாமி விவேகானந்தர் புத்தகத்தைப் பார்க்க நேரிட்டது. பழைய நினைவுகள் மனதில் அலையடித்தன. அண்ணாவை மதிப்பிடும் அளவு எனக்கு மமதை இருந்தது என்ற எண்ணம் எனக்கு அருவருப்பைத் தந்தது. மனதில் குற்ற உணர்ச்சி தலை தூக்கியது. கண்களில் நீர் திரண்டது.

  அங்கிருந்து நேராக ராமகிருஷ்ணா மடம் சென்று ஸ்வாமி விவேகானந்தர் புத்தகப் பிரதி ஒன்றை வாங்கினேன். ஒரே மூச்சில் படித்து முடித்தேன். இப்போது அந்த நூலின் மொழிநடை எனக்கு அன்னியமாகத் தெரியவில்லை. மாறாக, பிரமிப்பையே தந்தது. புத்தகம் மாறவில்லை, மாற்றம் என்னிடம் தான் என்பது புரிந்தது.

  Ra Ganapathy - 3

  அடுத்த முறை அண்ணாவைப் பார்க்கச் சென்றிருந்த போது பழைய நினைவுகளைப் பற்றி அவரிடம் தகவல் தெரிவித்தேன். அந்த நாட்களில் அண்ணா திருவான்மியூரில் அவருக்காகப் பிரத்தியேகமாகக் கட்டப்பட்டிருந்த மாடி அறை ஒன்றில் தங்கி இருந்தார். மாலையில் மருந்தீஸ்வரர் கோவிலுக்குச் செல்வது அவரது அந்நாளைய வழக்கம். அன்றும் அதேபோல கோவிலுக்குச் செல்வதற்காக வெளியே வந்தார். படி இறங்கும்போது நான் அவரிடம் இந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்டேன்.

  அண்ணா அதைப் புன்முறுவலுடன் கேட்டுக் கொண்டார். நான் சொல்லி முடித்ததும், ‘‘பரவாயில்லையே! என்னைப் பத்தி ரொம்ப உசத்தியா தான் நினைச்சிருக்கே’’ என்று சொல்லி, அவரது உறவினர் ஒருவரைப் பற்றிக் குறிப்பிட்டார்.

  அந்த உறவினரின் பெயர் தற்போது எனக்கு நினைவு இல்லை. ‘‘அண்ணா, உங்க புத்தகத்துக்குள்ளே தக்ஷிணை (பணம்) வச்சு ரோட்டில தூக்கிப் போட்டாலும் ஒருத்தனும் சீந்த மாட்டான்-னு அவன் சொல்லுவான். நீயானா பரவாயில்லை. என்னைப் பத்தி அவ்ளோ மட்டமா நினைக்கலை. பெருமையாத்தான் நினைச்சிருக்கே’’ என்று சொன்னார்.

  அண்ணா சொன்னதைக் கேட்டு எனக்கும் சிரிப்பு வந்தது. பெரிதாகச் சிரித்தேன். ஆனால், இப்போது, உணர்ச்சி மேலீட்டால், இந்தப் பகுதியை டைப் பண்ணக் கூட முடியாமல் தடுமாறுகிறேன். இதற்குக் காரணம் அண்ணாவின் ஞானமோ, அவரே வலிந்தும் விரும்பியும் ஏற்ற எளிமையோ, சாமானியர்களால் கடைப்பிடிக்கவே முடியாத அவரது உபவாசப் பழக்கமோ, அவரது மௌன விரதமோ, இடைவிடாத மந்திர ஜபமோ, இதுபோன்ற எதுவுமே இல்லை. மாறாக, என்னைப் போன்ற ஓர் அல்பனைத் தன்னுடன் வைத்திருந்தாரே என்கிற எண்ணமும் அதனால் ஏற்படுகிற உணர்ச்சியும்தான் காரணம்.

  ஶ்ரீ கண்ணன் என்பவர் அண்ணாவின் ஒண்ணு விட்ட தம்பியரில் ஒருவர். அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சி வீடியோக்களைப் பார்த்தவுடன் அவர் எனக்கு ஒரு மெயில் அனுப்பி இருந்தார். அதில், ‘‘It’s highly impossible not to become emotional when hearing about Anna.’’ என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

  ஆம், அண்ணாவைப் பற்றிக் கேட்கும்போது மட்டுமல்ல, அவரைப் பற்றி நினைக்கும் போதும் மனதில் உணர்ச்சி பொங்குவதைத் தவிர்க்க முடியவில்லை.

  –தொடரும்…

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,139FansLike
  368FollowersFollow
  40FollowersFollow
  74FollowersFollow
  1,587FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-