
-தென்காசி கணேசன்
பொதுவாக உலகில், வறுமையில் உள்ளவன், வாடுபவன், பிறரிடம் கை ஏந்துவது வழக்கம். ஆனால் எல்லாம் பெற்றிருந்த, பெற்றிருக்கும் ஒருவன், பிறரிடம் கை ஏந்துவது எவ்வளவு துயரமானது? அவலமானது! நம் தேசம் பெற்றிருக்கும், கலாச்சாரம், பண்பாடு, கலைச் செல்வங்கள், பொக்கிஷங்கள், வேதங்கள் இரண்டு செம்மொழிகள் (ஸம்ஸ்க்ருதம் மற்றும் தமிழ்) , அறிவியலே அதிசயப்படும் கட்டிடங்கள், இலக்கியங்கள், வாழ்க்கைக்கு வேண்டிய கல்வி முதல் காதல் வரை சாஸ்திரங்கள் என அனைத்தும் பெற்றிருந்தும், நம் தேசத்தின் நிலையைப் பாருங்கள்!
படையெடுத்து அழித்து, அடிமையாக்கி பண்பாட்டைக் கெடுத்தது ஒரு புறம் – கல்வியைக் கொண்டு வருகிறேன் என்று நம் குருகுலம், நம் வாழ்க்கை நெறிமுறைகள் அத்தனையும் அழித்து நம்மை அடிமைப்படுத்தி ஆண்டது ஒரு புறம் – விடுதலை என்ற ஒன்றைப் பெற்ற போதாவது, எல்லைகள் முதல், நம் பாரம்பரியம் எப்படி இருக்க வேண்டும் என்று ஏதாவது பேசி விவாதித்து முடிவு எடுத்தோமோ!
ஆனந்த சுதந்திரம் தான் – வெள்ளைக்காரன் வெளியில் போனான் – மழை விட்டும் தூவானம் விடவில்லை, நம் பெருமைகள் காப்பாற்றப்படவில்லை. அரசியல் இங்கே வேண்டாம் – ஆனால் அவலங்கள் தொடரக் கூடாது அல்லவா!
தமிழைப் போலவே, செம்மொழி, வடமொழி எனப்படும் ஸம்ஸ்க்ருதம். வடமொழி என்றால் வடக்கில் பேசப்படுவது அல்ல. நன்றாக வடிவமைக்கப்பட்ட மொழி என்பதே இதன் பொருள், ஸம்யக்+க்ருதம் = நன்கு செய்யப்பட்டது – சமைக்கப்பட்டது. சமைத்தல் என்றால் பருக, படிக்கத் தயாராக இருத்தல் என்றே பொருள். சமையலில் அரிசி நன்கு சமைக்கப்பட்டால் தான் சாதமாக மாறி சாப்பிட முடியும். பெண், சமைந்தால் (பருவத்துக்கு வந்து விட்டால்) அவள் திருமணத்திற்குத் தயாராகி விட்டாள் என்று அர்த்தம்.
எனவே மக்கள் நல்வழிப்படுத்த சமையப்படுவதால் தான் சமயம்! (இன்றோ அரசியல் வாதிகளின் சமயத்திற்கேற்ப பேசும் பொருள் ஆகிவிட்டது). அர்த்தமுள்ள தமிழ் வார்த்தைகள், ஸம்ஸ்க்ருத வார்த்தைகள் எதையுமே கற்றுக் கொள்ள யாருக்குமே நேரமில்லை!
நம் இலக்கியங்களை, மூன்றாம் நூற்றாண்டிலிருந்து வெளிநாட்டினர் பலர் எடுத்துக் கொண்டு போயிருக்கிறார்கள். வேதங்கள், கீதை, திருக்குறள், சாத்திரங்கள் எனப் பல, வெவ்வேறு நாட்டினரால் எடுத்துச் செல்லப்பட்டு, மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. யுவான் சுவாங், இலக்கியங்களைத் திரட்டி தன் நாட்டிற்கு எடுத்துச் செல்லும் போது, படகு இவ்வளவு பாரம் தாங்காது என்று கூறப்பட்டவுடன், அவன் சொன்ன பதில் என்ன தெரியுமா? எந்த ஒரு மூட்டையையும் இறக்க வேண்டாம். நான் இறங்கிக் கொள்கிறேன்.
முடிந்தால் நீந்தி வருகிறேன். இல்லையெனில் இந்த ஏடுகளை எல்லாம் நம் தேசத்திற்கு கொண்டு போய்ச் சேர்த்து விடு. என்னைவிட இவையே முக்கியம் என்றாராம். இது குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், வாசிப்பு பற்றி விகடனில் எழுதிய கட்டுரையின் பகுதி! எப்படி இருந்த நாம் இப்படி ஆகி விட்டோமோ என்ற எண்ணம் வர வேண்டாமா!
அமெரிக்காவை, பிரிட்டிஷ் அரசு அடிமைப்படுத்தி வைத்திருந்தபோது, யாருக்குமே சுதந்திரம் பற்றிய உணர்வே வரவில்லையாம். நமக்குச் சாப்பாடு கிடைக்கிறது. உயிருடன் இருக்கிறோம் என்றே இருந்தார்களாம்.

ஒரே ஒரு எழுத்தாளன், போராளி, 32 பக்கம் மட்டுமே எழுதிய சிறு புத்தகத்தை, அமெரிக்க மக்களிடம் கொண்டுச் சேர்த்தான். ஜார்ஜ் வாஷிங்க்டன் போன்ற ஒரு சிலரின் மண்டையில் அந்த உணர்வு எழுந்தது. அப்படித் தோன்றியதுதான் அமெரிக்க விடுதலைப்போர்!
பகவத் கீதையின் போர்முறைத் தந்திரங்கள், கூறுகள் இவற்றைப் பார்த்துத்தான் ஜெர்மனியும், இஸ்ரேலும் ராணுவத்தை வடிவமைக்கிறது – போருக்கு அடித்தளம் அமைக்கிறது என்கிறது வரலாறு. 5000 வருடங்களுக்கு முன் Imagination – எங்கோ நடக்கும் யுத்தம் – இந்தப் பக்கம் நேர்முக வர்ணனையாக; அஸ்திரம் சென்று முடியும் போது எரி நெருப்பாக – இவை எல்லாம் எப்படி சாத்தியமானது!
மணிவாசகர் பாடுவார் – முன்னைப்பழம் பொருட்கும் முன்னைப்பழம் பொருளே பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் இப்பெற்றியனே என்று! சிவன் பழமைக்கெல்லாம் பழமையானவன், புதுமைக்கெல்லாம் புதுமையானவன். நாம் தான் நமது பொக்கிஷத்தைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம்.
அப்படி ஒன்று தான் சம்ஸ்க்ருதம்!
தமிழ் நாட்டைத் தவிர எல்லா மாநிலங்களிலும் படிக்கிறார்கள், பேசுகிறார்கள்; மொழிமீது அவர்களுக்கு வெறுப்பும் இல்லை; விரோதமும் இல்லை; JK எழுதுவார் – மொழிப்பற்று என்பதை, குரோதமாக்கியது 60 வருட தமிழக அரசியல் என்பார். அத்தனைத் தமிழ் எழுத்தாளர்களும் பாரதி தொட்டு, வையாபுரிபிள்ளை, குமரகுருபரர், வீரமாமுனிவர் என்று எல்லோருமே தமிழ், ஸம்ஸ்க்ருதம் இரண்டிலும் புலமை பெற்றிருக்கிறார்கள். கம்பன் மட்டுமல்ல, இரட்சணிய யாத்ரிகம் எழுதிய H.A கிருஷ்ணப்பிள்ளை, வைணவராயிருந்து கிருஸ்தவராக மாற்றப்பட்டவர். உமறுப்புலவரும் எட்டயபுரம் ஸமஸ்தானத்துக் கவி – மதம் மாறியவர்!
சங்கரர், ராமானுஜர் போன்ற தென்னகத்தில் தோன்றிய ஞானிகள் ஏன் வடமொழியை எழுதிக் கொண்டார்கள். அன்று தேசம் முழுவதும் பேசப்பட்ட மொழி அதுவே. நமது நாட்டில் 1967 வரை புலவர் பட்டம் பெற வேண்டும் என்றால் இரண்டு மொழிகளிலும் புலமை இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. பின்னால் அது நீக்கப்பட்டது – பாடத்திட்டத்திலிருந்து நீதி போன்றவைகளும் நீக்கப்பட்டது.
இதைத் திரு. இல கணேசன் திரு. தமிழருவி மணியன், திரு. சோ பொன்ற பல அறிவு நிறைப் பெருமக்கள் கூறியிருக்கிறார்கள். காளிதாசன், பவபூதி, பாணினி போன்ற பல சான்றோர்கள் சம்ஸ்கிருதத்தில் அற்புத படைப்புக்களைக் தந்துள்ளார்கள். தமிழ்மொழிபோல், சம்ஸ்க்ருதத்திலும் பல பெருமைகள் உண்டு என்பார்கள். சொல்லை வைத்தே, ‘பால்’ எது (Gender) இலக்கணம் காணலாம் என்பார்கள்.

சந்திரன் – ஆண்பால் (புல்லிங்கம்)
சசி – பெண்பால் (ஸ்த்ரிலிங்கம்)
ஜ்யோத்ஸ்னா – மூன்றாம் பால் ( நபும்ஸகலிங்கம்)
மூன்றும் நிலவைக் குறிக்கும் சொல். ஆனால் சொல்லை வைத்தே, பால் எது என்பதைக் கண்டு பிடித்து விடலாம். மாற்ற வேண்டிய அவசியமில்லை. இது ஒரு சிறு உதாரணம்.
உலகின் மொழிகளில் அதிக வார்த்தைகள் கொண்ட மொழி என்கிறார்கள். மிகக் குறைந்த வார்த்தைகள் கொண்ட வாக்கியம் அமைப்பதில் ஸம்ஸ்க்ருதமே முன் மொழி என்கிறது ஆய்வு. அமெரிக்காவில், NASA வில் பயன்பாட்டில் உள்ளது. NASA – வில் 60 ஆயிரம் ஓலைச்சுவடிகள் உள்ளதாம். இந்திய நாட்டில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சி மொழி ஸம்ஸ்க்ருதம். ஹிந்துயிசம் தவிர புத்திசம், ஜைனிசம், இரண்டுமே ஸம்ஸ்க்ருத மொழிப் பயன்பாடுகள்தான்.
பல மாநிலங்கள், பல கிராமங்கள், சம்ஸ்க்ருதம் பேசும் பகுதிகளாக மாறிவருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மத்தூர், திருவனந்தபுரத்தில் உள்ள கரமனை – இங்கு தினசரி வாழ்க்கையே ஸமஸ்கிருத உரையாடலில்தான் நடக்கிறது. 5000 வருடங்களுக்கும் முற்பட்ட ஒரு மொழி இன்றும் அப்படியே மாறாமல் இருப்பதுடன், அதன் வாழ்வியல் கருத்துக்கள் – ராமாயணம், மஹாபாரதம், பகவத் கீதை, சுபாஷிதங்கள் காளிதாசனின் காவியங்கள் என எக்காலத்திற்கும் பொருந்தும்படியாக இருப்பதே, நம் தேசத்தின் மிகப்பெரிய கொடை என்றால் மிகை ஆகாது.
ஆலயங்களில் ஸம்ஸ்க்ருதம், தமிழ் இரண்டிற்குமே உயர்ந்த இடம் கொடுக்கப்பட்டுள்ளது. தேவாரம், திருவாசகம், பல்லாண்டு இவை பாடிய பிறகு, வேத மந்திரங்களே ஓதப்படுகின்றன. “பைந்தமிழ் பின் செல்கிற பச்சைப் பசுங் கொண்டலே” என்கிறார் குமரகுருபரர்.
வடமொழியும், தென்மொழியும் ஆனாய் போற்றி என்கிறார் திருநாவுக்கரசர், திருத்தாண்டகத்தில். மேலும், தேவாரத்தில், கேதாரம் மேவினார் – கேதீவரம் அமர்ந்தூரே என்கிறார். அதாவது, இமயம் தொட்டு இலங்கை (யாழ்ப்பாணம்) வரை ஆண்டவனும், மொழியும் ஒன்றே என்கிறது.
திருப்பள்ளியெழுச்சியில், மணிவாசகர், நான்காவது பாடலில், இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் – இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால், அதாவது, ரிக் வேதம் ஓதினார்கள் என்கிறார்.
திருமூலர் கூறுகிறார் – வேதத்தில் கூறப்படாத, விடுபட்ட நீதிகளே கிடையாது என்று. வேதமும், ஆகம விரிவுகள் அனைத்தும் ஓத நின்று என்பார் ராமலிங்க ஸ்வாமிகள். வேதம் இலக்கியம் என்றால் ஆகமம் இலக்கணம் ஆகின்றது. அதனால் தான் விவேகானந்தர் அனைவரையும் ஸம்ஸ்க்ருதம் படித்தே ஆகவேண்டும் என்கிறார். 2012 ம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வில், பேராசிரியர் சாலமன் பாப்பையா கூறினார்.

நான் படித்த காலம், மொழிகளின் மீது வெறுப்பை உமிழ்ந்தகாலம். என்னால், ஸம்ஸ்க்ருதம், ஹிந்தி கற்க முடியாமல் போனது. இரண்டு மொழிகளும் இந்தியனுக்குக் கண்கள் போன்றவை. கற்றுக் கொள்ள முடியாமல் போனதைப் பேரிழப்பு என்று பதிவு செய்கிறார். மேலும் கூறினார் – தொல்காப்பியருக்கு முன்பே வடமொழி இருந்திருக்கிறது, அதனால்தான், வடஎழுத்து நீக்கி வருவது சொல் (ஸ், ஷா போன்ற எழுத்துக்கள்) என்று இலக்கண சூத்திரம் கூறுகிறது.
மொழிப்பற்று வேண்டும்; ஆனால் மொழித்துவேஷம் கூடவே கூடாது. பிறநாட்டுச் சாத்திரங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்றானே பல்மொழிகள் அறிந்த பாரதி. இலத்தின் உட்பட 13 மொழிகள் அறிந்த வ. வே. சு. ஐயர், தமிழில் மட்டுமே பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். தமிழ் என்று எழுதினால் மட்டும் தமிழ் வளராது. மொழியைப் போற்றிப் எல்லோரும் பேசும் நிலையை உருவாக்க வேண்டும்! அரசியல் அறவே கூடாது, ரிக்வேதம் அதைத்தான் “आ नो भद्राः क्रतवो यन्तु विश्वतः” என்று கூறுகிறது.
செம்மொழிகள் இரண்டு இந்த தேசத்திற்கு கிடைத்திருப்பது இந்தியா செய்த வரம். மொழிகளைக் கற்போம்! நிரந்தரமாகக் தெரிந்து கொண்டு மனத்தை விரிவு படுத்துவோம்! தேசத்தைப் போற்றுவோம்!
வேதங்கள் மற்றும் ஆயுர்வேத மந்திரங்களால் எனக்கு என்ன பயன் என்று பலர் இன்று கேட்கிறார்கள். அதற்கு, திரு. R. L. காஷ்யப், தனது “சாந்தி மந்திரங்கள்” போன்ற சிறு புத்தகங்கள் மூலம் அற்புதமான, எல்லோரும் ஒத்துக் கொள்ளும்படியான, ஆதாரங்களுடன், அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள். அவர் மேலும் கூறுகிறார். இந்த மந்திரங்கள் இல்லாத துறைகளே இல்லை எனலாம்.
ஆரோக்யம் – நோய் தீர்க்கும் முறைகள்
பேச்சில் நல் இணக்கம்
பிரச்சனைகளுக்கு ஆக்கப்பூர்வ தீர்வுகள்
ஆரோக்யத்துடன், ஆயுள்.
மனோசக்தி தொடங்கி, அக்னி சக்தி, இயற்கை சக்தி,
ஜீவ சக்தி எனத் தொடங்குகிறார்.
ருதம் வதிஷ்யாமி – ஸத்யம் வதிஷ்யாமி – எப்போதும் நேர்மை, உண்மையையேப் பேசுவேன். அந்த செயல் என்னையும், என் ஆசிரியரையும் காப்பாற்றட்டும். அதே போல் யோபாம் புஷ்பம் வேதா என்ற வரிகள், தண்ணீரை, அதன் பெருமையைப் போற்றி கூறி உலகத்தை காப்பாற்றட்டும். இப்படி நாம் வாழ்வற்குத் தேவையான வழிமுறைகள் எல்லாம் நமது வேதங்களிலும், இலக்கியங்களிலும் இருக்கிறது.



