October 22, 2021, 2:03 am
More

  ARTICLE - SECTIONS

  சுதந்திர தின 75ஆம் ஆண்டில்! எல்லோரும் கொண்டாடுவோம்!

  ஒரு கால கட்டத்தில் மதுரை மக்கள், இது நடக்காது என்று முடிவு செய்து விட்டு, கோவில் கோபுரத்தை அண்ணார்ந்து பார்ப்பதையும் நிறுத்தி விட்டனர்.

  freedom 75
  freedom 75

  நமது நாட்டில் ஒவ்வொரு மதத்தினரும், தங்களுடைய பண்டிகைகளை சிறப்பாக கொண்டாடுவது தொன்று தொட்டு வரும் பழக்கம். இஸ்லாமியர்கள் அனைவரும் ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளை சிறப்பாக கொண்டாடுவதும், கிறிஸ்தவர்கள் அனைவரும் கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவதும், இந்துக்கள் அனைவரும் தீபாவளி, பொங்கல் என பல பண்டிகைகளை, சிறப்பாக கொண்டாடுவதும், இயல்பான ஒன்று.

  இவர்களைப் போலவே சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள் என ஒவ்வொருவரும் தங்களுடைய பண்டிகை நாள் அன்று, புத்தாடை அணிந்து, இனிப்பு வகைகள் உண்டு, மகிழ்ச்சியாக பண்டிகைகளை கொண்டாடுவார்கள்.

  சாதி கடந்து, மதம் கடந்து, மொழி கடந்து, இனம் கடந்து, இந்த நாட்டில் பிறந்த அனைவரும் ஒரு சேர கொண்டாட வேண்டிய நிகழ்வு எனில், அது நமது இந்தியாவின் “சுதந்திர தின விழா”.
  ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 15 அன்று, சுதந்திர தினத்தை, மக்கள் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டிய பண்டிகை என்றால், அது மிகை அல்ல.

  75 வது சுதந்திர தினம் ஆண்டைக் கொண்டாடத் தயாராகும் இந்த தருணத்தில், பலர் செய்த தியாகத்தை, நாம் நினைவு கூர்ந்து, நமக்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களின் சிறப்புகளை நினைவுப் படுத்திக் கொண்டு, நாம் நம்முடைய அடுத்த சந்ததியினருக்கு, அவசியம் தெரியப் படுத்த வேண்டும்.
  அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த தீரர் மாயாண்டி சேர்வை:
  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தில் குறிப்பிட்ட தேதியில், “மூவர்ண இந்திய தேசியக் கொடி”யை ஏற்றியே தீருவேன் என, ஆங்கிலேயருக்கு சவால் விட்டார், மாயாண்டி சேர்வை.

  the first indian freedom fighter king pulithevar
  the first indian freedom fighter king pulithevar

  மதுரை நகரில் நன்கு அறியப் பட்டவர் என்பதாலும், நிறைய சம்பவங்களை செய்து காட்டியவர் என்பதாலும், அவரது போர் குணத்தை நன்கு அறிந்திருந்த ஆங்கிலேய போலீசார், அவரை கைது செய்வதில் மிகவும் தீவிரம் காட்டினர். பாரம்பரிய சிறப்பு மிக்க மதுரை நகரில், ஏதாவது சம்பவம் நிகழ்த்தப் பட்டால், அது மொத்த இந்தியா முழுவதும் பேசப்படும் நிலை இருந்ததால், ஆங்கிலேய அரசுக்கு, அது பெரும் தலை குனிவாக இருக்கும் என்று கருதிய போலீசார், தங்களது நடவடிக்கைகளை தீவிரப் படுத்தினர்.

  அன்றைய தினங்களில், மதுரை மாநகர் முழுவதும் பரபரப்புடன் காணப் பட்டது. எப்படியேனும் மாயாண்டி சேர்வையை பிடித்தே தீருவது, என நகரின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் நுழைந்து, போலீசார் தீவிரமாக தேடுதல் வேட்டையை நிகழ்த்தி வந்தனர்.

  ஆனால், மாயாண்டி சேர்வையோ வேறு விதமான அதிரடி திட்டத்துடன் செயல்பட்டு இருந்தார். போலீசார், மாயாண்டி சேர்வையை மற்ற இடங்களில் சல்லடை போட்டு தேடி அலைந்து கொண்டிருக்க, அவரோ “மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின்” வடக்கு கோபுரத்தில், சொன்ன தேதிக்கு பத்து நாட்கள் முன்பே ஏறி விட்டார்.

  Muthuramalinga Thevar Jayanthi and Gurupooja started
  Muthuramalinga Thevar Jayanthi and Gurupooja started

  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வடக்கு கோபுரத்தில், ஒவ்வொரு நிலைக்கும் இடையில் உள்ள சிறிய இடைவெளியில், அறை போன்ற பகுதி இருக்கும். அதில் ஏறிய மாயாண்டி சேர்வை, கடைசி நிலையில் உள்ள அந்த அறையில் தங்கி விட்டார்.
  பத்து நாட்களுக்கு முன்பே கோபுரத்தில் ஏறி விட்ட நிலையில், மனிதன் வாழ்வதற்கு உண்ண வேண்டும் என்பதால் பத்து நாட்கள் எப்படி தாக்குப் பிடிப்பது என்பதை அறிந்திருந்த மாயாண்டி சேர்வை, கை நிறைய நிலக் கடலையையும், சிறிய பாத்திரத்தில் தண்ணீரையும் எடுத்துக் கொண்டு, கோபுரத்தில் ஏறி, இடையில் உள்ள அறையில் தங்கிக் கொண்டார்.

  மாயாண்டி சேர்வையை பிடிக்க ஆங்கிலேய போலீசார், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் அனைத்து பாதைகளையும் அடைத்து, தீவிர சோதனைகளுக்கு உள்ளாக்கியும், மதுரையின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் தேடிக் கொண்டிருக்க, அவரோ கோவில் கோபுரத்தில், ரகசியமாக தங்கி விட்டார்.

  இந்த நிலையில் பத்து நாட்களுக்கு முன்பாகவே, கோபுரத்தில் மாயாண்டி சேர்வை ஏறி விட்டதால், எடுத்து வந்த கடலை சில நாட்களில் தீர்ந்து விடவே, மீதியுள்ள நாட்களை பட்டினியோடே கழித்து இருக்கிறார்.

  சாப்பாடு இல்லாமல் கூட சமாளித்து விடலாம், ஆனால், தண்ணீர் இல்லாமல், நீண்ட நாட்கள் கடத்துவது என்பது இயலாத காரியம். அதே போல், தண்ணீர் இரண்டொரு நாளில் தீர்ந்து விடவே, நீருக்காக தனது சிறுநீரையே, தான் கொண்டு வந்த பாத்திரத்தில், பிடித்து குடித்து வந்துள்ளார்.

  தீவிரமான களைப்பு மேலிட்டாலும், மாயாண்டி சேர்வையின் சுதந்திர தாகம் மட்டும் தீராத நிலையில், பசியோடும், தாகத்தோடும், களைப்போடும், கோவில் கோபுரத்திலேயே அவர் காத்து இருந்தார்.

  ஆங்கிலேய போலீசாரின் தீவிர கண்காணிப்பையும் மீறி, பத்து நாட்களுக்கும் மேலாக, மாயாண்டி சேர்வை பற்றிய தகவல் ஏதும் இல்லாத போது, மதுரை மக்கள் தீரர் மாயாண்டி சேர்வை தனது சபதத்தில் தோற்று விட்டாரோ? என்று அதிர்ச்சியுற்றிருந்தனர்.

  அதே சமயம், கோவில் வழியாக சென்ற மதுரை மக்கள், கோவில் கோபுரத்தில் “இந்திய தேசியக் கொடி” தெரிகிறதா என்று ஏக்கமுடன் இருந்தனர். அதனைப் பார்த்த போலீசார், மாயாண்டி சேர்வை தப்பி ஓடி விட்டார், அவர் ஒரு நாளும் கோவில் கோபுரத்தில் கொடியை ஏற்ற முடியாது எனக் கூறி மக்களைப் பார்த்து கேலி செய்தனர்.

  bharatamata
  bharatamata

  ஒரு கால கட்டத்தில் மதுரை மக்கள், இது நடக்காது என்று முடிவு செய்து விட்டு, கோவில் கோபுரத்தை அண்ணார்ந்து பார்ப்பதையும் நிறுத்தி விட்டனர்.

  ஆனால் மாயாண்டி சேர்வை அறிவித்த அந்த பத்தாவது நாளும் வந்தது. இந்த நாளோடு கதை முடிந்தது, மாயாண்டி சேர்வை தனது சபதத்தில் தோற்று விட்டார் என போலீசார் நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில், கோவிலின் வடக்கு கோபுரத்திலிருந்து திடிரென ஓர் குரல் ஓங்கி ஒலித்தது “வந்தேமாதரம் , பாரத் மாதா கி ஜே”, என்ற அந்த குரல், களைப்பையும் மீறி, ஓங்கி ஒலித்தது.
  குரல் வந்த திசையில் போலீசார் பார்த்தனர்.

  அங்கே வடக்கு கோபுரத்தின் உச்சியில், “இந்திய தேசியக் கொடி” தன்னாலே உயருகின்ற அதிசயத்தை அனைவரும் பார்த்தனர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களும், மதுரை மக்களும், இந்த அதிசய நிகழ்வைக் கண்ணார கண்டதுடன், சுற்றுப்புறத்தில் இருந்தோர், இதனை கேள்விப்பட்டு, ஓடி வந்து, கோவில் கோபுரத்தில் “இந்திய தேசியக் கொடி” பட்டொளி வீசி பறப்பதையும், பார்த்து மகிழ்ந்தனர்.

  அதே சமயம் அங்கிருந்தவர்கள் “வந்தே மாதரம்” என்று முழங்கிட, ஆங்கிலேய போலீசாரோ பெரும் அவமானத்தில் மூழ்கி அதிர்ச்சி அடைந்தனர். உயரமான கோபுரத்தின் உச்சியில், கொடி கட்டப்பட்டு இருந்தது என்பதால், உடனடியாக அந்த கொடியை அகற்ற போலீசாரால் முடியவில்லை.

  கொடியை கீழே இறக்கவும், மாயாண்டி சேர்வையை பிடிக்கவும், காவலர்கள் பலர் கோபுரத்தில் ஏறினர். ஆனால், பலமுறை ஆங்கிலேய போலீசாரை ஏமாற்றியிருந்த வித்தகரான மாயாண்டி சேர்வை, இந்த முறையும் பத்து நாட்கள் உண்ணாத களைப்பு இருந்தாலும், போலீசாரின் கைகளில் சிக்காமல், அவர் தப்பிப் பறந்து விட்டார்.

  தீரர் மாயாண்டி சேர்வை, தான் சொன்ன படியே மீனாட்சி அம்மன் கோவிலில் இந்திய தேசியக் கொடி ஏற்ற, ஆங்கிலேயர்களின் ஆணவம் இறக்கப் பட்டது. இங்கே ஜெயித்தது மாயாண்டி சேர்வை மட்டுமல்ல, சுதந்திர வேட்கையும் தான்.
  இவற்றைப் போல ஏராளமான சம்பவங்கள், தமிழகத்தில் தொடர்ந்து நடந்து உள்ளன.

  ஒவ்வொரு தேச பக்தரும், ஆங்கிலேயர்களை எதிர்த்து, நமது இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தான் போராடினார்களே தவிர, தனி ஒரு மாநில சுதந்திரத்திற்காக, யாரும் போராடவில்லை.

  கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், சிறையில் செக்கிழுத்த போது, “பாரத மாதாவின் திருத்தேரை இழுத்தேன்” என கூறினார்.

  “சேதமில்லாத ஹிந்துஸ்தானம், இதைத் தெய்வமென்று கும்பிடடி பாப்பா” என பாரதியார் கூறினார்.

  நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள், நாட்டின் ஒற்றுமையை, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், வாய்ப்புக் கிடைக்கும் எல்லா நேரங்களிலும், உணர்த்தி வந்தனர்.

  பிரிவினை வாதம் பேசுபவர்கள், “தமிழகம் வேறு, இந்தியா வேறு”, எனத் தொடர்ந்து கூறிக் கொண்டு வருகின்றனர். நமது நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவர்களில், எண்ணற்ற தமிழர்கள் உள்ளனர். என்றுமே தேச நலன் சார்ந்தே, தமிழர்கள் சிந்திப்பார்கள்.

  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அழைப்பை ஏற்று, தமிழகத்தைச் சேர்ந்த எண்ணற்ற தமிழர்கள், அவர் அமைத்த படையான ஐ.என்.ஏ. (INA – Indian National Army) வில் பங்கு கொண்டு, அவர்களின் வீரத்தைப் பார்த்து அறிந்த நேதாஜி அவர்கள், “அடுத்த பிறவி என இருந்தால், நான் ஒரு தமிழனாக பிறக்க ஆசைப் படுகிறேன்” என்று கூறினார்.

  இது போல்..எண்ணற்ற வீரர்களின்‌ தியாகத்தை நினைவு கூர்ந்து..
  அனைவரும் ஒற்றுமையாக சேர்ந்து கொண்டாடுவோம்..
  சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களை சொல்லி..
  அவர்கள் செய்த தியாகங்களை எண்ணி..நாம் 75 வது சுதந்திர தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்…

  • அ.ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,575FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-